பெரியார் வைக்கம் சென்றது:
சத்தியாகிரகிகளான குரூர் நீலகண்டன் நம்பூதிரி, ஜார்ஜ் ஜோசப், டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் அழைப்பின் பேரிலேயே பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். வந்த அழைப்புகளைத் தெளிவாகத் தேதிகளுடன் பெரியார் தெரிவித்துள்ளார். 'இந்த நிலைமையைத் தானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும்பொருட்டே நான் மேற்கண்ட சமாசாரத்தை வெளியிட்டேன்' எனப் பெரியாரே அச்சூழலை அறிவித்தார் (சுதேசமித்திரன், 15 ஏப்ரல் 1924).
தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டதால் தலைவர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது சத்தியாகிரகம். போராட்டத்தின் மூளையெனக் கருதப்பட்ட ஜார்ஜ் ஜோசப், காந்தியிடமும் இராஜாஜியிடமும் தலைவர்களை வேண்டினார். பெரியாரைத் தந்தி மூலமும் தூதுவர் மூலம் கடிதம் அனுப்பியும் வரவழைத்தார். இந்த இக்கட்டான சூழலில் தக்க நேரத்தில் சென்று சரிந்த போராட்டத்தைத் தாங்கிப் பிடித்தார் பெரியார். பெரியாரைத் தொடர்ந்து வரதராஜுலுவையும் வந்து பொறுப்பேற்க அழைத்தனர். பின்னர் எஸ். இராமநாதன் அப்பொறுப்பை வகித்தார். தமிழ்த் தலைவர்களிடம் கேரளக் காங்கிரசுக்காரர் வைத்திருந்த மதிப்பை இது காட்டுகிறது.
கேரள அழைப்பை ஏற்று பெரியார் வைக்கம் சென்றதற்குக் காரணம், அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு நோக்கம் தான். அடுத்தது, அவருக்கே உரிய போராட்ட குணம். மூன்றாவது, தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்தது. தானே தலைவராக இருந்ததால் யார் உத்தரவுக்கும் காத்திருக்காமல் அவரால் புறப்பட முடிந்தது. தலைவர் வேலையை இராஜாஜியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி எழுதி வைத்து விட்டு அவர் கிளம்பினார். பெரியார் 'சொந்த முறையிலேயே' என்று குறிப்பிடுவதற்குப் பொருள், யார் அனுமதிக்கும் காத்திருக்காமல், தன் முடிவில், விருப்பத்தில் கிளம்பினேன் என்பதே யாகும். Personal Capacity என்பதல்ல பொருள். காங்கிரசுக் கமிட்டித் தலைவர் என்ற அந்தஸ்திலேயே அவர் சென்றார். அதனால்தான் பெரியார், இரண்டாம் முறை கைதானபோது அறிக்கை வெளியிட்ட இராஜாஜி பெரியாரை 'நமது தலைவர்' என்றே குறித்தார். கட்சியின் பணம் ரூ. 1000 தலைவர் பெரியார் பொறுப்பிலேயே வைக்கம் சென்றது.
பெரியார் வைக்கம் போராட்டத்தைக் கட்சியின் ஒரு செயல்பாடாக மட்டும் பார்க்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உழைக்கக் கிடைத்த வாய்ப்பு என்றே கருதினார். இப்போராட்டத்துக்கு இராஜாஜி முதலில் முன்னுரிமை கொடுக்க விரும்பவில்லை. ஜார்ஜ் ஜோசப் தலைவர்களை அனுப்பக் கோரியபோது இராஜாஜியின் மறுப்பே அதற்கான சான்று. பெரியாரின் முன்னுரிமையைச் சுட்டவே இராஜாஜியைக் குறிப்பிட நேர்ந்தது. தவிர இராஜாஜியை விமர்சிப்பதல்ல இங்கு நோக்கம். முக்கியஸ்தர்களைக்கூட அனுப்ப மறுத்த இராஜாஜி பின்னர் தானே செல்ல நேர்ந்தது வேறு.
வைக்கத்தில் செயல்பாடு:
வைக்கம் சென்ற பெரியார் சத்தியாகிரகம் வெற்றி பெறப் பல வழிகளிலும் செயல்பட்டார். பிரசாரம் அவரது முதல் செயலாக இருந்தது. வைக்கம், சேர்த்தலை, ஆலப்புழை, திருவனந்தபுரம், நாகர்கோயில், தக்கலை, கொல்லம், செங்கணாச்சேரி முதலிய இடங்களில் அவர் பேசியதற்கான பத்திரிகை, அரசு ஆவணங்கள், காவல் துறை அறிக்கை ஆதாரங்கள் கிடைக்கின்றன. இதைத் தவிரவும் வைக்கத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பேசினார் என்று சொல்லப் பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம், சங்கரலிங்க நாடார் போன்றவர்களின் குறிப்புகள் பயன்படுகின்றன.
தீண்டாமை விலக்குக் குழு கூட்டத்திலும், சத்தியாகிரக ஆசிரமத்தில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார் (13 ஏப்ரல் 1924; 21 ஏப்ரல் 1924) என்பதற்கும், திவானையும் பிறரையும் கண்டு சமாதானம் பேச அமைக்கப்பட்ட குழுவில் பெரியாரைச் சேர்த்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.
சத்தியாகிரக ஆசிரமம் சார்பில் வைக்கம் தடைசெய்யப்பட்ட வீதியில் வழமையாக நடைபெற்றுவந்த முதன்மைச் சத்தியாகிரகத்திற்கும் பெரியார் தலைமை தாங்கினார் (14 ஏப்ரல் 1924; 22 ஏப்ரல் 1924). பண வசூலிலும் இறங்கியிருக்கிறார். சிறைக்குப் போவதற்கு முதல் நாள்கூட ரூ. 300 பெறுமான அரிசியை ஆசிரமத்துக்குக் கொச்சி வியாபாரிகளிடமிருந்து பெற்று வந்தார்.
இங்ஙனம் ஆசிரமத் தலைமைப் பொறுப்பு, பிரசாரம், ஆலோசனை, சத்தியாகிரக ஊர்வலத் தலைமை, பண வசூல் எனப் பலவிதங்களில் செயலாற்றிச் சத்தியாகிரகம் தொய்வடையாமல் பார்த்துக்கொண்டார். பெரியாரால் இயக்கம் புதிய உயிர் பெற்றது என வைக்கம் ஆவணங்கள் பறைசாற்றுகின்றன.
வைக்கம் பயணங்களும் சிறைவாசங்களும்
இதுவரை விவரிக்கப்பட்ட பெரியாரின் செயல்பாடுகள் அவரது பல பயணங்களின் விளைவுகள் ஆகும். பயணத்தின் விளைவுகள் செயல்பாடுகள் என்றால், தீவிரச் செயல்பாடுகளின் விளைவுகள் சிறைவாசம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பெரியாரின் வைக்கம் பயணங்களையும் சிறை வாசங்களையும் பின் வருமாறு தொகுத்துச் சொல்லலாம்.
(நூலின் பக்கம்:418-420)
(தொடரும்)
- விடுதலை நாளேடு 4.3.20
"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (6)
முதல் பயணம்
இப்பயணத்தில், பெரியார் ஏப்ரல் 13, 1924 அன்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு, திருச்சூர் வழியாகக் கொச்சியை அடைகிறார். அங்குத் தீண்டாமை விலக்குக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை கலந்துவிட்டு, அன்று இரவே வைக்கம் அடைகிறார். 14 காலை வந்தடைந்தார் என்றொரு கருத்தும் உண்டு (காலக்கண்ணாடி, ப. 21). 1924 ஏப்ரல் 13 இரவு முதல் மே 5 வரை வைக்கத்தில் சத்தியாகிரகத்தின் பல்வேறு பணிகளைக் கவனித்து வந்தார். ஆக முதல் பயணம் 22 நாள். இதற்கிடையில் ஏப்ரல் 29, 1924ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் பேசுவதற்குத் தடை வேறு விதிக்கப்பட்டது. தான் கைது செய்யப்படலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்த இந்த வைக்கம் முதல் பயணத்தில் அவர் கைதாகவில்லை.
இரண்டாவது பயணம்
மே 5ஆம் நாள் ஈரோடு திரும்பிய பெரியார், பத்து நாள் கழித்து மனைவி நாகம்மையுடன் மீண்டும் வைக்கம் வந்திறங்கினார். இந்த இரண்டாவது பயணம், மே 15 தொடங்கிக் கைதாகும் வரை நீடித்தது. சமஸ்தானத்தில் பேசுவதற்கான தடையை மீறியதால் மே 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மே 22 முதல் 29 வரை, ஏழு நாள் வைக்கம் காவல் நிலை யத்தில் வைக்கப்பட்டிருந்தார். பிறகு 29ஆம் தேதி இரவு ஆறுக்குட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டார். 1924 மே 22 முதல் ஜூன் 21 வரை ஒரு மாதம் சிறை யிருந்த அப்பயணத்தில் 15 முதல் 21 மே முடிய வெளியில் ஏழு நாள்களையும், மே 22 முதல் ஜூன் 21 முடிய சிறையில் 31 நாள்களையும் பெரியார் கழித்தார்.
மூன்றாவது பயணம்
ஜூன் 21இல் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் வழக்கமாய் எல்லோரும் எதிர்பார்ப்பது போல் (ஈரோடு) வீட்டுக்கு வராமல் பெரியார் நேராகப் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கப் பிரவேசத் தடை அமலில் இருக்கும் நிலையிலேயே வைக்கம் சென்றார். 22 ஜூன் 1924 முதல் இரண்டாவது முறை கைதான 18 ஜூலை 1924 வரை வைக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இடையில் ஜூலை 4ஆம் நாள் ஈரோடு சென்றதாகத் தெரிகிறது (காலக் கண்ணாடி, ப. 24). பிரவேசத் தடையை மீறி வைக்கத்தில் நுழைந்ததற்காய் விசாரிக்கப்பட்டு 19 ஜூலை 1924இல் சிறைக்கு அனுப்பப்பட்டார். இரண்டாவது தடவையாக தடையை மீறியதற்காக இம்முறை நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
ஜூலை 28ஆம் தேதி (காலக் கண்ணாடி, ப. 25) கோட்டயத்திற்கு அழைத்துச் செல்ல இயற்கை தடை யாய் அமைந்ததால் வைக்கம் காவல் நிலையச் சிறையில் முன்போலவே சிலநாள்கள் வைக்கப்பட்டு, பின் திருவனந்த புரம் மத்திய சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறையில் ஒன்றரை மாதம் போல இருந்தார்.
பின் 30 ஆகஸ்ட் 1924இல் விடுதலையானார். இந்த மூன்றாம் வைக்கம் பயணத்தில் வெளியே 26 நாளும் (22 ஜூன் முதல் 18 ஜூலை முடிய), சிறையில் 43 நாளும் (19 ஜூலை முதல் 30 ஆகஸ்ட் முடிய) இருந்தார் பெரியார்.
நான்காவது பயணம்
சித்திரைத் திருநாள் பட்டம் ஏற்றதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாகத் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து 30 ஆகஸ்ட் 1924 விடுதலை யான பெரியார், மறுநாள் ஆகஸ்ட் 31 முதல் வீடு திரும்பிய 9 செப்டம்பர் 1924 வரை திருவாங்கூரில் இருந்தார். நாகம்மையார் பெரியார் விடுதலையான தேதி செப்டம்பர் 1 எனக் குறிக்கிறார் (நாடார்குல மித்திரன், 29 செப்டம்பர் 1924). நெடுங்கணா (செப். 5), நாகர்கோயில் (செப். 6) போன்ற இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டது தெரிகிறது. முன்போலவே இம்முறையும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் நேரே வீட்டுக்குப் போகவில்லை பெரியார். ஈரோடு திரும்பும்வரை ஒன்பது நாள் (ஆகஸ்ட் 31 முதல் செப். 8 முடிய) வெளியே திருவாங்கூர் சமஸ்தானத்தில் சத்தியாகிரகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 1924 செப்டம்பர் 11இல் வேறு வழக்கு காரணமாகப் பிரிட்டிஷ் இந்திய அரசு அவரைக் கைது செய்தது வேறு.
அய்ந்தாவது பயணம்
டிசம்பர் 1924இல் வைக்கம் சென்று பெல்காம் காங்கிரசு மாநாட்டுச் சமயம் பெரியார் திரும்பி வருவார் என்று தமிழ்நாட்டு காங்கிரசுக் கமிட்டி மேலாளர் தெரிவித்திருந்தார் (நாடார்குல மித்திரன், 22 டிசம்பர் 1924). இதிலிருந்து பெரியார் டிசம்பர் 1924இல் வைக்கம் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். தவிர இப்பயணத்தில் எவ்வளவு நாள் வைக்கத்தில் இருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலாளர் அறிவித்திருந்தவாறு வைக்கம் சென்றாரா என்பதுமே உறுதி செய்ய முடியவில்லை. வே.ஆனைமுத்து உருவாக்கிய 'காலக்கண்ணாடி'யிலும் குறிப்புகள் இல்லை.
ஆறாவது பயணம்
1925 மார்ச் 10 முதல் 18 வரை திருவாங்கூர் வந்திருந்தார் காந்தி. சத்தியாகிரகிகள், வைதிகர்கள், மகாராணிகள், நாராயண குரு, திவான், காவல்துறை ஆணையர் ஆகியோரைச் சந்தித்து விட்டுத் திரும்பினார். அப்பயணத்தில் பெரியார், வர்க்கலை, சிவகிரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு காந்தி யுடன் சென்றிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
1925 மார்ச் 12 அன்று சிவகிரியில் காந்தியுடன் நாராயண குருவைச் சந்தித்தார் பெரியார். உடன் இராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் இருந்தனர். மறுநாள் திருவனந்தபுரத்தில் காந்தியுடன் பெரியார் பேசியதாகப் பெரியாரே பலமுறை தெரிவித்துள்ளார். வேறு நூல் ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன. ஆக இவ்விரண்டு நாள்களில் பெரியார் திருவாங்கூரில் இருந்தது உறுதியாகிறது அந்நிகழ்வுகளுக்கு முன்பின் னாகத் திருவாங்கூரில் தங்கிய நாள்கள் குறித்த விவரம் இதுவரை கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கும் ஆதாரப்படி வெளியே கழிந்த இரண்டு நாள்களாக அவரது ஆறாவது பயணத்தைச் சுருக்கக் கணக்கிடலாம்.
ஏழாவது பயணம்
சத்தியாகிரகத்தின் தொடர்பில் பெரியாரின் நிறைவான வைக்கம் பயணம் இது. வைக்கம் சத்தியாகிரக வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கச் சென்ற பயணம். விழாவில் கேரளத்துக்கு வெளியிலிருந்து கலந்துகொண்டவர் பெரியார் மட்டுமே. வெற்றிவிழாவிற்கு நாகம்மை யுடன் பெரியார் சென்றார். தீண்டாதார் மற்றும் ஏழைகளுக்காகக் கல்வி கற்பிக்கச் சேலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ தியாகராய நிலையத்தின் முன்னரே திட்டமிடப்பட்ட திறப்பு விழாவைத் தள்ளிவைத்து விட்டு வெற்றிவிழாவிற்குப் பெரியார் சென்றார் ("குடிஅரசு" 29 நவம்பர் 1925). அவ்விழாவில் கேளப்பன், டி.கே.மாதவன், மன்னத்து பத்மநாபன் ஆகியோருடன் கலந்துகொண்டார். இம்முறை எத்தனை நாள் பெரியார் வைக்கத்தில் இருந்தார் என்று தெரியவில்லை.
ஆக இவ்வேழு பயணங்களில் பெரியார் திருவாங்கூரில் வெளியே (22+7+26+9+0+2+1) 67 நாள்களும், சிறையில் (0+31+43+0+0+0+0) 74 நாள்களும் தங்கியிருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார் எனலாம். ஆக மொத்தம் 141 நாள். இவை உறுதியாகத் தெரிந்த பத்திரிகை ஆதாரங்களின் படியான கணக்கு. புதிய ஆதாரங்கள் கிடைக்குமானால் மேலும் எண்ணிக்கை கூடும். 1924 ஜூலை 4இல் வைக்கத்தி லிருந்து ஈரோடு சென்ற பெரியார் எப்போது திரும்பினார் எனத் தெரியவில்லை. அந்த வகையில் மட்டும் வைக்கத்தில் இருந்த நாள்களில் சில குறையலாம். காந்தியின் வருகையின்போது இருந்த நாள்களில் சில கூடவும் செய்யலாம்.
(நூலின் பக்கம்:420-423)
(தொடரும்)
விடுதலை நாளேடு 4.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக