பக்கங்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (3),(4)

'வைக்கம் போராட்டம்' என்ற ஆராய்ச்சி வரலாற்று ஆவணம்  - 10,12 ஆண்டு கால உழைப்பு, தேடல்கள் மூலம் பழ. அதியமான் பெற்றெடுத்த அரிய  நூலின் (பக்கங்கள் 646) வைர ஒளியின் வீச்சில் சில பகுதிகள் இதோ!

தந்தை பெரியாரின் வாதத் திறமை, சொல்லாற்றல், அறிவும், செறிவும், மறுக்க முடியாத ஆணித்தரமான விளக்கங் களும் எப்படிப்பட்டவை என்ப தற்குப் போதிய சான்றாக 'வைக்கம் வீரர்' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.வினால் பெருமைப்படுத்தப் பட்டதற்குரிய - போராட்ட காலத்தில் அவர் நிகழ்த்திய பேருரைகளே அமைந்துள்ளன. அவைகளில் சில நமது இளைய தலைமுறை யினரின் அறிவுப் பசிக்கான அமுதமாக இதோ:

"வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்துக்கு எதிரானதல்ல, மதச் சண்டை அல்ல, வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்தப் பணியில், நாம் நல்ல நிலையில் இருக்கும் எவரையும் நம்பி இருக்கக் கூடாது. வேகமாக மறைந்து வருகிற மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன, இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டு கிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது. இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய் விடுவர். ராஜ பக்திக்கு எதிராக இருப்பினும் மத பக்தி கடைப்பிடிக்கப்படவேண்டும்.

ஒரு இந்து மற்ற ஒருவரைத் தீண்டாதவர் எனக் கருதுகையில், முகமதியர்களும் கிறித்தவர்களும் அவர்களது மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், அவர்கள் அம்மதத்தில் பிறந்திருந்தாலும் மாறியவராக இருந்தாலும் சமமாக கருதுகின்றனர்.

அரசாங்கம், சமாதானத்துக்காக அளித்த பல்வேறு யோசனைகளும் ஒப்புக்கொள்ளத் தக்கவை அல்ல. அதில் ஒன்று, சாலைகள் கோயில் சொத்து என்பது. மகாராஜாவுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? முழு ராஜ்யமே ஸ்ரீ பத்மனாபனுக்குச் சொந்தமானது என்பதால் இராஜ்யமே கோயில் சொத்துதான். இது அவரது தாத்தாவின் சொத்தல்ல. முகமதியர்களையும் கிறித்தவர்களையும் அச்சாலைகளில் நுழைய விடாமல் தடுத்துவிட்டால் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்கிறது? இது ஒரு அரசரின் கட்டளை போல உள்ளது. அரசர் ஒருமுறை, பொருளை அளக்கும் .......... என்று ஆணை யிட்டார். கீழ்ப்பகுதி, நேராக அளக்கும்போது பிடிக்கும் அளவைவிட குறைவாகப் பிடிக்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். நிலை மையைச் சமாதானம் செய்த அரசர், படியைப் பக்கவாட்டில் அளக்கும்படி ஆணையிட்டார். இதனால் கீழ்ப்பகுதியைக் கொண்டு அளக்கும் போது கிடைத்ததும் இழக்கப்பட்டது, வைக்கத்தில் அளிக்கப்படும் சமாதானத்தை இதற்கு ஒப்பிடமுடியும்.

நாங்கள் பசியாக இருக் கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால் மற்றவர் சாப்பிடு வதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது! சாப்பிடும் மற்றவர் உணவைப் பறித்து விடுகிறோம் என்கிறது!!

திருவாங்கூருக்கு வரும் போது பிரிட்டிஷ் அரசாங்கம் மோசமான அரசாங்கமாக இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தேன், ஏனெனில் அவர்கள் நோக்கத்தை அடைய பொய் சொல்லவும் தந்திரத்தைக் கையாளவும் தயங்க மாட்டார்கள். இந்த நாட்டு நடைமுறைகளைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் அரசாங்கம் தேவ லாம் என்று நினைக்கிறேன். பிரச்சினைக்குரிய சாலையின் ஓரத்தில் நின்றிருக்கும் மரங்களில் எழுதப்பட்டிருந்த  PWD என்ற எழுத்துகளை இந்த அரசாங்கம் நீக்கியுள்ளது. இது மோசடி இல்லையா? இந்த அரசாங்கத்தை நம்பினால் நமது நோக்கத்தை அடைவது சாத்தியமா?

வருணங்களின் இருப்பை மதிக்கும் ஒருவர் என இவ்வரசர் பேசப்படுகிறார். அரசின் உயர் பதவிகளுக்கு தாழ்ந்த சாதியினர் என்று சொல் லப்படுபவரை நியமிக்கும் போது இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறாரா? ஒரு தீயர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் - அவரது ஏவலர்கள் பிராமணர்கள். இது வரு ணாசிரம தருமத்திற்கு எதிரானது இல்லையா? வருணாசிரம தர்மத்தை மதிப்பவர் என்று மகாராஜாவை எப்படி கருத முடியும்? சில இந்துக்கள் சில குறிப்பிட்ட வேலையைச் செய் வதால் தீண்டத்தகாதவராகி விடுவர் என்பது உண்மையா? வலது கை சாப்பிடுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணி களுக்காக இடது கை இருக்கிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலதுகை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலதுகையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும் போது நமது இடதுகையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தை விட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லு கிறோமா? அல்லது வலது காலால் உதை படும்போது சந்தோஷப்படுகிறோமா?

வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் சமத்துவமாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம். அதுபோலவே ஒவ்வொரு இந்துவும் சமத்துவமாக நடத்தப்பட உரிமை உடையவர்கள். அவர் பிராமணனாக இருக் கட்டும், புலையராக இருக்கட்டும். இறந்த கால்நடைகளை அறுக்கும் பறையர் தீண்டத்தகாதவர் எனில், மனித உடலை அறுக்கும் பிராமண டாக்டர்களிலும் நாயர் டாக்டர்களிலும் எவ் வளவு அதிகமான தீண்டத்தகாதவர் உள்ளனர்?

கள்ளை இறக்குவதால் தீயர் தாழ்ந்த ஜாதி யினர் எனப்படுகிறார் எனில் அதைக் குடிப்பவர் எந்த அளவு மோசமானவர்? கள்ளை இறக்க மரங்களை வாடிக்கை விடுபவர் இவர்களை விட எந்த அளவு கூடுதல் மோசமானவர்? கள்ளிலிருந்து வருவாயை அதிகரிக்கும் அரசாங்கம் இவர்களை எல்லாம் விடக் கூடுதல் மோசமானது அல்லவா. உயர்வு என்பது ஒருவர் செய்யும் வேலையிலா இருக்கிறது? கையூட்டு பெறும் காவல் அதிகாரியும் தவறான சாட்சியம் சொல்லும் வக்கீலும் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறது?

சத்தியாகிரகிகளின் வெற்றிக்குச் சில நல்ல குணங்கள் அவசியமாகின்றது. தம்மை உயர்ந் தோர் என்று கருதிக் கொள்பவரிடம் சம அந்தஸ்து கோருவோர் முதலில் தம்மை விட 'கீழ் உள்ளோர்' என வகைப்படுத்தப்பட்டவருடன் சமம் என்று கருதவேண்டும். வைசியன், சூத்திரனுடன் தன்னைச் சமமாக கருதாத ஒரு க்ஷத்திரியன் பிராமணனுடன் சமத்துவம் கோர முடியாது. நாம் அஹிம்சைவாதியாக இருக்க வேண்டும். சிறிய வன்முறைகூட நம் முயற்சி களை வீணாக்கி விடும். யாராவது ஒருவர் வன்முறையை உபயோகித்தால் மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தை நிறுத்திவிட தந்தி கொடுத்து விடுவார். காவல் அதிகாரிகளின் சிரித்த முகங் களாலும் அன்பான வார்த்தைகளாலும் நாம் ஏமாந்துவிடக் கூடாது. சிறிய அளவு வன்முறை கூட துப்பாக்கிகளையும் மற்ற கருவிகளையும் கொண்டுவந்து விடும். திருவாங்கூர் அரசாங்கம் இந்த நிலைமையை வெற்றிகரமாகச் சமாளிக்க வில்லையெனில், பிரிட்டிஷ் படை விமானங் களுடன், யந்திர துப்பாக்கிகளுடன் உதவிக்கு வந்துவிடும் --- அப்போது நாம் நிராதரவாக நிற்போம். சிறிய வன்முறைகூட நமது போராட்டத்துக்கு முழுத் தோல்வியைக் கொண்டு வந்து விடும். எனவே நம்முடைய ஆயுதமாக தர்மத்தையும் பொறுமையையும் மட்டுமே கொள்ள வேண்டும்.

எடபாடம் என்றொரு காங்கிரசின் வேலைகள் முழுமையாக வெற்றி அடைந்த ஊர் இருக்கிறது. அங்கே இருக்கும் கள்ளுக் கடைக்குப் போலீஸைத் தவிர போவார் யாருமில்லை. அனைவரும் கதர் அணிகிறார்கள். அகிம்சையே அங்கு முழுவதும் நிலவுகிறது. நிர்வாகத்தினருக்கு நிலைமையைச் சமாளிப்பது கஷ்டமாகிவிட்டது. ஒரு சண்டைக்கார உதவி காவல் ஆய்வாளரை நியமித்தது. அவர் வந்ததும் ஊரின் வம்புக்கார மனிதரிடம் போய் சண்டை போட்டார். அம்மனிதன் அமைதி இழந்து அவரை அடித்து நொறுக்கிவிட்டார். செய்தி பரவி, ஆயுத போலீஸ் வந்து ஊரை முழுவதும் தாக்கிவிட்டது. சௌரி சௌராவிலும் இதே மாதிரிதான் நடந்தது. அகாலி சம்பவம் முழுவெற்றி பெற்றதற்கான அடையாளம், அமைதி மற்றும் அகிம்சையின் வெற்றி. நாம் பிறந்தால் ஒரு நாள் இறப்போம் என்பது தெரிந்த ஒன்று. நல்ல நோக்கத்துக்காக நமது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்."

[1 மே 1924 அன்று கே.ஜி. குஞ்சுகிருஷ்ண பிள்ளை தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேச்சின் சாரமாக அரசு ஆவணம் பதித்து வைத்திருப்பது இது - பக்கம் 380-383].

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 2.3. 20

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (4)

வைக்கம் போராட்டத்தின் போக்கில் திருப்பத்தை ஏற் படுத்திய ஓர் இயற்கை நிகழ்வு, பெரியாரின் சிறைவாசக் காலத் தில் 7 ஆகஸ்ட் 1924இல் நிகழ்ந் தது. திருவாங்கூர் மகாராஜா ராமவர்மா, தன் 67ஆவது வயதில் காலமானார். இந்த நிகழ்வு நாடகீயமான முறையில் வைக்கம் வரலாற்றுத் தமிழ் நூல்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். பெரியாரே அந் நிகழ்வைச் சுவையாகப் பின்னாளில் விவரித்தார்.

"...சத்தியாகிரகத்தை நிறுத்துவதற்காகவும் எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களும் சில வைதிகர்களும் சேர்ந்து கொண்டு 'சத்ரு சங்காரயாகம்' ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபா செலவு செய்து நடத்தினார்கள். ஒருநாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டி ருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன். என்ன செய்தி? இப்படி வேட்டுச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா என்று கேட்டேன். அதற்கவன் சொன்னான். 'மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாதிருந்தது; மகாராஜா நேற்று இரவு திருநாடு எழுந்து விட்டார்' என்று. அதாவது 'இராஜா செத்துப் போனார்' என்று சொன்னார். அவ்வளவுதான். மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள் ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் செய்த யாகம் அங்கேயே திரும்பி மகாராஜாவைக் கொண்டுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாகிரகத் தலைவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களி டையே ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது" (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், பக். 100 - 111).

கோட்டயத்திலிருந்து பெரியார் திருவனந்த புரச் சிறைக்குக் கொண்டு செல்லப்படும்போது இடைப்பட்ட 102 மைல் தூரத் தையும் அவர் நடந்து கடக்க உத்தேசித்திருக்கிறார் என்று ஒரு குறிப்பு (நவசக்தி, 8 ஆகஸ்ட் 1924) வெளியாகி யுள்ளது. எண்ணம் ஈடேறிய தாகத் தகவல் இல்லை.

பெரியார் சிறை சென்றபிறகு இராஜாஜி வெளியிட்ட இரண் டாவது அறிக்கையில் சிறையில் பெரியார் நடத்தப்படும் முறை குறித்து தன் கண்டனத்தை வெளி யிட்டார். அதனால் பயன் ஒன்று மில்லை எனினும், பெரியாரின் சமூக மதிப்பை உலகமும் அர சாங்கமும் அறிந்துகொண்டன. அந்த அறிக்கையி லிருந்து சில வரிகள்:

"தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரக கைதியாய் இருக்கும் இ.வி. ராமசாமி நாயக்கர் உணவு, தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரகச் சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரி கிறது. இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியி ருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக் கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப்போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்த வேண்டியதில்லை.

உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கொண்ட வர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பதவியும் அந்தஸ்தும் என்பது ஆங்கி லேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது...

அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் சிறிதும் நியாயப்படுத்த முடியாதவை. சிறையிலிருக்கும் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தைரியமிக்கத் தலைவருக்கு என் பாராட்டுகள்" ('தி இந்து', 27 ஆகஸ்ட் 1924). (இதே அறிக்கை 'சுதேசமித்திர'னில் 28 ஆகஸ்ட் 1924 இதழில் வெளியானது.)

உடன் சிறையிருந்த கேரளக் காங்கிரசுத் தலைவர் கே.பி. கேசவமேனனும் பெரியாரையும் வேறு இரண்டு பேரையும் சிறப்புக் கைதிகளாக வைக்காமல் இருந்ததைப் பற்றித் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு விடுதலை செய்வது வரை பதில் கிடைக்கவில்லை என்று எழுதியுள்ளார் (கடந்த காலம், ப. 66).

திரு.வி.க. அறிக்கை

நவசக்தியில் திரு.வி.க. பெரியார் சிறையில் நடத்தப்படும் விதம் குறித்துத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

"ஸ்ரீமான் (நாயக்கர்) செல்வத்திற் சிறந்த சீமான்; செழித்த நிலையில் வாழ்க்கை நடத்தியவர். அவர் தேசத்தின் பொருட்டு எல்லாவற்றையும் தியாகம் செய்து மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு தேச சேவை செய்து வந்தார். அத்தகைய பெருமை வாய்ந்த அவர் திருவனந்தபுரம் சிறையில் இடுப்பில் சிறை உடையோடும் கரத்தில் விலங்கோடும் மற்ற சத்தியாகிரகச் சிறைக் கூட்டத்தினின்றும் பிரிக் கப்பட்டுத் தனி அறையில் உறைகின்றாராம். நாயக்கர் சத்தியாகிரகத் தர்மத்தை உணர்ந்தவ ராதலால், எந்தக் கஷ்டத்தையும் சகிக்கும் சக்தி வாய்ந்தவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட் கிறோம்" ('நவசக்தி', 29 ஆகஸ்ட் 1924).

(நூலின் பக்கம்: 396-398)

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 3.3.20


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக