தந்தை பெரியார் என்ற ஒப்புயர்வற்ற சுய சிந்தனையாளரை வரலாற்றில் நாம் மிகமிக அபூர் வமாகவே காணுகிறோம்.
அறிவின் எல்லைக் கோடு எது என்றே ஒன்று இல்லாத அளவுக்கு ஒவ்வொன்றையும் தனது தனித்த பார்வையோடு பார்க்கக் கூடியவர்.
அதுபோலவே கிரேக்கத்தின் சாக்ரடீஸ், அவரது சுய சிந்தனை அத்துடன் கூடிய செயலாக்கம்
(Activism) இணைந்ததால் பெரு வெற்றி பெற்றார்.
அன்றைய கிரேக்கச் சமுதாய பிற்போக்கு வாதிகள் அல்லது இருப்பதை எப்போதும் மாற்றவே கூடாது என்ற பிடிவாதக்காரர்கள் (Status Quoists) சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள்; அவரது உடலைக் கொன்று அவரை சரித்திரத்தின் சாகாத மாமனிதராக ஆக்கினர் - அவர்கள் அறியாமலேயே!
அவர் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியிருந்தால், ‘இளைஞர்களை நான் இனி மேல் ‘கெடுக்கமாட்டேன்''' (‘Corrupting the Youth') என்று உறுதிமொழியை நீதிமன்றத்தில் கூறியிருந் தால், அவருக்கு ‘ஹெம்லாக்' என்ற ஒரு தனி ரக நஞ்சைக் கொடுக்காமல் அவர் மேலும் சில ஆண்டு காலம் வாழ்ந்திருக்க முடியும் - ஆம் சில ஆண்டு காலம்தான் வாழ்ந்து பேசப்படாத மனிதராகவே இருந்திருப்பார்.
எத்தனை எத்தனை நூற்றாண்டுகள் கடந்தா லும், அவர் இன்றுபோல் என்றும் வரலாற்றில் வாழ்ப வராக மாறியிருக்க முடியாது.
அதுபோலவே தான் கொண்ட கொள்கை லட்சி யத்திற்காக 23 வயதில் தூக்குக் கயிற்றை மகிழ்ச்சி யோடு முத்தமிட்டதோடு, என்னை ஏன் தூக்கிலிடு கிறீர்கள், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவது நல்லது என்று நெஞ்சுரத்துடன் முழங்கிய நாத்திகன் பகத்சிங் என்ற அந்த வரலாற்று நாயகன்!
‘தேசப்பிதா' என்று அனைவராலும் அழைக்கப் பட்ட ‘மகாத்மா' காந்தியார்கூட இதுகுறித்து மவுனம் சாதித்து, பிரிட்டிஷ் அரசையோ, தூக்குத் தண்ட னையைப்பற்றியோ எழுதாது தவிர்த்த நிலையில்,
தென்னாட்டுச் சிங்கமாம் தந்தை பெரியாரின் பேனா முனை ‘குடிஅரசு' ஏட்டில் கண்டனத் தலை யங்கம் தீட்டி கர்ஜித்தது! (இன்றைய இளைஞர்களும், இனிவரும் தலைமுறையினரும் அறிந்து பாடம் கற்கவேண்டிய நிகழ்வு அது).
தனது சுய சிந்தனையில் பட்டதை மறைத்துப் பழக்கப்பட்டவர் அல்லர் தந்தை பெரியார்! அறிவு நாணயத்தின் அப்பட்டமான முழு வடிவம். உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாத உண்மையின் உருவகம் அவர்!
அதனால்தான் அவருக்கு அரசியல் வெறுக்கப் பட்டதாக விலக்கி வைக்கப்பட்டதாயிற்று;
எதிர்ப்புக்கஞ்சிடும் அச்சமும், கோழைத்தனமும் அவரிடத்தில் துளியும் இடம்பெறாத காரணத்தால், நெஞ்சில் பட்டதை நேருக்கு நேர் உரைத்தார். அது ‘நீசமன்று; மறக்குலமாட்சியாம்' என்பார் புரட்சிக் கவிஞர்!
லாபம் - சுயநலம் கருதினால் வளைந்து, குனிந்து, நெளிந்து, மலிந்து மற்றவர்களின் பாராட்டு - பதவி, பரிசு பெற முயற்சிக்கும் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தே அவர் தனது சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
புகழுக்கு அடிமையாகாத மனிதர்கள் புவியில் உண்டோ! பெரியார் அதற்கும் விதிவிலக்கு - அதிலும் வெளிச்சம் போட்டு உயர்ந்து நிற்கும் இமயம்! தான் மட்டும் அப்படி இல்லை; தனது தொண்டர்கள்கூடத்தான்.
‘‘‘நல்ல பெயர்' எடுக்க விரும்பும் எவரும் என் பின்னால் வரவேண்டாம்; ‘கெட்ட பெயர்' எடுக்கத் துணிவுள்ள தோழனே வா என் பின்னால்'' என்று பொது வாழ்க்கைக்கும், சுயமரியாதை இலட்சியப் போருக்கும் உள்ள தனித்தன்மையை நிலை நிறுத்தினார்! (நல்ல பெயர், கெட்ட பெயர் என்று அவர் கூறுவது முட்டாள்களால் வழங்கப்படுவது).
தன்னையே நம்பி இப்பெரும் பணியேற்ற தகத்தகாய ஒளிமிக்க தனித்துவ தன்னம்பிக்கையின் தலைதாழாச் சிங்கம் அவர்!
தான் விரும்பி ஏற்று செய்துவந்த பணிக்கு நன் றியை எதிர்பார்த்தார் இல்லை. மனித சமுதாயத்தின் ‘சுபாவத்தை' (இயல்பை) தனது 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் நடைமுறையில் அளந்திட்ட, அறிந்திட்ட அனுபவக் களஞ்சியம் அவர்; அதனால் ‘நன்றி' என்பதை எதிர்பார்க்காத பணியாக (ஜிலீணீஸீளீறீமீss யிஷீதீ) தனது பொது வாழ்க்கை யையும், அதன் தொண்டறத்தையும் தூய்மையாக அமைத்துக் கொண்டார்.
இந்த நேரத்தில் இடைச்செருகல் போல் வாசகர் கட்குத் தோன்றினாலும், பதிவாக வேண்டிய ஓர் அதிர்ச்சித் தரக்கூடிய தரவு (Proof) - சான்று ஒன்று - நாங்கள் பல காலம் வியந்து மகிழ்ந்த ஒன்று தந்தை பெரியாரைப்பற்றி!
எவராவது தான் வைத்த நம்பிக்கைக்கு மாறாக அல்லது துரோகம் இழைக்கும் தன்மையில் நடந்து கொண்டதை அவர் அறிந்து வேதனைப்படும் போதுகூட முழு விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டதில்லை.
பொதுவாக தன்னுடைய பணித் தோழர்களோ அல்லது இயக்கத்தவரோ தனக்கு எதிரான ‘கீழறுப்பு' வேலைகளை நாசூக்காக செய்தபோதும்கூட, உடனே உணர்ச்சிவசப்பட்டு, ‘ஆஹா, ஓஹா' என்று கூச்சலிட்டு, நம்மில் பலரைப் போல ‘அமர்க்களம்' செய்யமாட்டார்; அதை உள்ளே போட்டு வைப்பார்; பக்கத்திலிருந்து யாராவது அதைச் சுட்டிக்காட்டினால் அவர் மிகப் பொறுமையாக ‘உம், பார்ப்போம், இனியும் என்ன செய்கிறார் என்று; மீறுகிறாரா என்று கொஞ்சம் நீண்ட கால அவகாசமும் (Long Margin) கொடுத்துப் பார்ப்போம்' என்பார். இது 90 சதவிகித சம்பவங்களில் அவரைப் பொறுத்தவரை பலித் துள்ளது. அத்தகைய நபர்கள் விஷயத்தில் அலட்சிய மாகவும் இருக்க மாட்டார். கவனிக்காததுபோல கவனித்தே வருவார்! இதை அந்த நபர்கள் அறியார் கள்; பொறுமை ஒரு நாள் புலியாக மாறிச் சீறிப் பாயும் நிலையில் அவரை வெளியே அனுப்புவார்.
அப்படி அனுப்பிய பிறகுகூட, அவர் கூறும் ஒரு வாக்கிய சமாதானம் என்ன தெரியுமா? ‘‘அது அவரது சுபாவம். விட்டுத் தள்ளுங்கள்'' என்பதே!
இந்த ‘சுபாவம்' என்பதை அய்யாவிடம் அதிகம் கேட்டுப் பழகிய எனக்கு - எங்களுக்கு - உலகின் ஆதிகால நாத்திகர்களான சார்வாகர்கள் (இனி மையாகப் பேசுபவர்கள் என்பதே அச்சொல்லின் பொருள் என்றும் கூறப்படுகிறது) பலப்பல நூற்றாண் டுகளுக்குமுன் கூறியுள்ளனர் என்பது வியப்பானது.
தந்தை பெரியார் சார்வாகர்களைப்பற்றியெல்லாம் தெரிந்துகொண்டு இந்த ‘சுபாவம்' என்ற சொல்லாக் கத்தைப் பயன்படுத்தவில்லை என்பது நமக்கு நன் றாகத் தெரியும்!
புத்தருக்கும் முந்தைய நாத்திக சிந்தனையாளர் களும் கடும் ஆரியப் பார்ப்பன எதிர்ப்பாளர்களுமான சார்வாகர்கள் பஞ்ச பூதங்கள் அய்ந்து எனப்படும் 1. நிலம் 2. நீர் 3. நெருப்பு 4. காற்று 5.வான்வெளி என்பதில் வான்வெளி ஆகாயம் என்பதை ஏற்காத வர்கள். மற்ற நான்கை மட்டுமே ஒப்புக் கொள்கிற வர்கள். அவரவர் சுபாவப்படிதான் செயல்கள் அமைகின்றன - சுபாவத்தை எளிதில் மாற்ற முடியாது என்பதில் அந்த சாருவாகர்கள் ஆழ்ந்த உறுதியான நம்பிக்கை உடையவர்கள்.
இரண்டையும் படித்தபோதும், அய்யாவிடம் அடிக்கடி நேரில் கேட்டபோதும் மிகுந்த வியப்பு அடைந்தேன் என்றாலும்,
சிறந்த உயரிய சிந்தனையாளர்களான பெரு மக்கள் எப்போதும் ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள். அது ஒருவரை ஒருவர் பார்த்து ‘காப்பியடித்ததோ', ‘கற்றுக்கொண்டதோ' கிடையாது!
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக