பக்கங்கள்

வியாழன், 28 ஜூன், 2018

ஓ மனிதா, மனிதா - பறவை இனத்திடம் பாடம் கற்றுக் கொள் (1)&(2)

நேற்று நான் வழக்கம் போல் வீட்டைச் சுற்றி நடைபயிற்சி செய்து கொண்டிருந்தேன். திடீரென காக்கைக் கூட்டத்தின் ஒரே அலறல் சத்தம். ஒரு நூறு காக்கைகள் சுற்றிச் சுற்றி பறந்து 'காகா காகா' ஓசை எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணம் என்ன? எட்டிப் பார்த்தால் சாலையில்  அடிபட்டோ, அல்லது இயற்கையாகச் செத்தோ ஒரு காக்கையின் உடல் கிடந்தது.

அதைக்கண்டே அந்த காக்கை இனத்தின் ஒப்பாரி ஓசை! எல்லாம் சேர்ந்து அதன் மூலம் தன் சக காக்கை இறப்புக்கு இரங்கற்பா பாடுகின்றனவே!

என்னே ஒற்றுமை உணர்வு, துக்கப் பரிமாற்றம் - அந்த ஜீவன்களிடம்!

ஆறறிவு தனக்குத்தான் உண்டு என்று ஆண வத்தோடு கூறும் ஓ மனிதா, உன்னிடம் இல்லாத ஒற்றுமை உணர்வும், இரக்கமும், சோகமும் அந்தப் பறவைக் கூட்டத்திடம் உள்ளதை நினைத்தாவது உன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

ஈழத் தமிழ்ச் சாதி படுகொலை செய்யப்பட்டு (முள்ளிவாய்க்கால்) இரத்த ஆறு ஓடியபோது இப்படி ஒரு உணர்வு தோன்றி உலகத் தமிழர்கள் ஓரணியில் திரண்டிருந்தால் நம்மினம் மாண்டிருக் குமா? காக்கை மட்டுமா? மணிப் புறாக்கள் - மாடப் புறாக்களிடமிருந்துகூட ஓ மனிதா நீ கற்றுக் கொண்டு உன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

புரட்சிக் கவிஞர் தனது 'அழகின் சிரிப்பு' என்ற நூலில் புறாக் கூட்டம் பற்றி புதுமைக் கருத்தொளி பாய்ச்சுகிறார் தன் கவிதைக் கருவூலத்தில்.



இட்டதோர் தாமரைப்பூ


இதழ்விரிந் திருத்தல் போலே


வட்டமாய்ப் புறாக்கள் கூடி


இரையுண்ணும்! அவற்றின் வாழ்வில்


வெட்டில்லை; குத்துமில்லை;


வேறுவே றிருந்த ருந்தும்


கட்டில்லை; கீழ்மேல் என்னும்


கண்மூடி வழக்க மில்லை


ஒரு பெட்டை தன் ஆண் இன்றி


வேறொன்றுக்குடன் படாதாம்;


ஒரு பெட்டை மத்தாப் பைபோல்


ஒளி புரிந்திட நின்றாலும்


திரும்பியும் பார்ப்ப தில்லை


வேறொரு சேவல்? தம்மில்


ஒரு புறா இறந்திட்டால்தான்


ஒன்று மற்றொன்றை நாடும்!


ஓ மனிதா நீ அதனிடம் கற்றுக்கொள்


என்று சுட்டிக் காட்டி மனிதனின் தலையில் குட்டும் வைக்கிறார் நம் ஒப்பிலா புரட்சிக் கவிஞர்.

அவள்தனி; ஒப்ப வில்லை;


அவன், அவள் வருந்தும் வண்ணம்


தவறிழைக் கின்றான் இந்தத்


தகாச் செயல் தன்மை, அன்பு


தவழ்கின்ற புறாக்கள் தம்மில்


ஒரு சில தறுதலைகள்,


கவலைசேர் மக்க ளின்பால்


கற்றுக் கொண்டிருத்தல் கூடும்!


ஓ மனிதா - புரட்சிக் கவிஞர் கவிதையால் சொடுக்குகிறார். ஓ மனிதா நீ கற்றுக் கொள்ளா விட்டாலும்கூட பரவாயில்லை; கட்டுப்பாடான புறாக் கூட்டத்திலும் உன் (மனித) குலத்தைப் போல 'தறுதலை'களையும் உருவாக்கிட காரணமாகலாமா? கேட்கிறார் நம் புரட்சிக் கவிஞர்!

புறாக்கூட்டத்தில் ஜாதி மேல் கீழ் இல்லை 'ஒத்துண்ணல்' (அருமையான சொற்றொடர் - சொல்லாக்கம் கூட) உண்டே!

ஆறறிவு அவலட்சணமே நீயோ ஒருவர் உண்ணுவதை மற்றவர் பார்க் கவே கூடாது என்பது எவ்வகையில் நியாயம் ஆகும்? யோசித்தாயா?

ஓ மனிதா உன் வழிவழிப் பிறப்பு களுக்கு ஏன் ஊரடித்து உலையில் கொட்டுகிறாய்? இறக்கை முளைத்ததும் அது சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்து விடுகிறதே அந்தப் பறவை! ஓ மனிதா இதனையும் கற்றுக் கொள்!

(நாளையும் பறக்கும்)

அடுத்து 'கிளிப்பிள்ளை' - நாம் அன்போடு கூறும் கிளிகள் மூலம் புரட்சிக் கவிஞர் மனிதர்களுக்குப் பாடம் புகட்டுகிறார். படித்து ஒழுகுவீர்களா?

சொன்னதைச் சொல்லும்

"இளித்தவா யர்கள் மற்றும்

ஏமாற்றுக் காரர் கூடி

விளைத்திடும் தொல்லை வாழ்வில்,

மேலோடு நடக்க எண்ணி

உளப்பாங்கறிந்து மக்கள்

உரைத்ததை உரைத்த வண்ணம்

கிளத்திடும் கிளியே என்சொல்

கேட்டுப் போ பறந்து வாராய்"

இந்நாட்டு 'ஊடகங்கள்கூட உரைத்ததை உரைத்த வண்ணம் கிளத்துவது - சொல்வது இல்லையே! ஆனால் கிளியோ உரைத்ததை அப்படியே மாற்றாமல், திரிக்காமல் வாய்மையுடன் கூறுகிறதே என்று ஒரு புதுவகை விளக்கம் தருகிறார் நம் புரட்சிக்கவிஞர்!

'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை' என்றுதான் பலரும் இப்பூவுலகில் சலித்துப் போய் பேசுகின்றனர்; ஆனால் புரட்சிக்கவிஞரோ புது விளக்கம்   கூறி, கிளியைப் பார்த்தாவது மனிதா மாற்றிப் பேசாதே; ஏமாற்றாதே; இளித்த வாயர்களே ஏமாறாதீர்! என்று கூறுகிறார்.

"காட்டினில் திரியும் போது

கிரீச்சென்று கழறு கின்றாய்;

கூட்டினில் நாங்கள் பெற்ற

குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்!

வீட்டிலே தூத்தம் என்பார்

வெளியிலே பிழைப்புக்காக

ஏட்டிலே 'தண்ணீர்' என்பார்

உன்போல்தான் அவரும் கிள்ளாய்"

இடம் மாற்றிப் பேசும் வித்தை உனக்கு மட்டுமா?

சில இரட்டை வேட - பேசு நா 'இரண்டுடையாய் மனிதர்களுக்கும் உண்டே' என்று ஓங்கி அடித்துக் கூறுகிறார். இல்லை. இல்லை. கொட்டு வைக்கிறார் அவர் தலையில்! நம் கவிஞர்.

அது மட்டுமா?

"பாவலர் எல்லாம் நாளும்

பணத்துக்கும் பெருமைக்கும் போய்க்

காவியம் செய்வார் நாளும்

கண், கைகள் கருத்தும் நோக!

ஓவியப் புலவரெல்லாம்

உன்னைப்போல எழுதி விட்டால்

தேவைக்குப் பணம் கிடைக்கும்

சீர்த்தியும் கிடைக்கும் நன்றே!"

பணத்துக்கும், போலிப்புகழுக்கும் காவியமும், ஓவியமும் தீட்டுகின்றனரே - வாழ்வை வயிற்றைக் காக்க அந்த வஞ்சக மனிதர் உன்னை எழுதி புகழ் பெறுகிறார்களே; புகழ், பெருமை மனிதா நல் வழியில் வர வேண்டுமப்பா என்கிறார் கவிஞர்.

அது மட்டுமா?

கோழி

"கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும்

வான்பருந்தைச் சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத

தொல்புவியில்...!"

என்பதன் மூலம் தாய்க்கோழியின் போர்க்குணம் வீறு கொண்டெழ வேண்டிய நேரத்தில் எப்படிப் பாயும் என்பதை இந்த வகைகளில் எப்படிக் காட்டுகிறார் பார்த்தீர்களா?

மேலும் காட்டு மிருகங்களையும் புரட்சிக் கவிஞர் விடவில்லை.

"தூங்கும்புலியை பறை கொண் டெழுப்பினோம்

தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்"

என்றார்!

கவிஞர் பாரதிகூட

"காக்கைகுருவி எங்கள் ஜாதி நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

என்று மட்டும் பாடினார். (குயில் அவருக்கு செல்லம்)

ஆனால் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனாரோ எல்லாப் பறவை இனத்திடமும் பாடம் கற்றுக் கொள்; கோழி யிடமும்கூட கொஞ்சம் தெரிந்து கொள் மனிதா, மனிதா! என்கிறார்.

என்னே சிறப்பு!(பறந்து விட்டன; மீண்டும் எப்போதாவது  இப்பக்கம் வரும்).

-  விடுதலை நாளேடு, 27,28.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக