பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கற்க - நிற்க - இதற்குத் தக!




சீரிய பகுத்தறிவாளர் மானமிகு க. ஜெயகிருட்டிணன் ‘வளர்தொழில்’ என்ற வணிகச் செய்தி ஏட்டினை மிகச் சிறப்பாக நடத்தி வருவதோடு, தமிழில் முதன்முதலாக 'தமிழ் கம்ப்யூட்டர்’ மாதமிருமுறை இதழினையும்

23 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்துகிறார்!

பல ஏடுகள் - உருப்படியான எதையும் தராமல், வெறும் அக்கப்போர், அல்லது சினிமா ‘கிசு கிசு’ குப்பைகளையே வைத்து செழிப்பான வியாபாரம் செய்து வருகிறபோது, இதுபோன்ற முயற்சிகள் பாராட்டி வரவேற்கத் தகுந்தவையாகும்.

2017, அக்டோபர் - 1-15 இதழில் உள்ள இளையருக்குப் பயனுள்ள ஒரு கட்டுரை - சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை வீணாக்கிடும் கொடுமையிலிருந்து அவர்களைக் காப்பாற்றிட, பயனுறு வகையில், நமது கால முன்னுரிமை, அளவீடுகள், ஒதுக்கல்கள் பற்றிய தெளிவுரையாக, வழிகாட்டும் நெறியாக உள்ளது!

அதனை அப்படியே தருகிறோம் கற்க - நிற்க - இதற்குத்தக!

சமூக வலைத் தளங்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவது எப்படி?

சமூகவலைத் தளங்கள் இன்றைக்கு மக்களின் பலவிதமான கருத்துகளை தெரிந்து கொள்ளும் பெரிய களமாக இருக்கின்றன. ஓரளவுக்கு நம்மைப் போலவே சிந்திப்பவர்கள், மாறுபட்டு சிந்திப்பவர்கள், தங்கள் சிந்தனைகளை மற்றவர்களை  காயப்படுத்தாமல் மென்மையாக வெளிப்படுத்துபவர்கள், தங்கள் கருத்துக்கு மாறுபடுபவர்கள் எல்லோரையும்  தங்கள் தனிப்பட்ட எதிரிகள் போல  பாவித்து கடுமையான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், பெண்களை மதித்து பதிவு இடுபவர்கள், தங்களுக்கு பிடிக்காத கருத்துகளை சொல்கிறார்கள் என்பதற்காகவே அவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுபவர்கள் என்று முகநூல் நமக்கு அத்தனை பேரையும் அடை யாளம் காட்டுகிறது.

அவ்வப்போது சந்திக்க முடியாத நண்பர்களை முகநூல் வாயிலாக சந்தித்து அவர்கள் பதிவிடும் கருத்துகளை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் கருத்தில் உடன்பாடு இருந்தால் லைக் பட்டனை அழுத்தி நம் ஆதரவைத் தெரிவிக்க முடிகிறது. அந்த கருத்துகளில் மாறுபடுகிறோம் என்றால் நம் நிலைப் பாட்டை தெரிவிக்க முடிகிறது.

பிறந்த நாள் வாழ்த்து கூற முடிகிறது. நம் நட்பு வட்டங்களில் உள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தால், அந்த மழலையின் படத்துடன் பதிவிடுகிறார்கள். நாம் பார்த்து மகிழ முடிகிறது.

சிலர் தங்கள் வாழ்வியல் அனுபவத்தை  பகிர்ந்து கொள்கிறார்கள். "தீக்கதிர்" பொறுப்பாசிரியர் திரு. அ. குமரேசன், தன்  அரசியல், சமுதாயக் கருத்துகளை நாகரிகமாக உறுதிபடத் தெரிவிப்பதில் பலரின் பாராட்டுகளையும் பெற்றவர். அவர் தன் பேரனைப் பார்க்க எப்படி விரைகிறார் என்பதை அவர் எழுத்துகளில் படிக்கும்  போது அவர் அடையும் மகிழ்ச்சியை நாமும் அடைய முடிகிறது. சில பதிவுகளில் கணவன்-மனைவி உறவுகளை சிறப்பாக கையாளும் வழி முறைகள் வெளிப்படுகின்றன. குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான செய்திகள் கிடைக்கின்றன.

ஒரு நிகழ்வு அல்லது கருத்து தொடர்பாக பல கட்சிகளை சார்ந்தவர்களும் எப்படி மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள்  என்பதை  இருந்த   இடத்தில்   இருந்தே அறிய முடிகிறது. நம் கருத்து களையும் நூற்றுக்கணக்கான பேர்களுக்குத் தெரிவிக்க முடிகிறது. ஒரு பொதுக்கூட்டம் அல்லது கருத்தரங்கம் நடத்தி தெரிவிக்க வேண்டியதை எந்த செலவும் இல்லாமல் நம்மால் தெரிவித்து விட முடிகிறது. நடை பெற இருக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப் பிதழ்களை அனுப்ப, பெற முடிகிறது. இப்படி முகநூலால் கிடைக்கும் பயன்கள் பற்றி பட்டியல் இட்டுக் கொண்டே இருக்கலாம்.

அதைப் போலவே வாட்ஸ் அப் பயன்களும்!

மின்னஞ்சல் போல  இப்போது பலர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். ஒரு பொருளை வாங்கப் போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.  அந்த பொருளை வாங்கலாமா என்று யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டி இருந்தால் உடனே செல்பேசியில் அந்த பொருளை ஒரு படம் எடுத்து வாட்ஸ் அப் வாயிலாக நொடிகளில் அனுப்பி அவரின் கருத்தை அறிந்து கொள்கிறார்கள். அவசரமாக படிக்க வேண்டி இருக்கும் ஆவணங்களை படம் எடுத்து உடனுக்கு உடன் அனுப்புகிறார்கள். சங்கங்கள் அமைப்பதைப்போல் குழுக்களை அமைத்துக் கொள்ள முடிகிறது. அவர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த செய்திகளை நகல் எடுத்து தங்கள் குழுவினருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இப்படி கிடைக்கும் பயன்கள் குறித்த தெளிவான புரிதலோடு முகநூலை, வாட்ஸ் அப்பை பயன்படுத்து வதில்தான் நம் திறமை வெளிப்பட வேண்டும்.

முகநூலைப் பயன்படுத்துபவர்களில் சிலர், எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளானவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைப்பார்களோ அப்படி சிலர் முகநூலைத் திறக்கிறார்கள். சிலர் இந்த விஷயத்தில் செயின் ஸ்மோக்கர்கள் போல, மற்ற முதன்மையான பணிகளைக் கூட மறந்து விட்டு முகநூலில் மூழ்கிக் கிடப்பார்கள். இங்கேதான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நம் படிப்பு சார்ந்த, வேலை சார்ந்த, தொழில் சார்ந்த முதன்மையான பணிகளைக் காட்டிலும் சிறந்த பணி முகநூலைப் பார்ப்பது என்று யாராலும் சொல்ல முடியாது. திட்டமிட்டு தங்கள் கட்சி சார்ந்த மனப் போக்கை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்று அதற்கென சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டுமானால் இது முதன்மையான பணியாக இருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் முதன்மையான பணிகள் பட்டியலில் முகநூலை வைத்து இருக்கக் கூடாது. எனவே படிக்கும் நேரங்களில், அலுவலக நேரங்களில் முகநூல் நினைப்பே வரக்கூடாது. எப்போதாவது முதன்மையான பணிகள் இல்லாத நேரமாகப் பார்த்து முகநூலை திறக்கலாம். அதிக அளவாக ஒரு அரை மணி நேரம் செலவிட்டு விட்டு அதில் இருந்து மீண்டு விட வேண்டும்.

ஏதாவது ஒரு பதிவைப் போட்டு விட்டு நமக்கு எத்தனை லைக் வந்து இருக்கிறது என்பதைப் பார்ப்பது பலருக்கு ஒரு போதை போல ஆகி விடுகிறது. எந்த பணியைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இடை இடையே முகநூலைத் திறந்து யார் யாரெல்லாம் லைக் போட்டு இருக்கிறார்கள், எத்தனை லைக்குகள் வந்து இருக்கின்றன  என்பதைப் பார்ப்பதன் மூலம் தேவை யற்ற வகையில் பொன்னான நேரத்தை இழப்பார்கள். அற்ப மகிழ்ச்சி தரும் இந்த போதைக்கு நாம் ஆளாகக் கூடாது.

நம்முடைய இன்றியமையாத பணிகளை முடித்து விட்டு, மாலையில் அல்லது இரவில் சற்று ஓய்வாக இருக்கும்போது முகநூலைத் திறக்கலாம். ஒரு அரை மணி நேரம் அளவுக்கு உலவி விட்டு வெளியேறி விடலாம். அவ்வாறே வாட்ஸ் அப் செய்திகளையும் சற்று நேரம் பார்வை இடலாம். தொழில் சார்ந்த, பணி சார்ந்த தகவல் பரிமாற்றம் எனில் வாட்ஸ் அப்பை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

உளவியல் சார்ந்து சிந்திக்கும்போது இன்னொரு சிக்கலும்  நமக்கு புலப்படும். தேவையற்ற மன உளைச்சலைத் தரும் செய்திகள் நம் விழிகளில் பட்டு மன அமைதியைக் கெடுப்பதும் உண்டு.

மேலும் தேவையற்ற செய்திக் குவியல் நம் மூளைக்குள் இடம் பிடித்து மனச் சோர்வை அதிகரிப்பதையும் நம்மால் உணர முடியும். நமக்கு பயன்படக் கூடிய செய்திகள் எனில் எவ்வளவு வேண்டுமானாலும் மூளைக்குள் ஏற்றிக் கொள்ளலாம். நமக்கு சற்றும் பயன்படாத தக வல்களை தொடர்ந்து படித்துக் கொண்டே இருப்பதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது? குப்பைகளைச் சேர்த்து வைப்பது போலத்தான் இருக்கும்.

முகநூலையும், வாட்ஸ் அப்பையும் நிச்சயமாக நம்மால் முழுவதும் புறக்கணித்து விட்டு இருக்க முடியாது. ஆனால் நமக்கு நேர இழப்பையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தாத அளவுக்கு அளவோடு, திறமையோடு  அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு,7.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக