சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் என்ற MIDS கடந்த சில மாதங்களுக்கு முன் (ஏப்ரல் 18ஆம் தேதி - 2022) ஓர் அருமையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுப்பு நூல் ஒன்றை தமிழில் ஆக்கம் செய்து தொகுப்பாசிரியர் ப.கு. பாபு மூலம் வெளியிட்டுள்ளார்கள்.
பல அருமையான ஆய்வுக் கட்டுரைகள், தகுதி மிக்கப் பேராசிரியப் பெரு மக்களால், "பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்" என்ற தலைப்பில், ஏழு பகுதிகளில் 18 கட்டுரை களை வெளியிட்டுள்ளார்கள்.பொதுவாக நம் நாட்டு பல இளைஞர்களும் - ஏன் ஆசிரியர்களும்கூட - பொருளாதாரம் சம்பந்தப்பட்ட அரிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை; அப்படி ஆர்வப்பட்டு தமிழ் நூல்களைத் தேடும்போது; அவர்களை ஈர்க்கும் வண்ணமும், அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணமும் அந்நூல்கள் அமைவதும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
இந்த நூல் அதற்கு விதிவிலக்கு - சில நாள் களுக்கு முன் வந்த அந்த நூலைப் படித்தேன். பல்வேறு அரிய தகவல்களை ஒவ்வொரு கட்டுரையாளரும் திரட்டித் தந்ததோடு, சில தீர்வுகளையும் முன் வைத்துள்ளனர்!
உலகம் - இந்தியா - தமிழ்நாடு என்ற அளவில் பல ஒப்பீட்டு நிலைகளை விளக்கும் ஆய்வு களும், கொடுந் தொற்றால் எப்படி பல்துறை யினரும் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டுவர முயற்சிக்கப்பட வேண்டும் என்பதும் எளிதாக விளக்கப்படுகிறது!
18 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகம், நெருக்கடிக்கு மத்தியில் இதுபோன்ற கொள்கைப் பகுப்பாய்வை மேற்கொள்கிறது.
இது பின்வரும் ஏழு பரந்த பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1) பேரியல் பொருளாதாரக் காட்சிப் புலம்
2) விவசாயக் கொள்கைச் சீர்திருத்தங்கள்
3) சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் சந்தைகள்
4) வர்த்தகம் மற்றும் தொழில்
5) தொழிலாளர்
6) உள் கட்டமைப்பு மேம்பாடு
7) உள்ளூர் நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாடு
பொருளாதார அறிவை, நம் நாட்டு மக்களி டையே சரியான புரிதலை அவர்கள் பெறும் வகையில் நம் நாட்டு ஊடகங்கள், ஏடுகள், தொலைக்காட்சி, வானொலி போன்றவை அதிகம் பரப்பாமல், வெறும் சினிமா, போதை அக்கப்போர், பரபரப்பு செய்தியை யார் முந்தித் தருவது என்ற போட்டியும், அதையும் தாண்டி, அறிவுள்ள வகையில் அரசியல் விவாதங்கள் வெகுவெகுக் குறைவு என்ற நிலையில், பொருளாதார அறிவு பரப்புதல் ஓரிரு விழுக்காடுகூட வருவதில்லை.
வெகு மக்களுக்குப் பரப்புவதைவிட படித்த வர்கள் என்பவர்களுக்கே நிறைய சொல்லிக் கொடுத்து, அவர்களுக்குரிய தெளிவை ஏற்படுத் தினால் அது உண்மையான மக்களாட்சிக்கு நல்ல உரமிட்டதாக அமையும். ஆனால் நடை முறையில் ஏமாற்றம்தானே மிஞ்சுகிறது?
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வரும் பொது நல வழக்குகள்கூட பலவும் சுய விளம்பர வழக்காகவே இருப்பதை நீதிபதிகளும் சுட்டிக்காட்டி, வழக்குப் போட்டவர் களுக்கு அபராதத்தினைக்கூட விதிக்கிறார்கள்!
பொது ஒழுக்கச் சிதைவைத் தடுப்பதற்குப் பதில், வளர்க்கும் வகையில்தான் பல சக்தி வாய்ந்த ஊடகங்கள் - மலிவான உணர்ச்சித் தூண்டல் ஏடுகள், நூல்கள் கொடுந் தொற்றைவிட கேவலமாகப் பரவிடும் அவலச் சூழ்நிலையில்,
இதுபோன்ற அரிய அறிவு நூல்கள் சமூகத்தின் பொருளாதார உயர்வைப் பெருக்க முன் வருவது; பாலைவனத்தில் உள்ள ஒயாசிஸ் போன்றதே!
இத்தகைய நூல்களின் தேவை, சிறப்பு, கருத்து விளக்கங்களை பாமர மக்களுக்கும் - வாக்காளப் பெருமக்களுக்கும் பரப்பி, அறிவைக் கொளுத்தினால் தான் நேர்மையான மக்களாட்சி, உருவாகும் வாய்ப்பினை ஏற்படுத்தும்.
பள்ளி, முதல் பல்கலைக் கழகங்கள் வரை, பொருளாதாரத்தை எளிமையாக்கிச் சொல்லித் தர முன் வர வேண்டும்.
அவ்வகையில் இந்த நூல் ஒரு நல்ல பொது அறிவு புகட்டும் பொருளாதாரப் பாடநூல் போன் றதே - படித்துப் பயன் பெறுங்கள். தமிழாக்கம் சிறப்புடன் உள்ளது - படிக்க வேண்டிய நூல் - தொகுப்பாளர், வெளியீட்டாளருக்கும் பாராட் டுக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக