இவர்தான் அன்னை மணியம்மையார்! (1)
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் எளிமையின் இலக்கணம்; அன்பின் ஊற்று. சிக்கனத்தின் மறுபெயர். பரோபகாரம் - வெளிச்சமிடாது உதவிகளைச் சொரியும் நீர் வீழ்ச்சி- பெறாத குழந்தைகள் இவரிடம் பெற்ற பாசமும், வளர்ப்புப் பண்புகளும் எழுத்தால்- பேச்சால் வர்ணிக்க முடியாத அளவு அன்றாடமும் அலுக்காத வரலாற்றுப் பதிவுகள் - கண்டிப்பின் சிம்மம் - தலைமைக்கே உரிய தனித்துவம் - இப்படி பலப்பல!
மக்களும், நாடும் அறிந்து கொண்டதைவிட இவரைப்பற்றி அறியாத 'அதிசயம்' என்று எவரும் மூக்கில் மேல் விரல் வைக்கும் செயல் களின் செம்மாந்த சாதனைகளோ அனந்தம்! அனந்தம்!!
உருவு கண்டு அவரை எடை போட்டவர்கள் ஏதோ ஒரு பணியாளர் - 'வேலைக்காரி' என்ற தோற்றத்தைக் கொண்டுதான் மதிப்பிடுவர்.
சிறு வயதிலேயே என்னைப் பெற்ற அன்னை யின் அரவணைப்பைப் பெற முடியாதவன் என்பதால், இயக்கத்தினால் அன்னையாரிடம் யான் பெற்ற தாய்ப்பாசம் சொற்களால் எழுதிவிட முடியாத அளவுக்கு ஆழமானது.
1957இல் திருச்சி மாவட்ட செஷன்ஸ் நீதி மன்றத்தில் நம் அறிவு ஆசானுக்கு ஜோடனைக் குற்றச்சாற்றுகளைக் காட்டி மூன்று, ஆறு மாத தண்டனைகளைத் தந்தனர்.
மகிழ்ச்சியுடன் ஏற்று விடை பெறும் நிலையில் ஒவ்வொரு நாள் வழக்கின்போதும் அய்யா- அம்மாவுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து முத லாண்டு படித்த நானும் செல்வதுண்டு. தண் டனையடைந்த நிலையில் எழுதிய அறிக்கையை என் கையில்தந்து 'விடுதலை'க்கு அனுப்புங்கள் என்று கூறியதோடு அம்மாவுடன் இருங்கள் என்று கூறியதை, நான் அய்யாவின் கட்டளை யாகவே ஏற்று, சட்டப்படிப்பையும், வகுப் பையும்கூட பின்னுக்குத் தள்ளி விட்டு, சுற்றுப் பயணத்திலும் சரி, இல்லாத நாட்களில் திருச்சி பெரியார் மாளிகையில் தங்கியிருந்தும் சென்னை வந்தபோதும் அம்மாவுடனே இருந்தேன்; அப்போதுதான் அம்மா என் வாழ்வு பற்றி என்னைக் கேட்டறிந்தார்; நானும் அம்மாவிடம் நெருங்கிய தாய்ப் பாசத்துடன் கூடிய வாஞ்சையையும் அதன் பிறகு பெற்றேன். முன்பு சந்தித்தபோது பொது மரியாதையுடன் பழகிடும் வாய்ப்பு மட்டுமே!
அன்னையின் உயரிய பண்புகளும், செயல் திறனும் அவர்மீது இருந்த பற்று, பாசப் பெருங் கலனாகி, நாளும் பெருகிற்று; கடமை யாற்றிட இப்படி உரிமையுடன் என்மீது அன்பு பொழிந்த தோடு, என்னைப் பக்குவப்படுத்து வதுபோல் பலமுனைப் பணிகள் தந்தும் செதுக்கினார், என்றும் கடன்பட்டுள்ளேன்.
சில தலைவர்களிடம் நெருங்கினால் முந்தைய பற்றும் மதிப்பும்கூட ஓடிப் போகும் என்பார்கள்; இவர்களில் அய்யா - அம்மாவைப் பொறுத்த வரை நெருங்கினால் அது மேலும் கெட்டியாகுமே தவிர, உருகி ஓடிவிடாது! காரணம் அவர்களி டையே இரட்டை வாழ்க்கையில்லாததுதான்;
உள்ளான்று வைத்து புறமொன்று பேசாத ஒரே பார்வை ஒரே கருத்து என்ற தனி ஓர்மைப்பாடு நிலை கொண்டிருந்ததுதான்!
அதன் பிறகு அம்மா, அய்யாவுக்குப் பின் திருச்சியில் கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாட்கள் முதல் எனது போக்கில் ஒரு மாற்றம்
நேற்று வரை 'அம்மா'வாக மட்டுமே இருந்தவர் இன்று "தலைவராகி" விட்ட நிலையில், அவர்களிடம் ஒரு தொண்டன், ஒரு படைத் தலைவன் முன்னால் கடமைப் பொறுப்பை உணர்ந்த ஒரு சிப்பாய் சேவகன் எப்படி மரியாதை கலந்த கட்டுப்பாட்டுடன் இருப்பானோ அப்படியே சற்று தள்ளியே - பணியாற்றி வந்தேன்.
பழைய கலகலப்புடன், தமாஷ் பேச்சுகளைக் கூட விட்டொழித்து அவர் 'தலைவர்' என்றால் வீட்டிலும் நாட்டிலும், எல்லா விடயங்களிலும் என்ற உறுதியுடன்தான் கழகப் பணி, 'விடுதலை' ஆசிரியர் பணி முதலிய அனைத்தையும், 'அட்சரம் பிசகாமல்' செய்து வந்தேன்.
காரணம் முதலில் அவர் நமக்குத் 'தலைவர்'; இரண்டாவதே அவர் நமது தாய். பாசத்திற்கு முன்னிடம் முன்பு. இனி அது பின்னுக்குப் போக வேண்டும்; பணிவு முக்கியம். மரியாதை, கட்டுப் பாடு பணியின் தலைமைக்குரிய தனித்துவத்தை மதித்தல் முக்கியம் என்பதால் அப்படி நடந்து வந்தேன்.
அதையும் கூர்ந்து கவனித்து வந்தவர் ஆளுமை மிக அன்னையார் அவர்கள்!
சில மாதங்களுக்குப் பிறகு பெரியார் திடலில் ஒரு நாள் என்னை அழைத்தார். இதுபற்றி 'ஏனப்பா நீ என்னிடம் முன்பு மாதிரியில்லாமல் சற்றுத் தள்ளி விலகியே இருப்பதாக நான் உணர்கிறேன். என்ன காரணம்?' என்று ஒரு இக்கட்டான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காடச் செய்து விட்டார்.
என்ன பதில் சொல்ல....!
(நாளை தொடரும்)