ஒரு குழுவில் பத்துப் பேர் இருந்தால் (உண்மையில் அய்ந்து பேருக்குள் இருப்பதையே மேல் நாட்டு அறிஞர்கள், ஓர் குழு Group - என்றும், அதற்கு மேல் எண்ணிக்கைக் கூடினால், அது 'குழு' அல்ல 'கூட்டம்' - Crowd என்றுமே கூறுவதுண்டு). அதில் உள்ள ஒவ்வொரு வரும் வெவ்வேறுபட்ட மனப்போக்கும், குணாதிசயங் களும் கொண்டவர்களாக இருப்பது இயல்பான ஒன்றாகும். ஆட்டு மந்தையல்ல மனிதர்கள்!
அலுவலகங்கள், இயக்கங்கள், தனி இயக்கம், நிறுவனம் முதலிய எல்லாவற்றிற்குமே இந்த உண்மை பொருந்தக் கூடும்! ஒவ்வொருவருடைய சிந்தனைகளும், விருப்பு- வெறுப்பு மனோபாவம், இவற்றிலும்கூட பளிச்சென்ற வேறுபாடுகள் இருக்கும்!
இப்படி பல தரப்பட்ட கருத்துகள், சுவைகள், சிந்தனைப் போக்குகள் - இவைகளைக் கண்டு சிலர் ஏனோ ஒரு வகை வெறுப்பை உமிழ்வது உண்டு; வெளிப்படையாகக் காட்டா விட்டாலும் கூட, அந்த வெறுப்பை மனத்திற்குள்ளே வைத்து அழுத்திக் கொண்டு சகிப்பற்று "ஏனோ முக பாவத்தை" சிலர் காட்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். கெட்டிக்காரர்களான சிலர் அதனைப் புறந்தள்ளிவிட்டு, உரையாடுவதும் சம்பிரதாய வகையில் உண்டு.
இதைத் தாண்டிய உயர் தனிப்பண்பு எது என்றால், அதை சகித்துக் கொள்ளும் உளப்பாங்கு தலையாய பெருமை அளிப்பதாகும்.
"பொறுமை கடலினும் பெரிது" என்பது ஓர் பழமொழி. அதைவிடப் பெரிது சகிப்புத் தன்மை! எந்தவித எதிர் பதில், எதிர்வினையும் - உடனுக்குடன் சூடானபதில் அளித்து சமூக உறவை, கலக வெறுப்பினை வெளிச்சமாக்கிக் காட்டுவது என்பது என்றால் சிறிதும் ஏற்க இயலாத ஒன்றாகும்!
கடும் எதிரிகள்கூட நம் இல்லந்தேடி வருகின் றார்கள் ஏதோ ஒரு உதவியை நாடியோ அல்லது வேறு காரணத்தாலோ நம் குடியிருப்புக்கு வந்தால், அவரை மன ஒதுக்கீடு (Mental Reservation) இன்றி, அன்புடன் வரவேற்பது உயர் தனிப் பண்பு ஆகும், தவறல்ல.
இதனால் நாம் தாழ்ந்துவிட மாட்டோம். மாறாக, உயர்த்தப்படும் மனிதராக சமூகத்தின் முன் காட்சியளிப்போம்.
அந்தப் படிக்கு இல்லாவிட்டாலும்கூட, அதாவது அது நம்மை உயர்த்திக் காட்டாவிட் டாலும்கூட நமது மனச்சாட்சி மூலம் நாம் உயர்த் தப்பட்ட மனிதராகவே உலகத்தில் இறுதிவரை உலா வந்து கொண்டே இருப்போம்!
இது உறுதி - உண்மையும்கூட, அன்னை
ஈ.வெ.ரா. மணியம்மையார் எவ்வளவு வசவுககள் "ஆபாச அர்ச்சனைகள்" அவதூறு மொழிகள் இவைகளை சந்தித்தார். அவரது கடல் போன்ற சகிப்புத் தன்மை அவரை இன்று மிகப் பெரிய அளவில் உயர்த்தி விட்டதே! பல துன்பங்கள், துயரங்கள் எதிர்பாராத துரோகங்கள், ஏச்சுகள், ஏளனங்கள் இவைகள் எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. சகிப்பின் எல்லை அல்லவா அவர்!
இவற்றை எதிர்க் கொண்டு வாழ்வது தவிர்க்க முடியாதது என்பதைவிட, இதனை சகிப்புத் தன்மையோடு ஏற்று வாழக் கற்றுக் கொண்டால், அதைவிட பெரிய வெற்றி வாழ்வில் ஏதுமில்லை - நண்பர்களே உணருங்கள்!
ஒரு குழுவில்கூட, எவர் எவரிடம் என்ன நல்ல பண்பு, பழக்க வழக்கம், தனித் திறமைகள் உள்ளன என்று நீங்கள் கண்டறிகிறீர்களோ, அதை முன்னிறுத்தி, அவர்களோடு கனிவோடு பழகி, நட்புறவோடு நல்ல செயலாக்கத்தை நாளும் பலப்படுத்திக் கொள்ள முயலுங்கள். அவர்களது பலவீனங்களை அலட்சியப்படுத் துங்கள் - அதற்கேற்ப வேலைவாங்குகள்.
சகிப்புத் தன்மையுள்ளவர்கள் எவரும், வாழ்வில் தொடர் தோல்வியில் புரளவே மாட்டார்கள்; வாழ்வில் உயரவே செய்வர்.
புராண காலத்து 'முனிவர்கள்' என்றாலே கோபப்படுகிறவர்கள் - (முனிபு - கோபம்) சாபம் கொடுப்பவர்கள் என்கிற அவசரக்காரர்கள்.
இது அவர்களையும் பின்னுக்குத் தள்ளும் - உயர் குணம், மாமனிதம், சகிப்புத்தன்மை என்பன பேராயுதங்கள் - அவற்றை ஏந்துங்கள்!
சகிப்புத் தன்மை - என்பதற்கு “பொறையு டைமை" என்ற தலைப்பில் வள்ளுவர் திருக் குறளில் பத்து குறள்களை அடக்கிய ஒரு தனி அதிகாரத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், அவரோ அல்லது அதற்கு தலைப்பிட்டவர்களோ "பொறையுடைமை" என்றே அருமையான தலைப்பைத் தந்துள்ளது ஏன் என்று மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.
பெறற்கரிய செல்வங்களில் ஒன்று பொறுத்தல் - சகித்தல் - ஏற்றல் என்று நாம் அடையவேண்டிய அறிவுச் செல்வங்களில் ஒன்றாகவே இதனை விளக்கியுள்ளது வியப்புக்குரியதல்லவா?
அவ்வதிகாரத்தில் ஓர் அருமையான குறள் - எப்படி பொறுத்தல் மனிதனை உயர்த்தும் என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ள தோடு, பண்புகளில் தலையாய பண்பாக மனிதர் கள் வாழ்வில் கற்று நிற்க வேண்டிய ஒன்றினையும் விளக்குகிறது.
"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று" (குறள் 152)
இதன் கருத்து:
"பிறர் நமக்கு இழைக்கும் தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது, எப்பொழுதும் போற்றப் படும்; அத்தகைய தீங்கினை நினைவில் கொள் ளாமல் அறவே மறந்துவிடுதல் என்பது அப்படிப் பொறுத்தலைக் காட்டிலும் மிக்க நல்லதொரு செயலாகக் கொள்ளப்படும்."
(நாவலர் உரை)
பொறுத்தலை ஏற்காது மறுப்பவர், ஒறுத்தலை - (தண்டிப்பதையே) விரும்புபவர்களாக இருப் பவர் பலரும் பழிவாங்கும் "மிருக உணர்வுக்கு" தங்களை சிறைக் கைதி போல கூண்டுச் சிறைக் குள் அடைத்துக் கொள்ளுகிறார்கள்; ஆனால் உண்மையான மனிதமோ - மன்னிக்கத் தெரிந் தவன்தான் மனிதன்; மன்னிக்கத் தெரிந்தவனை விடக் கூட ஒரு படி மேலானவன் மறக்கத் தெரிந்தவன் என்ற தத்துவத்தைவிட மனிதகுல வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டும் நெறி வேறு உண்டா?
பழைய காலத்தின் சட்ட வகைகளில் கூட, அடிக்கு அடி, வெட்டுதல் முதலியவையே சரியான தண்டனை என்று வழங்கப்பட்டு வந்த சட்டங்கள் இருந்தன. அறிவு முதிராத காலத்து விதிகள் அவை.
‘அடிக்கு அடி, பல்லுக்குப் பல்' என்பது ஹமுராபி (Hummurabi Code) என்ற ஆரம்பக் காலச் சட்டம்.
அதன்பின் சட்டத்தில் இப்படி தண்டனையில் கூட உயர் ஜாதிக்கு லேசான தண்டனை அல்லது விடுதலை, ஒடுக்கப்பட்ட பிரிவு ஜாதியான ‘சூத்திரா‘ பஞ்சமர் போன்ற சங்கர ஜாதி என்று கலப்பு மணத்தால் - வாழ்வில் பிறந்தவருக்குக் கடுந் தண்டனை என்று விதிகள் விதித்த சட்டமே இருந்தது.
குற்றவாளிகளை பேதப்படுத்தி தண்டனை வழங்குதல் என்ற கொடுமையான - மனிதத் தன்மையற்ற செயற்கைத் தன்மையான வர்ண பேதங்களை வாழ வைத்த சட்டம் இப்போது வலுவிழந்த நிலையில் அவர் புதிய அவதாரம் எடுக்க அதனால் பயனடைவோர் முயற்சித்தனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகே, அந்த வன் கிரிமினல் சட்டம் நீக்க, சீர்மையான தண்டனைச் சட்டம் I.P.C. (Indian Penal Code) வந்தது.
அதன் கருத்தியலும் இப்போதுள்ள தண் டனை வழங்குதல் சட்டத்தின் அறிவு வெளிச் சத்தில் மாறுபட்டு, குற்றம் செய்தவர்களை திருந்தி வாழச் செய்ய அவர்களை ஒறுத்தல் - தண்டிப்பது கடுமையாக என்பதைவிட, அவர்களை மனம் திருந்தி வாழும் நல்ல மனிதர்களாக வாழ வைக்க அரசும், சட்டங்களும், நீதித்துறையும் சிந்திப்பதும் சகிப்புத் தன்மையை அடித்தளமாகக் கொண்டு எழுந்த சிந்தனைகளேயாகும்!
Revenge or Reformation என்பது போன்ற கேள்வி எழுந்து, பழிவாங்குதலால் மானுடத்தைத் திருந்தி வாழச் செய்ய முடியாது! மன்னித்து மறு வாழ்வினைத் தர மாற்று வழி வரை சிந்திப்பதே நல்ல மனிதம் தழைக்கும் மானுடத்தை உருவாக்க முடியும்.
இதற்கு மூலபலம் சகிப்புத் தன்மையே - இல்லையா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக