புத்தகங்கள் எழுதுவதில் பெரியவர்களுக்கு எழுதுவதைவிட இளையர்களுக்கும், குழந்தைகளுக்கும் கதைகள் எழுதி அதன்மூலம் அவர்களை சிறுவயதிலேயே சிந்திக்கச் செய்வது எளிதான பணியல்ல.
"குழந்தை இலக்கியம்" என்பது ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. 'அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது!" என்பது பழமொழி என்றாலும், இன்றைய நம் புதிய அனுபவத்தில் நவீன அறிவியல், மின்னணு யுகத்தில் ஏற்படும் அனுபவங்கள் என்ன கற்றுத் தருகின்றனவென்றால்,
' அய்ந்தில் விதைப்பதால் அய்ம்பதில் அது சிறப்பான பலனைத் தரும்' என்பதே!
அதற்கு, குழந்தை மனங்களில் முற்போக்கு சிந்தனைகளை விதைப்பது கட்டாயம் அல்லவா?
அதை கதைகள் மூலம் சொல்லி, அவர்கள் மனதில் பதிய வைப்பது - மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் சிந்தனையை செழுமைப்படுத்தும்.
குழந்தை இலக்கிய எழுத்தாளர் நண்பர் மு. முருகேஷ் அவர்களது "அம்மாவுக்கு மகள் சொன்ன முதல் கதை" என்ற புத்தகத்திற்கு, 2021ஆம் ஆண்டிற்கான 'பால சாகித்திய புரஸ்கார்" விருது கிடைத்திருக்கிறது!
இந்த விருது பெற்ற நூலைப் பற்றி 'பெரியார் பிஞ்சு' இம்மாத இதழில்கூட பேரப் பிள்ளைகளுக்கான கடிதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.
இந்த நூலில் உள்ள 16 கதைகளையும் படித்து செரித்துக் கொண்டால் - இந்த 16 பெற்றதால் பெரு வாழ்வு வாழலாமே! 'கட்டை விரல்' என்று அவர் புதுஒளியைப் பாய்ச்சி எழுதியுள்ள கதை - வெறும் கதை மட்டுமல்ல; பழைய அநீதியின் காதைப்பிடித்துத் திருகும் புத்தாக்கப் பாடம் - இந்நூலை வாங்கிப் படித்து வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளைப் படிக்க வையுங்கள். 'கட்டை விரலின் கதை' ஒரு புதிய கோணத்தில் பிள்ளைகளது சிந்தனையைத் தூண்டும் கதை என்பதால் 'சாம்பிளுக்கு' அதை மட்டும் தருகிறேன்.
கற்க - பயன் பெற்று நிற்க - அதற்குத்தக! இன்றைய 'நீட்' தேர்வுக்குக்கூட இது ஒரு வகை பதிலடிபோல் உள்ளது என்பது உங்களுக்கு படித்த பிறகு புரியும். படித்து மகிழுங்கள்.
அந்தக் கதை இதோ!
"அன்று ஞாயிற்றுக்கிழமை.
பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளின் கூச்சலால் வீடே கலகலத்தது. குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியாடிக் கொண்டிருந்தனர்.
மின்தடை வேறு; நடுவீட்டில் வாய்மூடி மௌனமாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தொலைக்காட்சிப் பெட்டி. “டேய்... சத்தம் போடாம, வெளிய போய் விளை யாடுங்க..!” என்று அப்பா அதட்டினார்.
குழந்தைகள் ‘ஓ... ஓ...'வென பெருங்கூச்சலிட்டபடியே தெருவுக்கு ஓடி வந்தனர்.
அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.
குழந்தைகள் கூடினாலே விளையாட்டுதானே. விளை யாட்டு என்றாலே ஒரே கொண்டாட்டம்தானே..! ரகு தான் முதலில் கேட்டான். “என்னடா... விளையாடலாம்...?” உடனே, “கண்ணாமூச்சி விளையாடலாம்..!” என்றான் டேவிட்.
"வேண்டாம்டா. கிரிக்கெட் விளையாடலாம்..!” என்றான் கதிர். "ஆமாண்டா, கிரிக்கெட்டே விளையாடலாம்...'' பலமாய்த் தலையாட்டி ஆமோதித்தான் அமீர்.
கிரிக்கெட் விளையாட வேண்டுமென்பதே நிறைய குழந்தைகளின் விருப்பமாக இருந்தது.
குழந்தைகள் அனைவரும் இரு அணிகளாகப் பிரிந்தனர்.
'எந்த அணி முதலில் பேட் செய்வது..?' ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டிவிட்டான் பூபாலன். "அய்... பூ விழுந்திருக்கு..! நாங்க தான் பேட்டிங்...” என்று துள்ளிக் குதித்தான் குட்டிப் பையன் கோகுல்.
முதல் அணி பேட்டிங் செய்ய தயாராய் நிற்க, இரண்டாவது அணி பந்தை வீசத் தயாரானது. வேகமாய் ஓடி வந்து, முதல் பந்தை வீசினான் டேவிட். முதல் பந்தையே பலங்கொண்ட மட்டும் ஓங்கி விளாசினான் தாமு. உயரே எழும்பிய பந்து, குட்டிச்சுவரைத் தாண்டிப்போய், குப்பைமேட்டில் விழுந்தது. பந்தை எடுத்து வர ஓடினான் ரகு. “டேய்... ஓடு... சீக்கிரம்..!” குரல்கள் துரத்திக்கொண்டே வந்தன. வேகமாய் ஓடிவந்த ரகு, மூச்சு வாங்கிட சற்றே நின்றான். குப்பைமேட்டில் விழுந்த பந்தைத் தேடினான்.
எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள்; சிதைந்த கழிவுகள்; கிழிந்த பாலித்தீன் பைகள் வேறு காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன. உடைந்த சிமெண்ட் குழாய் அடியில் பந்து கிடந்தது. ஓடிப்போய் குனிந்து எடுத்தான். பக்கத்தில் சிவப்பாய் ஏதோ ஒன்று அசைந்தது. புழுவா, பூச்சியா.... சட்டென எதுவும் புலப்படவில்லை. ஆனாலும், என்னவோ வித்தியாசமாய் நெளிவது தெரிந்தது. சிறுகுச்சியொன்றை எடுத்து, மெதுவாக அதைப் புரட்டினான். லேசான முனகல் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான். "யம்மா... யப்பா..!” என முனகல் சத்தம் கேட்டது. ரகுவின் கண்கள் அகலமாய் விரிந்தன. ‘எங்கிருந்து இப்படியொரு சத்தம்...?' உற்றுப் பார்த்தான். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.
அசைந்து கொண்டிருந்தது புழுவோ, பூச்சியோ அல்ல... வெட்டப்பட்ட, இரத்தக் கறை படிந்த மனிதனின் கட்டைவிரல் அது. அந்த கட்டைவிரல்தான் வலி பொறுக்காமல் முனங்கிக் கொண்டிருந்தது.
“டேய்ய்ய்... எல்லாரும் இங்க வாங்கடா..!"
ரகுவின் பெருங்கூச்சல் கேட்டு, எல்லாக் குழந்தைகளும் குப்பை மேட்டருகே ஓடி வந்தனர்.
“என்னடா... என்னாச்சு..?" “ஏன்... கத்தினே?" “பேயறைஞ்ச மாதிரி இப்படி நிக்கிறே! என்னாச்சுடா...?" ஆளாளுக்கு கேள்விகள் கேட்டனர். இன்னும் பயம் விலகாத குரலில் ரகு சொன்னான்; “டேய்... அங்கே பாருங்களேன். வெட்டித் துண்டான கட்டைவிரல் வலியால முனங்குது..!" 'கட்டை விரலா..? அதுவா பேசும்..?' ஆளாளுக்கு முணுமுணுத்தபடி, ரகு கை நீட்டிய இடத்தை லேசான அச்சத்தோடு பார்த்தனர்.
அங்கே வெட்டப்பட்ட, இரத்தக்கறை படிந்த கட்டைவிரலொன்று வலியோடு நெளிந்தபடி கிடந்தது. “டேய்.... ஆமாண்டா . மனுச விரல்டா..! அதுதான்டா முனங்குது..!" எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். சற்றே துணிச்சலை வரவழைத்துக் கொண்ட ரகு, கீழே குனிந்து, அந்தக் கட்டைவிரலைப் பார்த்துக் கேட்டான். “யார் நீ..? உனக்கு என்னாச்சு..? ஏன் இங்கே தனியா வந்து கிடக்கிறே..?"
லேசாய் அசைந்த கட்டைவிரல், “அது ஒரு பெரிய கதை தம்பிங்களா. நீங்க போயி விளையாடுங்க..!” என்றது. “நாங்க அப்புறமா விளையாடுறோம். உங்கதைய மொதல்ல சொல்லு..!" என்றான் அமீர்.
“ஆமாமா... சொல்லு. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்..!” கோரஸாய் எல்லாக் குழந்தைகளும் கேட்டார்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு கேட்கவே மறுக்க முடியாமல், தன் கதையைச் சொல்லத் தொடங்கியது அந்தக் கட்டைவிரல்.
அஸ்தினாபுரம் அழகான நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தார் பாண்டு மன்னன். அவருக்கு அய்ந்து மகன்கள்.
முதலாமானவன் விதுரன். அடுத்தவன் பீமன், மூன்றாவது அர்ஜூன், நான்காவது நகுலன், அய்ந்தாவதாக சகாதேவன்.
நாட்டை ஆளும் அரசனின் வாரிசுகள் மட்டுமல்ல; நாளை நாட்டை ஆளப் போகிறவர்களும் ஆயிற்றே. சும்மா இருந்துவிட முடியுமா..? அய்ந்து புதல்வர்களுக்கும் முறையாக அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டுமென்று முடிவு செய்தார் பாண்டுமன்னன்
வெள்ளித் தட்டுகளில் பொன், பொருள், பழ வகைகளோடு புறப்பட்டார். உடன் சென்றனர் அய்ந்து புதல்வர்களும்.
அரச குலகுரு துரோணாச்சாரியார் கம்பீரமாய் அமர்ந்திருந்தார். எதிரே சென்று வணங்கிய பாண்டு மன்னன்,
“அய்யா.... துரோணாச்சாரியாரே... வணக்கம். எம் புதல்வர்களைத் தங்களிடம் ஒப்படைக்கின்றேன். அவர்கள் அனைத்து வித்தைகளையும் முறைப்படி கற்க ஆவன செய்தருளுங்கள்...' என்றார்.
“என் வசம் ஒப்படைத்து விட்டீர்கள் அல்லவா. இனி, உமக்கு கவலை வேண்டாம். இவர்கள் அனைத்து வித்தைகளையும் திறம்படக் கற்று, உம்மையும் இம் மண்ணையும், மக்களையும் நலமுடன் காத்து, என்றும் மகிழ்ந்திருக்கும்படிச் செய்வார்கள்" என்றார் துரோணாச்சாரியார்.
அய்ந்து புதல்வர்களும் துரோணாச்சாரியாரின் காலில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றனர்.
ஏகலைவன் வேட்டுவ குலத்தைச் சேர்ந்த சிறுவன். பாறை ஒன்றின்மீது உட்கார்ந்திருந்தான்.
அவனது தந்தை வேட்டைக்குச் செல்வதைப் பார்த்ததும், வேகமாய் கீழிறங்கி ஓடி வந்தான். “தந்தையே.... நானும் உங்களுடன் வேட்டைக்கு வருகிறேன்..!” என்றான் ஏகலைவன். “வேண்டாம்... மகனே. நீ சிறுவன். உனக்குப் போதிய பயிற்சி கிடையாது. காட்டிற்கு வந்தால் பல்வேறு வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். நீ வீட்டிலேயே இரு...!" என்று தந்தை அவனைச் சமாதானம் செய்தார்.
என்ன சொல்லியும் ஏகலைவன் கேட்கவில்லை. “நான் உங்களுக்கு எந்தத் தொல்லையும் தர மாட்டேன்... தந்தையே. நீங்கள் வேட்டை யாடுவதை அமைதியாக அருகிருந்து பார்ப்பேன்..!” என்று மன்றாடினான் ஏகலைவன்.
வேறுவழியின்றி தந்தையும் ஏகலைவனை அழைத்துக் கொண்டு, காட்டிற்கு புறப்பட்டார்.
காட்டிற்குள் தந்தை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உற்றுக் கவனித்தபடியே பின்தொடர்ந்தான் ஏகலைவன்.
விலங்குகள் நடந்துபோன காலடித் தடங்கள் பற்றியும். அவற்றின் குரலொலி பற்றியும் தந்தை சொன்ன அனைத்து தகவல்களையும் கூர்ந்து கேட்டுக் கொண்டான். சந்தேகம் உண்டான இடங்களில் சில கேள்விகளையும் கேட்டுத் தெளிவு பெற்றான்.
மரத்தின் பின்னே மறைந்திருந்து, விலங்குகளின் சத்தம் வருகிற திசை நோக்கி குறி தவறாமல் அம்பு விடும் தந்தையின் வில்வித்தைத் திறனை வியந்து பார்த்தான் ஏகலைவன்.
களைப்பே தெரியாமல் தந்தையோடு சேர்ந்து, காடு முழுக்கச் சுற்றி வந்தான் ஏகலைவன்.
(வளரும்)
"கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (2)
குரு நமஸ்காரம் செய்துவிட்டு, எழுந்து நின்றனர் அரச வாரிசுகள் அய்வரும்.
"நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நாளை இந்த நாட்டை ஆளப் போகிற அரச பரம்பரை நீங்கள். வாள் வித்தை, வில் வித்தை, குதிரையேற்றம் போன்ற பல கலைகளிலும் நீங்கள் திறன் பெற வேண்டும். முதலில், வில் வித்தை கற்றிட உங்கள் கவனத்தைச் சற்றும் சிதற விடாமல் ஒருமுகப்படுத்திட வேண்டும்...!'' என்றார் துரோணாச்சாரியார்.
“அப்படியே ஆகட்டும்... குருவே..!”
அய்வரும் மன உறுதியுடன் நிமிர்ந்து நின்றனர்.
ஏகலைவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் தந்தை.
“மகனே..! இந்த இளைய வயதிலேயே வேட்டையாடுவதில் இவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறாயே..! ரொம்ப மகிழ்ச்சி. முறைப்படி நீ வில் வித்தைப் பயிற்சி பெற வேண்டும். அதற்காக நாளை உன்னை ஒரு குருவிடம் அழைத்துச் செல்லப் போகிறேன்..!" என்று பூரிப்பில் தந்தை சொல்ல,
"உங்களைவிட எனக்கு வேறு யாரப்பா குரு..? வேட்டுவ குலத்தில் பிறந்து, வேட்டையாடுவதை முதன்மைத் தொழிலாகக் கொண்ட உங்களைவிட எனக்கு வேறு யார் சிறப்பாய் வில் வித்தையைக் கற்றுத் தந்துவிட முடியும்..?” என்று கேட்டான் ஏகலைவன்.
"அப்படியில்லை.... மகனே! துரோணாச் சாரியார் என்றொரு குரு இருக்கிறார். மிகச் சிறந்த பயிற்சியாளர். அவரிடம் சென்று நீ கற்றுக் கொண் டால், இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா..!” ஆயிரமாயிரம் கனவுகளோடு தந்தை சொன்னார்.
"வேண்டாமப்பா... அரச பரம்பரையினருக்கு பயிற்சி தரும் குலகுரு அவர். வேட்டுவ குலத்தில் பிறந்த எனக்குப் பயிற்சியளிக்க அவர் சம்மதிப் பாரா..?'' என்று ஏகலைவன் கேட்க,
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம்... மகனே! உன்னைப் போலொரு சிறந்த மாணவ னுக்குப் பயிற்சி தர துரோணாச்சாரியார் நிச்சயம் மறுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்...'' என்று தந்தை உறுதியாய்ச் சொன்னதும், அரை மனதோடு 'சரி'யென்று சம்மதித்தான் ஏகலைவன்.
'அய்வரும் தயாரா..?” என்று கேட்டார் துரோணாச்சாரியார்.
“தயார்... குருவே..!” என்றனர். அய்வரின் கைகளிலும் வில் இருந்தது. அந்த வில்லில் பொருத்தப்பட்ட அம்புகள் எதிரேயிருந்த மாமரத்தைக் குறி பார்த்துக் கொண்டிருந்தன.
“ம்ம்... தயார். அம்பைச் செலுத்துங்கள்..!” என்று துரோணாச்சாரியார் ஆணை பிறப்பித் ததும், ‘சர்'ரென்று அய்ந்து அம்புகளும் சீறிப் பாய்ந்தன.
ஒவ்வொரு அம்பும் மாமரத்தில் இருந்த நான்கைந்து மாங்காய் கொத்துகளை ஒரே பாய்ச்சலில் குத்திச் சாய்த்தன.
''அபாரம்....! அபாரம்..!!” கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தார் துரோணாச்சாரியார்.
"குருவே வணக்கம்..!”
துரோணாச்சாரியாரின் காலடியில், நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து வணங் கினார் ஏகலைவனின் தந்தை. எழுந்ததும் கையிலிருந்த துண்டை அப்படியே தன் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார். தந்தையை ஒட்டியவாறு நின்றிருந்தான் ஏகலைவன்.
“யாரடா... நீங்கள்..?”
அதிகார தோரணையோடு கேட்டார் துரோணாச்சாரியார்.
“குருவே... நான் வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவன். இவன் எனது மகன் ஏகலைவன். இந்த சிறுவயதிலேயே வேட்டையாடுதலில் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றான். இவனது அபார திறமை கண்டு நானே வியந்து போனேன். இவனுக்கு தாங்கள் முறையான வில் வித்தைப் பயிற்சியைக் கற்றுத் தர வேண்டும்...!" என்று பணிந்து வேண்டி நின்றார் ஏகலைவனின் தந்தை.
காடே அதிரும்படி சிரித்தார் துரோணாச் சாரியார்.
"அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பயிற்சி தருகிற குலகுரு நான். கேவலம், வேட்டுவ குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குப் பயிற்சி தருவதா..? என்னிடமே வந்து கேட்கிற அளவிற்கு உனக்கு இவ்வளவு துணிச்சல் எப்படியடா வந்தது...? இனி ஒரு நொடியும் என் முன்னே நிற் காதே - உயிர் பிழைத்து ஓடிப்போய் விடு..!" சிங்கம் போல் துரோணாச்சாரியார் கோபமாய் கர்ஜித்தார்.
ஏகலைவனின் தந்தையினது உடல் நடுங் கியது. தலைக்கு மேல் கைகளைக் குவித்து கும் பிட்டபடி, பயந்துபோய் அப்படியே பின்வாங்கி வேகமாக நடந்தார்.
'அப்பவே சொன்னேனே... கேட்டீர்களா..!' என்பதுபோல், தந்தையின் நிலைகண்டு வருந்திய படி, அவர் பின்னாலேயே ஓடினான் ஏகலைவன்.
'எப்படியேனும் சிறந்த வில் வித்தைக்காரனாக வர வேண்டும்...!' என்கிற ஏகலைவனின் எண்ணம், முன்னிலும் தீவிரமாக அவனுக்குள் வலுப்பெற்றது.
“தந்தையே... நீங்கள் ஆசைப்பட்டதைப்போல், எனது வில் வித்தை குருவாக துரோணாச்சாரியார் இருந்தாலும், நீங்கள்தான் எனக்கு உண்மையான குரு..!” என்ற ஏகலைவன், தந்தையின் காலில் விழுந்து வணங்கினான்.
“நேராக நிமிர்ந்து நில்; நெஞ்சுக்கு நேராக வில்லை நிமிர்த்திப் பிடி. அம்பின் முன்பக்கத்தை இடக்கையின் கட்டைவிரலாலும், ஆட்காட்டி விரலாலும் அழுத்திப் பிடி. அம்பின் பின் பக்கத்தை வலதுகை கட்டைவிரலாலும், ஆட் காட்டி விரலாலும் பிடி. இப்போது உன் பார்வை, உன் இலக்கு எதுவோ அதை மட்டுமே குறி பார்க்க வேண்டும். ம்ம்..... விடு அம்பை ..!''
குருவின் கட்டளைக்கு கட்டுப்பட்ட சீடனாய், தந்தையின் சொல்லைக் கேட்டு, அம்பை செலுத்தினான் ஏகலைவன்.
சரியாக இலக்கின் மய்யத்தைக் குறி பார்த்துத் தாக்கியது ஏகலைவன் எய்த அம்பு.
துரோணாச்சாரியார் கேட்டார்.
“அர்ஜூனா... அதோ தூரத்தில் மரம் தெரிகிறதா..?'
“இல்லை ... குருவே..!” அர்ஜூனன்.
“மரத்தில் இருக்கிற கிளை தெரிகிறதா..?” மறுபடியும் துரோணாச்சாரியார் கேட்டார்.
அர்ஜூனன் சொன்னான்; “இல்லை... குருவே..!”
விடாது மீண்டும் கேட்டார் துரோணாச் சாரியார்.
“அந்தக் கிளையில் ஒரு புறா இருக்கிறதே. அதாவது தெரிகிறதா..?"
''இல்லை .... குருவே...'' என்றான் அர்ஜூனன்.
“இப்போது விடு... அம்பை!” என்று துரோணாச் சாரியார் சொல்ல,
“புறாவின் கண் மட்டும் தெரிகிறது...” என்று அர்ஜூனன் சொல்லவும், அம்பு புறாவின் கண்ணில் பாய்ந்து நின்றதும் மிகச் சரியாய் இருந்தது.
"ஆகா.... அற்புதம்.... அர்ஜூனா! இனி உன்னை வில் வித்தையில் வெல்ல உலகில் எவனுமில்லை . என் பயிற்சி அல்லவா, சிறப்பாக தேறிவிட்டாய்..!''
துரோணாச்சாரியாரின் பாராட்டில் பூரித்துப் போனான் அர்ஜூனன்.
தந்தையின் பயிற்சியில் வில் வித்தையைக் கற்றுத் தேறினான் ஏகலைவன்.
எந்நேரமும் வில் வித்தை பற்றிய சிந்தனையிலேயே இருந்தான். நிற்பது, நடப்பது, உண்பது, உறங்குவது என எக்கணமும் அவனது கவனம் வில் வித்தைப் பயிற்சியிலேயே இருந்தது.
ஆர்வத்தோடும் மிகுந்த ஈடுபாட்டோடும் வைராக்கியத்துடனும் இருந்த ஏகலைவன் வெகு சீக்கிரத்திலேயே சிறந்த வில் வித்தை வீரனாக தேறினான்.
காலச் சக்கரம் உருண்டோடியது.
(வளரும்)
"கட்டை விரலின் கதை" கேட்க வாரீகளா? (3)
ஒரு நாள் - காட்டிற்குள் வேட்டையாடிக் கொண்டிருந் தான் ஏகலைவன்.
அப்போது காட்டு நாய் ஒன்று குரைத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு விரட்டியும் காட்டு நாய் போகவில்லை. இது, ஏகலைவனின் வேட் டையாடுதலுக்கு மிகுந்த இடையூறாக இருந்தது.
காட்டு நாயின் குரைத்தல் நிற்காமல் தொடர்ந் தது. காட்டு நாயைக் கொல்லவும் - ஏகலைவனுக்கு மனமில்லை.
என்ன செய்ய...?
சட்டென்று வில்லில் ஒரே நேரத்தில் நான்கு அம்புகளைப் பொருத்தினான். சரியாய் குறி வைத்து, காட்டு நாயின் வாயை நோக்கி அம்பு களைச் செலுத்தினான்.
என்ன வியப்பு! ஒரு சிறு காயமுமின்றி, நான்கு அம்புகளும் பாய்ந்து சென்று, குறுக்கு நெடுக்காக காட்டு நாயின் வாயைத் திறக்க முடியாமல் பூட்டின. குரைக்க முடியாமல் காட்டு நாய் பயந்து, தலை தெறிக்க ஓடியது.
“அட... என்ன அற்புதம்..!” என்றான் பீமன்.
நால்வரும் பீமன் காட்டிய திசையின் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தனர்.
நான்கு அம்புகளால் வாய் பூட்டப்பட்டு, குரைக்க முடியாமல் நின்றிருந்தது காட்டு நாய்.
“இதென்ன... வியப்பாக இருக்கிறதே! இப்படி காயமின்றி அம்புகளால் வாயைப் பூட்டிய மகா வில் வித்தைக்காரன் யாராயிருக்கும்..?” என்று வியந்து பாராட்டினான் நகுலன்.
உடனே, அர்ஜூனனின் முகம் வெளிறிப் போனது.
'அனைத்து வித்தைகளையும் கற்றுத் தந்த துரோணாச்சாரியார், நமக்கு இப்படியொரு வில் வித்தைத் திறனை ஏன் கற்றுத் தராமல் போனார்..?'
அர்ஜூனனின் மனதைக் குடைந்தெடுத்தது கேள்வி.
துரோணாச்சாரியார் இருக்கும் இடத்தை நோக்கி குதிரையைச் செலுத்தினர் அய்வரும்.
தாங்கள் காட்டில் கண்டு வியந்த அந்தக் காட்சியை துரோணாச்சாரியாரிடம் கூறினர்.
துரோணாச்சாரியாரின் முகம் சுருங்கியது.
‘வில் வித்தையில் இப்படியொரு கலை நுட்பமா..? நமக்கே இது தெரியாதே! யாராய் இருக்கும்...?'
துரோணாச்சாரியார் தனது குழப்பத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல், "அது யாராயிருந்தாலும் உடனே இங்கே அவனைக் கொண்டு வாருங்கள்..!” என்றார்.
துரோணாச்சாரியாரின் கட்டளையைக் கேட்டு, திசைக்கொருவராய் பறந்து சென்றனர் சேவகர்கள்.
அடுத்த நாள் -
“இவன்தான்... குருவே..!”
ஏகலைவன் துரோணாச்சாரியார் முன் நிறுத்தப்பட்டான். கூடவே அவனது தந்தையும் கைகட்டியபடி வந்து நின்றார்.
“யாரடா.... நீ? உனக்கு இந்த வில் வித்தையை யார் கற்றுத் தந்தது...?"
கோபம் கொப்பளிக்க துரோணாச்சாரியார் கேட்டார்.
"வேட்டுவ குலத்தில் பிறந்தவன் என்பதால், உங்களால் வில் வித்தை கற்றுத் தர முடியாது என்று புறக்கணிக்கப்பட்டவன் நான். எனக்கான குருவாக என் தந்தை உங்களைக் கூறினாலும், உண்மையில் எனது குரு என் தந்தையே...!" கம்பீரமான குரலில் ஏகலைவன் சொன்னான்.
அர்ஜூனனின் முகம் தொங்கிப் போனது. இதைப் பார்த்த துரோணாச்சாரியாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சற்றுநேரம் அமைதியாய் கண்களை மூடி யோசித்தார்.
பிறகு, திடீரென ஞானம் வந்தவரைப்போல், “உன் தந்தை என்னைத்தானே உனக்கு மானசீக குருவாகக் கூறினார். அப்படியானால், அந்த வகையில் நீயும் எனக்கு சீடன்தானே...!" என்று துரோணாச்சாரியார் கேட்கவும், உடனே ஏகலை வனின் தந்தை முக மலர்ச்சியோடு சொன்னார்;
"ஆமாம்...... குருவே! உங்கள் சீடனாக அவனை நீங்கள் ஏற்றுக்கொண்டது நாங்கள் பெற்ற பெரும்பாக்கியம்..!”
“ஆகா... அப்படியா...?” என்றபடி உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்ட துரோணாச் சாரியார்,
“சரி... எனக்கு இன்னும் ஏன் குருதட்சணை தரவில்லை...?” என்று கேட்டார்.
இதைக் கேட்டதும், ஏகலைவனின் தந்தை உற்சாகத்தோடு,
“என் மகனையும் தங்களின் சீடனாக ஏற்றுக் கொண்ட தங்களின் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி.... குருவே! சொல்லுங்கள்... தங்களுக்கான குருதட்சணையாக நீங்கள் கேட்பதைத் தருகி றேன்..!” என்றார்.
அர்ஜூனனைக் கடைக்கண்ணால் பார்த்த படி, “எது கேட்டாலும் தருவாயா..?” என்றார் துரோணாச்சாரியார்.
“எங்களால் முடிந்ததைக் கேட்டால், தட்டாமல் தருவோம்... குருவே..!” என்றார் ஏகலைவனின் தந்தை.
"ஓ.... அப்படியா! எனக்கான குருதட்சணையாக, உங்களால் தர முடிந்த எளிய பரிசைத்தான் கேட்கப் போகிறேன். அதைத் தட்டாமல் தர வேண்டும்..... சரியா? வேறொன்றுமில்லை... இந்த குருவிற்கான தட்சணையாக சீடனின்... அதான், ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டித் தாருங்கள். எனக்கான குருதட்சணை அதுதான்...?” என்று முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு துரோணாச் சாரியார் கேட்ட அடுத்த விநாடியே, அர்ஜூன னின் முகமெங்கும் புன்னகை பரவியது.
துரோணாச்சாரியாரின் வார்த்தையைக் கேட் டதும், "அய்யோ... குருதட்சணையாக கேட்க, என் மகனின் கட்டைவிரல்தானா கிடைத்தது..!” என்றபடி கதறினார் ஏகலைவனின் தந்தை .
“பிறந்த குலத்தைக் காரணம் காட்டி, எனக்கு வில் வித்தை கற்றுத் தர மறுத்த குருவிற்கு எதற்காக நான் தர வேண்டும் குருதட்சணை..? அதுவும் வில் வித்தை செய்ய முதன்மையா யிருக்கும் வலதுகை கட்டைவிரலையா..? முடியவே முடியாது. இது அநீதி..!" ஏகலைவன் உரத்த குரலில் மறுத்துக் கூறினான்.
“அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டு, இப்போது எதுவும் செய்ய முடியாமல் தவிக் கிறேன். மகனே... நான் பாவியடா, என்னை மன்னித்துவிட்டா..!'' கதறியழுதார் ஏகலைவனின் தந்தை.
வீரர்கள் அனைவரும் ஏகலைவனைச் சூழ்ந்து கொண்டனர்.
“உன் தந்தை வாக்கு கொடுத்துவிட்டார். அவரது புதல்வன் நீ, அதை நிறைவேற்றுவதே உன் கடமை. எவ்வளவு மகா பெரியவர் குலகுரு துரோணாச்சாரியார், அவரே குரு தட்சணையாக உன் கட்டைவிரலைக் கேட்டபிறகு, நீ மறுக்காமல் கொடுப்பதே உண்மையான சீடனுக்கு அழகு..!” என்றான் அர்ஜூனன்.
“பிறந்த குலத்தைக் காரணம்காட்டி, பயிற்சியே அளிக்காமல் அவமானப்படுத்தி அனுப்பியவர் துரோணாச்சாரியார். இப்போது குருதட்சணை கேட்கும் இவரா பெரியவர்? ஒருபோதும் என் கட்டைவிரலை நான் தர மாட்டேன்..!"
ஏகலைவனின் குரல் திசையெட்டும் அதிர்ந்தது.
வீரர்கள் ஏகலைவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டனர். ஏகலைவன் கையிலிருந்த வில் பிடுங்கி எறியப்பட்டது.
ஏகலைவனின் வலது கையைப் பிடித்து, அவனது கட்டை விரலை வெட்டினர்.
துரோணாச்சாரியாரின் முகத்தில் தெறித்தது இரத்தம். மெலிதான வெற்றிப் புன்னகை யோடு, அதைத் துடைத்துக் கொண்டார்.
குழந்தைகளின் முகம் பெரும் துயரத்தில் இருந்தது. வியர்த்திருந்த முகங்களைக் கைகளால் துடைத்துக் கொண்டனர். சிலர் கண்களில் நீர்த் துளிகள் அரும்பியிருந்தன.
“என் கதையைக் கேட்டதும் எல்லாரும் ஏன் இவ்வளவு சோகமாயிட்டீங்க..?” மவுனம் கலைத்து கேட்டது கட்டைவிரல்.
“உன்னோட கதையைக் கேட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சு. நீ ரொம்ப பாவம்..!” என்றான் கதிர்.
“ஏகலைவன் தான் குருவுக்கு தட்சணையா கட்டைவிரலை வெட்டிக் கொடுத்தான்னு எங்கப்பா கதை சொல்லியிருக்காரு. இப்பத்தான் உண்மைக்கதை என்னான்னு புரியுது...!'' ராமு சொன்னான்.
“இது ரொம்ப கொடுமை. பயிற்சியே கொடுக்காம ஃபீஸ் மட்டும் கேட்டது அநியாயம்...!” என்றான் டேவிட்.
“உனக்கு நடந்த மாதிரி இப்படியொரு கொடுமை, இனி யாருக்கும் நடக்கக் கூடாது..!” என்றான் தாமு.
“பிறப்பின் பெயரால் ஒருவரை உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசுவது கூடாது. இதற்கான கால சாட்சியாகவே இன்னமும் நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்..!” என்றது கட்டைவிரல்.
“நிச்சயமா, எங்களுக்குள் அப்படி எந்தப் பிரிவினையும் ஒருபோதும் இருக்காது..!” என்றபடி ஒன்றாய் கரங்களைக் கோர்த்து நின்றனர் எல்லாக் குழந்தைகளும்.
(நிறைவு)
The WIRED dialog illuminates how technology is changing every aspect of our lives—from culture to business, science to design. The breakthroughs and innovations that we uncover lead to new ways of 빅카지노 considering, new connections, and new industries. Each of the sixty four stops on the digital reel corresponds to one of the 22 stops on the precise reel. The computer consults a table that tells it how far to move the precise reel for a particular worth on the digital reel. Since there are way more digital stops than precise stops, some of the the} precise stops will be linked to more than one digital stop.
பதிலளிநீக்கு