"ஆமாம் டாக்டர், வீரமணி எல்லாம் செய்பவர் தான். ஆனால் என் கவலை எல்லாம் அவனுக்கு (உரிமையோடு சிற்சில நேரங்களில் அய்யாவும் சரி, அம்மாவும் சரி ஒருமையில் விளித்துப் பேசுவது உண்டு - அவர்களிடையே நெருக்கத்தின் அடை யாளமாக தனியே பேசும்போது - மற்றவர்கள் முன்னி லையில் அப்படி இராது) சரியா 'செக்' எழுதிக்கூட பழக்கம் இல்லீங்க டாக்டர்; அதுதான் எங் கவலை. எப்படி இவன் பிறகு எல்லாவற்றையும் செய்வான் என்கிறதுதான்" என்றார்!
அது அப்பட்டமான உண்மை. காரணம், அப்படி 'செக்' எழுதுவதில் சரியான Spelling உடன் எழுதிட வேண்டும். எனவே ஒருவகை தயக்கம் காரணமாக அப்போது என்னால் அது முடிவதில்லை.
நான் வளர்ந்த விதம் Cheque எழுதிட வாய்ப் பற்ற சூழ்நிலைதானே, அதனால் அப்படி. அம்மா குறிப்பிட்டதில் தவறே இல்லை. அப்பட்டமான உண்மை. அய்யா எழுதச் சொல்லி நான் தவறாக எழுதியதை அம்மா அறிந்திருந்ததால்தான் அப்படி சொல்லியிருப்பார். இப்படிப்பட்ட ஒருவன் நமக்குப் பிறகு எப்படி அமைப்பினை நடத்திடுவான் என்று கவலை நிறைந்த சந்தேகம் அவர்களுக்கு வந்ததில் வியப்பே இல்லை.
ஆனால் பிறகு நிலைமைக்கேற்ப, எனக்கு வாய்ப்புகள் நிரம்ப வந்த காரணத்தால் நிறுவனத்தின் நிர்வாகம் நன்கு பழக்கமாகி விட்டது.
அய்.ஏ.எஸ். தேர்வுகளில் - கிராமத்து மாணவனைப் பார்த்து "உனது விமானப் பயணம் பற்றி சுருக்கமாக 100 வார்த்தைகளில் ஒரு குறிப்பு எழுதுக!" என்று கேட்டால், அவன் எப்படி சரியாக எழுத முடியும்? காரணம் அவன் ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்தவன் அல்லவே. அதுபோலத்தான்.
ஆனால், வாய்ப்புகள் பெருக, அவசியம் உந்தித் 'தள்ளும் போது தானே எதையும் கற்றுக் கொள்ள முடிகிறது. அப்படிக் கவலைப்பட்டவர் அம்மா? அது எதனால் என்று எனக்கு அப்போது புரியவில்லை.
மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்க¬ ளயெல்லாம் மருத்துவமனைக்கு வந்து தன்னை சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல்லி அம்மா அவர்கள் என்னிடம் கூறினார். நான் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்கள் பேசும் போது, நான் உடன் இருப்பது முறை யல்ல என்று கருதி வெளியே வந்து காத்திருப்பேன்; அல்லது 'விடுதலை' அலுவலகம் வந்து விட்டு சில பணிகளை - எழுத்துப் பணிகளை முடித்துத் திரும்பி, அவர்களை மருத்துவமனையில் வழியனுப்புவேன்.
அதுபோலவே ஒருமுறை நமது டிரஸ்டு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் - டிரஸ்டிகளை வரவழைக்கும் படியாக என்னிடம் அம்மா கூறினார். அதன்படி அனைவரும் அழைக்கப்பட்டனர். எனக்கு வெளியே ஒரு வேலை கொடுத்து அனுப்பி விட்டார்.
எதற்காக அவர்களை அழைத்தார்? என்ற ஆவல் (Curiosity) எனக்கு வரவே இல்லை. அவர் பலருடைய ஆலோசனையை பல செய்திகளில் கேட்கிறார்; அவர் நமது தலைவர். அவற்றை அறிய வேண்டியது நமது பணி அல்ல என்ற சிந்தனை என்னை அப்படி நடக்கச் செய்தது! அம்மா மறைவுக்குப் பின்னர்தான் அந்த குறிப்பிட்ட நாளில் அம்மா அனைவரையும் அழைத்தது ஏன் என்பது விளங்கிற்று!
என்னை தனக்குப் பிறகு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்குச் செயலாளராக 'நாமினேட்' செய்து எழுதியதோடு, அதற்கு அத் துணை டிரஸ்டிகளையும் சாட்சிகளாக கையொப்ப மிடச் செய்து அந்தக் கடிதத்தினை சீலிட்டு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகி திரு. ஏ. நமசிவாயத்தை ஒரு நாள் தனியே அழைத்து, அந்தக் கடிதத்தினைக் கொடுத்து, அதனைப் பாதுகாப்புடன் வைத்து, தனது மறைவுக்குப் பின்னரே அதை பலர் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
அப்படி டிரஸ்டிகள் அக்கடிதத்தில் சாட்சி கையெழுத்து இட்டபோது டாக்டர் செந்தில்நாதன் அவர்கள், அருகில் வந்து அம்மாவிடம் "உங்கள் டிரஸ்டிகளை எனக்கு அறிமுகம் செய்யவில்லையே அம்மா" என்று கேட்டவுடன், ஒவ்வொருவரையும் தனித்தனியே பெயர், ஊர் எல்லாம் சொல்லி அம்மா அறிமுகப்படுத்தினார்.
நமது தலைவர் பொத்தனூர் க. சண்முகம் (வரும் ஜூலையில் 100ஆவது ஆண்டு பிறக்கிறது அவருக்கு) அவர்களிடம் பிறகு டாக்டர் எஸ். செந்தில் நாதன் அவர்கள் "அந்த அம்மா நல்ல சுயநினை வுடனேதான் தான் எழுதிய கடிதத்தில் கையொப்ப மிட்டார். சாட்சிகள் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் அவரிடம் கேள்வி கேட்டு அறிமுகப்படுத்தச் சொன்னேன்" என்று கூறியது கேட்டு வியந்தார். அப்படி எதையும் அய்யா மாதிரியே ஆழ்ந்து சிந்தித்து முறையான ஆலோசனைகளைப் பெற்று தீர்க்கமாகச் செய்பவர் அம்மா.
நான் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். அம்மா பெரிய மருத்துவமனையில் திடீர் என்று சேர்க்கப்பட்ட செய்தி கடலூர் கூட்டத்திலிருந்த எனக்குக் கிடைத்தது. உடனே தொலைபேசி மூலம் வருகிறேன் என்றேன். "இல்லை, இல்லை கூட்டத்தை முடித்து விட்டே மறுநாள் காலை வா!" என்று பதில் அளித்தார் ஒரு செவிலியர் மூலம்.
அன்று ஒரு முக்கிய பிரமுகரை மருத்துவமனைக்கு அழைத்து வர, திடலில் பணியாற்றிய ஒரு நண்பரிடம் அம்மா கேட்டுக் கொண்டார்.
அந்தப் பிரமுகர் ஒரு பெரிய அதிகாரி. அம்மா விடம் உடனே வந்தார்; அம்மாவிடம் பேச மருத்துவ மனை அறைக்கு அவர் வந்து அமர்ந்தவுடன், அழைத்து வந்த திடல் நண்பர் வெளியே வராமல் பக்கத்தில் நின்றவுடன் அம்மா அவர் பெயரை விளித்து "சற்று வெளியே இருங்கள்" என்று கூறி பிறகு சுமார் 20 நிமிடம் வந்த பிரமுகரிடம் உரையாடி அனுப்பிவைத்து விட்டார். அவரை அழைத்து வர அம்மா ஆணையிட்டு, அழைத்து வந்தவர் அந்தப் பிரமுகர் வந்த பிறகு, இங்கிதம் புரிந்து வெளியே வந்திருக்க வேண்டும். வராததால் அவரை வெளியே இருங்கள் என்று சொல்ல வேண்டி வந்தது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், 'என்னையே வெளியே நிறுத்தி விட்டாரே' என்று அவர் அங்கலாய்த்தார். அதன் பிறகு அவரது போக்கு மாறியது. அம்மா அதைப் புரிந்து கொண்டார். எவரையும் எடை போடுவது அவருக்கு அத்துப்படி. தாட்சண்யம் பாராது கண்டிப்புடன் நடப்பதும் அவரது இயல்பான தனித் தன்மையாகும்.
(தொடரும்)
அய்யாவிற்குப் பின்னர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற அம்மாவின் உடல்நலம் வெகுவாகப் பாதித்தது; அந்த உடல் நிலையிலும் இயக்கப் பணிகள், திருச்சி கல்வி நிலையப் பணிகள், தனக்குப் பிறகு அய்யா கண்ட இயக்கம் - அறக்கட்டளை செம்மையாக நேர்வழியில் - எவ்வித தவறுகளுக்கும் இடந் தராது நடக்க வேண்டுமே என்ற - அந்தச் சிந்தனையில் ஆழ்ந்து மூழ்கி கவலை கொண்டவரானார்!
அவரது தனிச் சிறப்பு, மேற்கண்ட வகையில் இருந்ததைவிட கூடுதலான ஒன்றினைக் கண்டு என்னைப் போன்ற எளிய பணித் தோழர்கள் மிகவும் வியந்தது எது தெரியுமா? அருகில் இருந்தவன் என்ற முறையில் இப்போதாவது அதைப் பதிவு செய்வது மிகவும் முக்கியம்.
தனது இறுதி நாட்களே இவை என்ற ஒரு எண்ண ஓட்டம் அவருக்குள் ஓடியதின் விளைவோ என்னவோ, என்னை - சென்னை அரசு பொது மருத்துவமனை ஸ்பெஷல் வார்டில் இருக்கும் போது தனியே அழைத்து - 'நான் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அது சம்பந்தமாக சிலரிடம் கலந்து பேசிட விரும்புகிறேன்; அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வா' என்று கூறினார்கள். 'யார் என்று சொல்லுங்கள், உடனே சென்று அவர்களிடம் கூறி அழைத்து வருகிறேன்' அம்மா என்றேன்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்த தமிழ் நாடு அரசின் சட்டமன்ற செயலாளர் திரு. சி.டி. நடராசன், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் என்.டி. சுந்தரவடிவேலு, பொது மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் கே. இராமச்சந்திரன் ஆகிய மூவரை சந்தித்து உடனே அழைத்து வரச் சொன்னார்கள். உடனே சென்று அவர்களிடம் சொன்னதும் அவர்கள் மூவரும் மருத்துவமனை ஸ்பெஷல் வார்டுக்கு வந்தார்கள். அம்மா அவர்களிடம் பேசினார். நான் வெளியே செல்லும் நிலையில் - 'இல்லை இல்லை நீயும் இரு' - என்று பணித்தார்கள். அதனால் நான் அவர்களுடன் அம்மா பேசும் போது கவனித்து - குறுக்கே எதுவும் பேசாமல் வாய் திறவாது மவுனியாகவே கவனித்துக் கொண்டிருந்தேன்.
"எனக்கு ஏற்கெனவே சில சொத்துக்கள் அய்யா எழுதி வைத்த செட்டில்மெண்ட்படி, சென்னை மீரான் சாயபுத் தெரு வீடு, ஈரோட்டில் ஒரு சில - இவைகளைப் பாதுகாப்பாக, எனது உறவுகளோ மற்றவர்களோ எந்த உரிமையும் கொண்டாடாதபடி, பொதுவுக்கே பயன்படும்படி செய்ய உங்கள் ஆலோசனை, அறிவுரை தேவை" என்று மூவரிடமும் கேட்டார்கள்.
அவர்கள் மூவரும் - சி.டி. நடராசன் அவர்கள் சட்ட நிபுணர், மற்றவர்கள் பல்துறை நிபுணர்கள் - சொன்ன கருத்து "அம்மா நீங்கள் சொல்கிறபடி செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று பெரியார் சுயமரியாதை அறக்கட்டளையில் சேர்த்து எழுதி வைத்தல். மற்றொன்று, தனியே ஒரு டிரஸ்ட்டாக்கி, உங்களுக்கு யார் மீது நம்பிக்கை உள்ளதோ அவர்களை டிரஸ்டிகளாகப் போட்டு நடத்துவது. இந்த முதல் திட்டத்தில் ஒரு சிக்கல் உண்டு. அது சம்பந்தமாக வருமான வரித்துறை வழக்கு, சிக்கல் இருப்பதால், அதில் உங்கள் சொத்துகளையும் சேர்ப்பதில் ஆபத்து உண்டு. அது வருமான வரித் துறையால் பாதிக்கப் படலாம். புது சொத்து என்றும் அதிலிருந்து மீட்க முடியாது!
எனவே தனியே புதிதாக ஒரு 'டிரஸ்ட்' ஏற்படுத்துவதும், நல்ல ஆடிட்டர்களைக் கலந்து செய்வதும் முக்கியம்." என்று கூறினார்கள்.
"சில நாட்கள் ஆகும் அதற்கும்கூட - எனவே அவசரமாக உடனே அடுத்து செய்ய என்ன வழி சொல்லுங்கள்" என்று பதற்றத்துடன் படுக்கையிலிருந்த நிலையில், அம்மா அம்மூவரையும் பார்த்துக் கேட்கிறார்.
அதற்கு சி.டி.என். (நடராசன்) உடனே சொன்னார்; "உங்களுக்கு நம்பிக்கையான ஒருவரை - Testator - இல் இந்த செயலை உங்கள் சார்பில் உங்களின் அதிகாரம் பெற்ற ஒருவர், உங்களால் முடியாதபட்சத்தில் செய்யும் உரிமை பெற்றவரை நீங்கள் - எங்களைப் போன்றவர்கள் முன்னிலையில் அதை எழுதி முடிவு செய்தால், அந்த ஏற்பாடு தங்கள் நோக்கப்படி, உங்கள் உறவினர்களோ, மற்ற வேறு எவருமோ பாத்தியதை கொண்டாட முடியாது", என்று ஆலோசனை கூறினார்! சற்றும் யோசிக்காமல் அம்மா, "தாங்கள் அதை எழுதிக் கொண்டு வாருங்கள்" என்றார்.
"அம்மா யாரைப் போடுவது என்று சொல்லுங்கள்" என்று கேட்டனர். அம்மா பதில் என்ன?
(தொடரும்)
அன்னையார் - அம்மூவர், அய்யா சி.டி. நடராஜன் அவர்களால் தயாரிக்கப்பட்ட உயில் சாசனத்தில் - சென்னை அரசினர் பொது மருத்துவமனையில்(G.H) தனது உடல் நலம் குன்றி இருப்பதால், தனது எண்ணப்படியான ஏற்பாட்டினைச் செய்திட, எனது சார்பில் கே. வீரமணி S/o.C.S.கிருஷ்ணசாமி அவர்களை நியமனம் செய்கிறேன் என்றார். வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்களை அழைத்து சாட்சியாக இருக்க கையொப்பம் வாங்கும் ஏற்பாடு சென்னை பொது மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டில் அம்மூவர் முன்னிலையில் - நடந்தபோது எனக்கு அம்மாவுக்கு ஏதும் அப்படி நிகழ்ந்து விடக் கூடாது என்றும், நாம் அதை செய்யும் வாய்ப்பு வந்தால் அதை மனதால் எப்படி தாங்கிக் கொண்டு நிறைவேற்றுவது என்றும் நினைத்த வுடன் அவர்கள் முன்னிலையில் அழுதே விட்டேன். அவர்கள் அனைவரும் என்னை சமா தானப்படுத்தி ஆறுதல் கூறினர். அந்த அறையில் அப்போது நிலவிய ஒரு இறுக்கமான சூழ்நிலை இப்போதும் என் நெஞ்சை உலுக்குகிறது.
என்னைப் பார்த்து அம்மா மெல்லிய குரலில், "நீ என்ன இவ்வளவு கோழையாய் இருக்கிறாய்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டார். அவரது கண்களின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் கசிந் ததையும் அனைவரும் கண்டனர்.
நல்ல வாய்ப்பாக, அன்னையார் அவர்கள் உடல் நலம் தேறி, மருத்துவமனையிலிருந்து 'டிஸ்சார்ஜ்' ஆகி பெரியார் திடலுக்கு வந்தார்.
எனக்கு நிம்மதிப் பெருமூச்சு. அம்மா நமது ஆடிட்டரை (திருவாளர் ந. சுரேந்தர் B.B. Naidu and Sons) அழைத்து வரும்படி எனக்கு "ஆணை"யிட்டார்கள். உடனே அவரை அழைத்து வந்து அம்மாவைச் சந்திக்க வைத்தேன். அய்யா காலத்தில் தனி ஆடிட்டர் கிடையாது. வருமான வரித் தொல்லை ஏற்பட்டு கணக்குகளை அத்துறை கேட்டபோது ஒரே ஒரு பிரமாண பத்திரத்தைத் தந்தை பெரியார் தந்தார். தன் கணக்கை தனது டைரியிலேயே எழுதி, "எல்லாவற்றையும் வங்கிக் கணக்கு மூலமே செய்வேன். எனது சுபாவம் எளிதில் எவரையும் நம்ப மாட்டேன்" என்று பட்டாங்கமாக ஒளிவு மறைவின்றி உண்மையை ஒப்பனை ஏதுமின்றி எழுதித் தந்தவர்.
ஆனால், அதன் பின் மேல் முறையீடுகள் தொடர்ந்த போது, தனி ஆடிட்டர் தேவை என்பதை வழக்குரைஞர்கள், அம்மாவுக்கு ஆலோசனை கூறிய சட்ட நிபுணர்கள் கூறினர். அதன் பிறகே ஆடிட்டர் சுரேந்தர் அவர்களை ஏற்பாடு செய்தோம்.
அவர் ஒரு தனி அறக்கட்டளை (Trust)க்கு Trust deed தயாரித்து வந்து அம்மாவிடம் படித்துக் காட்டி, அவர்கள் விருப்பப்படி சில திருத்தங்களையும் செய்து ஒரு இறுதி வடிவம் கொடுத்தார்.
நான் அவர்களுடன் இல்லை. எனது 'விடுதலை' பணியையும், கழகப் பிரச்சாரப் பணி ஏற்பாடுகளிலும், அன்னையார் நலப் பாதுகாப் புக்கான பணியிலும் மும்முரமாகத் திளைத் திருந்தேன்.
அம்மா என்னை அன்று மாலை தனியே அழைத்து ஒன்றைக் கூறினர். "புதிதாய்த் துவக்கவிருக்கும் இந்த அறக்கட்டளையை அடுத்து நீ தான் நிர்வகிக்கப் போகிறாய்; எனவே உனக்கு உதவிகரமாக - கோளாறு செய்யாத வர்களாக - ஒத்தக் கருத்துள்ளவர்களாக உள்ள வர்கள் பட்டியலை - சில பேர்களை எனக்குக் கொடு; அதையே நான் ஆடிட்டரைக் கூப்பிட்டுக் கொடுத்து அந்த Trust deed-இல் டிரஸ்டியாக போடச் சொல்லுகிறேன்" என்று கூறினார்.
அதற்கு நான் சற்று நேர அமைதிக்குப்பின், "அம்மா நீங்கள் செய்யும் ஏற்பாடு இது. முதலில் நீங்கள் மருத்துவமனையிலிருந்து திரும்பி வெளி யில் வந்து - நீங்களே உருவாக்கும் நிலையே எனக்குப் பெரிய நிம்மதி, பெருத்த ஆறுதல் அடைவேன். 'Main Relief மட்டுமல்ல, என்னால் அதைச் செய்ய வேண்டிய நிலை தவிர்க்கப் பட்டதும் பெரிய வாய்ப்பு எனக் கருதி ஆறுதல் அடைகிறேன். ஏன் மகிழ்ச்சி அடைகிறேன். அது பல விமர்சனங்களை, தேவையற்ற வகையில் நமது கொள்கை எதிரிகளாலும், துரோகிகளாலும் உருவாகும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கிறது. இயற்கையாகவே இந்த நிலையில் தாங்களே தங்களுக்கு யார் யார் துணையாக இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்கள் பெயர்களை கொடுங்கள் - எவரையும் நான் தனிப்பட்ட முறையில் கூற விரும்பவில்லை; அது தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. தவறாக கருதாதீர்கள். மன்னியுங்கள்" என்று உணர்ச்சி, அழுகை, ஆத்திரத்தை அடக்கியபடி கூறினேன்.
பிறகு ஒரு நாள் இடைவெளியில் அவரே கூறினார். ஒரு நபரைப் பற்றி என்னிடம் கூறி "இவரிடம் நீ மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எனக்குப் பிறகு உனக்கு ஏதாவது தொல்லை, தொந்தரவு ஏற்படுமானால் அது அந்த ஆசாமியால்தான் ஏற்படும்" என்றார். எனக்கு அது அதிர்ச்சி. காரணம் அந்த நபர் எனது நட்புக்கு உரியவராகவே இருந்தவர். அதிர்ச்சியாக இருந்தது அம்மாவின் கணிப்பு.
பிறகு அது உண்மையாக ஆயிற்று - எனக்கு போதிய பக்குவமின்மைதான் அப்போது - அப்படிப்பட்டவர்களை நம்பி - வெளுத்த தெல்லாம் பால் என்று நம்பிய முதிர்ச்சியின்மை என்பது புரிந்தது பிறகு கால ஓட்டத்தில், புதிய அறக்கட்டளை பதிவாகி விட்டது; அதற்குமுன் அம்மாவிடம் நான் "இந்தப் பட்டியலை உங்கள் லெட்டர் பேடில் உங்கள் கையால் அந்தப் பெயர் களை எழுதி என்னிடம் தாருங்கள்; நாளைக்கு எவரும் "நானே போட்டுக் கொண்டேன்' என்று கூறி விடாமல் இருக்க அது தக்க சான்று ஆவணமாக இருக்கும்" என்று கூறினேன். அதன்படி அன்னையார் தந்தார். நிம்மதியுடன் 'பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்' என்ற புதிய அறக்கட்டளை முறைப்படி வருமான வரித்துறை முன் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டது. அம்மா அடைந்த நிம்மதி - மன நிறைவு பற்றி அவர்களே, "இப்போது தாம்பா எனக்கு பெரும் நிம்மதி" என்று பரிபூரண மகிழ்வுடன் கூறினார்.
தனக்கென வாழாது, சொந்த பந்தங்களுக்கு சொத்து சென்று விட்டது என்று எவரும் கூறிவிடாதபடி, அப்பழுக்கற்ற பொதுத் தொண்டுக்கு அடையாளமாக அன்னையார் எடுத்த ஒப்பற்ற முடிவு - அவரை எவரும் எளிதில் எட்ட முடியாத உயரத்திற்கு உயர்த்தி விட்டது - பார்த்தீர்களா?
சுயநலத்தை சுட்டெரித்த தீயானவர் - தாயானவர்!
அதிசயம், ஆனால் அப்பட்டமான உண்மை யல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக