நமது சாலைகளில் பனி படர்ந்தால் அது எவ்வளவு போக்குவரத்துக்கு இடையூறு என்பது அமெரிக்கா மற்றும் பனி கொட்டும் நாடுகளில் வாழுபவர்களுக்கு நன்கு விளங்கும்!
குளிர்காலத்தில் திடீரென்று பனி கொட்டி வழியை மறைப்பது மட்டுமல்ல, அவரவர் வீட்டுக்கு முன்னே உள்ள கார்ஷெட்டிலிருந்து காரை வெளியே எடுத்து சாலையில் செல்ல ஆயத்தம் செய்யும் பகுதியில் பனி கொட்டி யுள்ளதால் எளிதில் அந்தக் காரை எடுக்க முடியுமா?
பனிக் கட்டிகளை அகற்றிவிட்டு தடத்தை ஒழுங்குபடுத்தித்தான் அதன்பிறகே வீட்டில் (garage-இல்) நிறுத்திய காரை எடுத்து ஓட்டிச் செல்ல முடியும்.
சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத் திட அந்தந்த பகுதி நகராண்மையினர் உப்பு முதலியவைகளைக் கொட்டி, பனியை விலக்கி, வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி காரை ஓட்டிச் செல்ல உதவி செய்வார்கள்!
நடுவழியில் காரை வேகமாக ஓட்டினால், கார்கள் ஒன்றோடொன்று மோதி, விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு!
எனவேதான் இந்த கொட்டும் பனியை அகற்றிய பிறகே சாலையானது பயண வசதிக்கு வாய்ப்பாக அமையும்.
சாலையில் பனி கொட்டுவதைப் போலவே நமது மனதில் மூடுபனி - அதாவது மன அழுத் தம் - இறுக்கம் அமைந்து விட்டால் நம்மை எளிதில் செயல்படவிடாது. அண்மையில் கடந்த 2 ஆண்டுகளாக கோவிட்-19 கொடுந்தொற்று பல உருவங்களில் மனித குலத்தை வாட்டி, உயிர்ப்பலிகளை வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அச்சத்தாலும், பல இழப்புகளாலும், வாழ்வாதாரத்தை இழந்து வருவதின் - துன்பம் - துயரம் காரணமாகவும் நம்மவர்கள் பலரது மனங்களிலும் படிந்து வரும் மூடுபனியை (Mental Fog) எவ்வாறு விலக்குவது? இது பற்றி சுகாதார - நல்வாழ்வுத் துறையினர் - மருத்து வர்கள் குறிப்பாக மனோதத்துவ மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து, அதன் முடிவுகளை - நமக்கு நம்பிக்கையூட்டுவதற்காக கட்டுரை களை பாடம் எடுப்பதுபோல வெளியிட்டு தளரக் கூடாத தன்னம்பிக்கையை விதைக்கிறார்கள்!
அத்தகைய குறிப்புகள் பற்றிய கட்டுரையைப் படித்தேன் - உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்.
இந்த மனவெளியில் படிந்துள்ள மன அழுத்த மூடுபனியை எப்படி விலக்குவது என்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் ஆய்ந்து நேர்த்தியோடு கூறியுள்ள பரிந்துரை போன்ற யோசனைகளை அறிவோமா?
மிக எளிதான வழிமுறைகள்தான் - ஆனால் சோம்பலின்றிக் கடைப்பிடித்துப் பயன்பெற முயற்சிக்க வேண்டும்.
1. நாம் குடிக்கும் தண்ணீர் அளவை அதிகப்படுத்துவது முக்கியம் (தூய்மையான வெந்நீர் - ஆறவைத்தாலும் பரவாயில்லை). ஏனெனில் நீர்ச்சத்து உடலில் லேசாகக் குறைந் தாலும் (even a mild dehydration) நமது சிந்தனை ஆற்றலை சிதைத்து - மூளை - அதன் அவயங்கள் செயல்படுவதால் - எப்போதும் துடிப்புடன் - கவனத்துடன் (Alertness) இருக்கும் மூளைத்திறனை அது பாதிக்கிறதாம்!
மனதில் சில நேரங்களில் தெளிவு இன்மை - நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடும்" எனவே போதிய அளவு நீரை அருந்தத் தவறாதீர்கள். குறிப்பாக வயதான முதுகுடிமக்கள், உள்பட்ட இளைஞர், மகளிர் அனைத்து பாலரும் உடம் பின் நீர் தேவையைக் குறைக்காமல் பார்த்துக் கொள்வது நலம் பயப்பதாகும். எப்போதாவது நமக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மருத்து வர்கள் உடனே "அதிகம் தண்ணீர் குடியுங்கள் - உப்பு சத்து உள்பட வெளியேறிவிடும். சமனப்படுத்த ORS Drinks குடிங்க!" என்று கூறுவதைக் நினைவில் கொள்ளுங்கள்!
(தொடரும்)
மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (2)
நீர் அருந்துதல் மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் டாக்டர்கள், ஒரு நாளைக்கு 8 கிளாஸ் - 8 அவுன்ஸ் தண்ணீர் கொண்டவை - மொத்தம் (8*8) = 64 அவுன்ஸ் நீர் அருந்துதல் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.
இப்படிச் செய்யும்போது சிலருக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது சற்று கடினமாக உள்ளது என்று நினைப்பார்களானால், அவர்கள் நீர்ச்சத்துள்ள வெள்ளரிப் பிஞ்சுகள், தர்ப்பூசணி (water melons) போன்ற பழங்களை இதற்குப் பதிலாக சேர்த்து ஈடுசெய்து கொள்ளலாம் என்பதே அந்த அறிவுரை!
2. நமது மூளையில் மூடு பனி போன்ற அழுத்தங்கள் சேர்ந்து சுமையாக நம்மை ஆக்காமல் இருப்பதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் மிக முக்கியமாகும் என்கிறார்கள்!
தினமும் நாம் உண்ணும் உணவு பற்றியும் சற்று நிதானமாக ஆய்வு செய்து, அதற்கேற்ப மாறுதலைச் செய்து கொள்வதும் அவசியம்.
நாள் முழுவதும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, அதிக சர்க்கரையைத் தரும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நமது ‘மூளையில் மூடுபனி' (மன அழுத்தம்) உருவாவதற்குக் காரணம் ஆகும் என்கிறார் அமெரிக்க டாக்டர் காதர்.
அதற்குப் பதிலாக நாளும் மென்மையான சத்து குறைந்த - குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேடுங்கள்.
காலாவதி தேதிகளைப் பதித்து பேக்கிங் செய்த அடைப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நல்ல காய்கறிகள், பழங்கள், தாது வகைகள், பீன்ஸ், ஆரோக்கிய இறைச்சி - மாமிசம் போன்றவைகளைத் தேர்ந்தெடுத்து உண்ணப் பழகுங்கள். இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
"மனதின் மூடுபனி" ஏற்படாமல் தடுப்பதற்கு, போதிய வைட்டமின்கள் phyto-nutrients என்ற ஒரு சத்துகளை சேர்த்துத் தரக்கூடிய உணவு வகைகள் தேவை - இரும்பு தாதுச் சத்தினை - பெரும் சத்துகளைத் தரும் macro-nutrients போன்ற உணவு வகையினை நாம் எடுத்தால், அவை நமக்குப் பெரிதும் உதவக்கூடும்.
பல வேளைகளில் சாப்பாட்டைத் தவிர்ப்பது (எடையைக் குறைப்பது என்ற நோக்கிலோ அல்லது வேறு சில காரணங்களினாலோ) செய்தால் நம் மூளை சரிவர சிந்திக்கும் தன்மையும், கவன முறையும் பாதிக்கப்படக்கூடும். இதனால் நமக்கு உடல் இயக்க சக்தி வெகுவாகக் குறைந்து விடுவதால் (Low Energy) மூடுபனி கைக்கூடும்!
"காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கக்கூடாது; 5 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் பெரிதும் போதிய சக்தியைத் தரும்" என்கிறார் டாக்டர் லோரன்சு!
"இதனைக் கடைப்பிடித்த எனது வாடிக்கை யாளர்கள் போதிய சக்தியும், தெளிவான சிந்தனை - செயலாக்கத்துடன் நாளும் இருக் கிறார்கள்" என்கிறார்.
3. உடற்பயிற்சியும் முக்கியமாகும்!
உடலுக்கு மட்டும் அதனால் பலம் பெறு கிறோம் என்றுதான் நம்மில் பலரும் கருதுகிறோம். அதே அளவுக்கு உடற்பயிற்சி மனதிற்கும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும், பலத்தையும் அளிக்கிறது என்பதை ஏனோ மறந்து விடுகிறோம்.
(இப்படி எல்லா வயதுக்கும், அவரவர் உடலுக்கும் ஏற்ற உடற்பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைக் கேட்டு, பழக்கப்படுத்திக் கொள்ளல் முக்கியம். இளமையானவர்கள் கடுமையான பயிற்சிகளைக் கூட செய்யலாம். ஆனால் அதை முதுமையானவர்கள் செய்தால் எதிர் விளைவு தானே ஏற்படும். பொதுவாக 20 மணித் துளிகள் முதல் 30 மணித் துளிகள் வாரம் குறையாது 5 நாட்கள் செய்தாலே முது குடிமக்களுக்குப் போதுமானதாகும்).
மூச்சுப் பயிற்சிகள், உள்மூச்சை இழுத்து வெளியே விடல் (Aerobic exercise ) போன் றவை நமது சுவாசப்பைகளை நன்கு விரிவடையச் செய்வதுடன், மூளைக்கும் ரத்த ஓட்டம் செல்வ தற்கும், புதிய சக்தியைப் பெறுவதற்கும் உறு துணையாக இருக்கிறது; அதனால் நினைவு ஆற்றலும், கற்கும் திறனும் பெருகவும் அது வாய்ப்பை ஏற்படுத்தி மூளையில் மூடுபனியை அண்டவிடாமல் விரட்டுகிறது.
(தொடரும்)
(திருத்தம்
நேற்றைய (18.5.2022) "வாழ்வியல் சிந் தனைகள்" கட்டுரை (1)இல் கடைசி பத்தியில், "மனதில் சில நேரங்களில் தெளிவற்ற தன்மை (Mental Clarity) இன்மை ஏற்படலாம்" என்பதற்குப் பதிலாக "மனதில் சில நேரங்களில் தெளிவு இன்மை - நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடும்" என்று திருத்திப் படிக்கவும்.
தவறுக்கு வருந்துகிறோம்.
- ஆ-ர்) -திருத்தப்பட்டது
மனதின் மூடுபனி - விலக்கல் எப்படி? (3)
4. தூக்கமும் - மிக முக்கிய தேவை - மூளையில் சேரும் மூடுபனியை விரட்டிட!
போதிய தண்ணீர் குடித்தல், உடற்பயிற்சி, ஊட்டச் சத்து நிறைந்த உணவு எவ்வளவு முக்கியமோ - மனதின் இறுக்கத்தின் வடிவமான மூளையின் மூடுபனியை விரட்டிட நல்ல உறக்கமும் இன்றியமையா தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
போதிய தூக்கமின்மை என்பது நமது சிந்திக்கும் திறனை வெகுவாகப் பாதிக்கிறது.
உணவு செரிமானம் இன்மை உள்பட பல தொல்லைகளும் தூக்கமின்மையின் உடன் பிறப்புகளாகும்!
டாக்டர் போ. சரவ்ஹிசு என்ற தூக்க நிபுணர் கூறுகிறார்: "தூக்கமின்மை நமது எண்ண ஓட்டத் தினை (SleepingOcean.com) வெகுவாகக் குறைக்கிறது. ஒரு விஷயத்தைப் பற்றிய நமது கருத்துவெளியிடுவதற்கான (Reaction) நேரத் தையும்கூட வெகுவாகப் பாதிக்கிறது.
அத்துடன் தூக்கக் குறைவின் காரணமாக நினைவு ஆற்றலையும் அது வெகுவாகக் குறைக் கிற தீமையும் உண்டு. மூளையின் செல்களும்கூட ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வதும் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படும்" என்கிறார்!
டாக்டர் ஹிசு "ஒரு தூக்க அட்டவணையை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதைவிடாமல் பின்பற்றிடத் தவறாதீர்கள். அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கச் சென்று, குறிப்பிட்ட நேரத் தில் விழிப்புக் கொள்ளும் அந்த அட்டவணைக்கு ஆளானால் நமது உடல் கடிகாரமும் அதனை வெகுவாக முறைப்படுத்திடவும் உதவும் - வார விடுமுறை நாள்களாக இருந்த போதிலும்கூட அந்த திட்டத்தினை மாற்றாமல் கடைப்பிடிப்பது, நமது மூளையில் மூடுபனி சேராமலிருக்கப் பெரிதும் உதவிடக் கூடும்!
நாளும் இப்படி குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கும் பழக்கம் இன் னொரு கோணத்திலும் மிகவும் வரவேற்கத்தக்க தாகும். மூளைக்கு நல்ல ஓய்வு; உடலுக்கும் நல்ல ஓய்வு தருவதாக அது அமையக் கூடும். அதுவும் ஒருவகை இளைப்பாறுதல் (Relaxation) தானே! அப்படி ஒரு தூக்கப் பழக்கத்தை ஏற்படுத்தினால் எளிதில் தூக்கமும், எளிதான விழிப்பும், அதே நேரத்தில் ஆழ்ந்த உறக்கமும், அதன்மூலம் ஏற்படும் அருமையான வாய்ப்பும் ஏற்படக் கூடும்!
இப்படிப்பட்ட பழக்கத்தால் வளர்ந்த மனத் தெளிவும், மாசில்லா சிந்தனைப் பழக்கமும் வரும் வாய்ப்பும் ஏற்படக் கூடும்!
தூக்க நேரத்திற்குமுன் காபி குடிப்பதைக் கைவிடுங்கள்.
தூங்குவதற்கு ஓரிரு மணிக்கு முன் திரைப் படங்கள், தொலைக்காட்சி பார்த்தல் இவை களைத் தவிர்ப்பது அவசியம் (ஆனால் நம்மில் பலரும் இந்த விதியைமீறும் "குற்றவாளிகளே!").
தூங்கப் போகுமுன் குளித்தல் - வெது வெதுப்பான வெந்நீரில் அல்லது சூடான தேநீர் ஒரு குவளை குடித்தல் முதலிய பழக்கம் இருந்தால் அதுவே உங்கள் மூளைக்கு ஒரு 'சிக்னலை' அனுப்பும். தூக்கம் நம் கண்களைத் தழுவும் நேரம் வர இருக்கிறது என்று அறிவிப்பது போன்று அவை உதவும்.
இரவு உணவு எப்போதும் லகுவான, மென்மையான- எளிதில் செரிமானம் உள்ள உணவாக இருப்பின் நல்லது.
உறங்கச் செல்வதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன் - இரவு உணவை சாப்பிட்டு - படித்தல் மற்ற சில இளைப்பாறும் ஓய்வு - மனச்சலனங்கள் அற்ற வகையான புத்தகப் படிப்பு - இவை ஆழ் உறக்கத்திற்குப் பெரிதும் துணை செய்யும்.
கூடுமான வரை தூங்கும் படுக்கை அறை களில் தொலைக்காட்சிப் பெட்டி இல்லாமல் பார்த்துக் கொண்டு படுக்கைக்குப் பக்கத்தில் புத்தகங்கள் வைத்து குறிப்பிட்ட நேரம் படித்து உறங்கும் பழக்கம் வெகுவான மனதின் மூடுபனி யால் மூளை உறையாமல் இருக்கப் பெரிதும் உதவும்.
மன இறுக்கத்தை விரட்டி, ஒருவரை உற்சாகத் துடன் கடமையாற்ற ஆயத்தமாம் - இதன் மூலம்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக