பெரியார் மெடிக்கல்மிஷன் என்ற அமைப்பினை, ஓய்வு பெற்ற பல் மருத்துவர் டாக்டர் இரா. கவுதமன், ஓய்வு பெற்ற மருத்துவ நலத்துறை இணை இயக்குநர் டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் பல மருத்துவர்கள் பெரியார் மருத்துவ சேவை அணியுடன் இணைந்தும், பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழக கிராமப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் "புரா" கிராமங்களிலும் நல்ல மருத்துவ முகாம்களும், மகளிருக்குப் புற்று நோய் ஆய்வுப் பரிசோதனை களையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி - திருச்சி ஹர்ஷமித்ரா புற்று நோய் தடுப்புமனையின் டாக்டர்கள் க. கோவிந்தராஜ், சசிபிரியா கோவிந்தராஜ் அவர்களுடன் இணைந்தும் மாநிலம் தழுவிய முகாம்களையும், தொண்டறத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப் பெற்று, குருதிக்கொடை, விழிக்கொடை மற்றும் இறந்தபின் உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கே அளித்த 'செத்தும் சாகாத' மனிதநேயர்களாக பகுத்தறிவாளர்கள் பலரும் வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதை, விளம்பரங்கள் அதிகம் செய்யாமலேயே தன்னடக்கத்துடன் தகை சான்ற இந்த ஈகையைச் செய்து வருகின்றனர்.
சென்னை பெரியார் திடலில், 'வருமுன்னர் காப்பதே உண்மையான உடல் நலப் பாதுகாப்பின் தலை சிறந்த முறை' என்பதை மனதிற் கொண்டு, பிரபலமான பல்துறை டாக்டர்களை அவ்வப்போது அழைத்து, நலவாழ்வின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு உடல் உறுப்புகளில் சிறந்த அனுபவமும், ஆராய்ச்சிப் பட்டமும் பெற்று பணிபுரியும் அல்லது பணி ஒய்வு பெற்றும் மருத்துவ சிகிச்சையில் மேலோங்கியுள்ள மருத்துவ அறிஞர்களின் விளக்கவுரை, தெளிவுரை களுக்கு ஏற்பாடு செய்து எளிய பாமர மக்கள் தொடங்கி, நல்ல பெரும் பதவி, நற்கல்வி பெற்றோர் வரை அனைவரும் கேட்டுப் பயன் பெறும் வண்ணம் பல சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து (3-4 மாத இடைவெளிகளில்) வருகிறார்கள் பெரியார் மெடிக்கல் மிஷன், தமிழ்நாடு முதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டத்துப் பெரு மக்கள் குழு ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (குறள் 215)
இதன் பொருள்: மக்களால் விரும்பப்படும் பேரறி வாளன் செல்வமானது மக்கள் விரும்பும் ஊரின் குடிநீர் கிணறு நிறைந்தது போலாகும்.
- இதில் 'செல்வம்' என்பதை வெறும் பணத்தோடு மட்டும் என்ற பொருள் கொள்ளுவதைவிட அறிவுச் செல்வம், கல்விச் செல்வம், ஆற்றல் - தலைமைச் செல்வம் என்பதையும் இணைத்து விரிவாக்கிக் கொள்ளல் வேண்டும். அது - 'அறிவை விரிவு செய்' - 'அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அறிவுரையை செயலாக்கிக் காட்டுவதாகும் எனலாம். தாகம் எடுத்தவர் களுக்கு தரும் தண்ணீர் பந்தல் போல இப்பணிகள் நடப்பதும், பலரும் அதில் பங்கேற்று மனிதநேயத் தொண்டறம் புரிதலும் மிகவும் போற்றத்தக்க ஒன்றல்லவா?
நேற்று (15.8.2018) மாலை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் மெடிக்கல் மிஷன் நடத்திய நலவாழ்வுச் சிறப்புச் சொற் பொழிவினை, பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் MBBS, MD, DNB (Gen), DNB [Card), FHRS, Fellowship in Electrophysiology, Certified Electrophysiology Specialist [IBHRE, USA), Certified Cardiac Device Specialist (IBHRE, USA] அவர்கள் மிக அருமையாக நிகழ்த்தினார்.
அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் ஆவார்!
அரங்கம் நிரம்பி, பக்கத்து ஹாலிலும் T.V. Screen ஏற்பாடு செய்யப்பட்டு பலர் அங்கிருந்தே பார்த்து கேட்டு மகிழும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததும், கணினி மூலம் விளக்கப் படங்கள், அவரே வகுப்பறைகளில் விளக்குவது போல வெள்ளைப் பலகையில் வரைபடங்களாக இதயத்தைப் போட்டு, அதில், இதயத் துடிப்பை எப்படியெல்லாம் சரி செய்து நலவாழ்வு வாழலாம் என்ற விளக்கவுரையினை வந்திருந்த அனைத்து தரப்பும், படித்த பட்டதாரிகள் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், இல்லறவாசிகள், மகளிர், முதியோர், இதய நோய் தாக்கி, சிகிச்சை பெற்று மீண்டோர், அறிவார்ந்த முதியவர்கள், ஓய்வு பெற்ற அறிஞர்கள் முதல் ஒரு பொதுமை நிறைந்த மக்கள் (A Good Group Section & Society) கொண்டதாக இருந்த அனைத்து தரப்பினர் அறிவார்ந்த விளக்கவுரையினை அள்ளிப் பருகிப் பயன் அடைந்தனர்.
ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், இணைப்புரை நிகழ்த்திய தோழர் வீ. குமரேசன், துவங்கி, தலைமை யேற்ற மூத்த புகழ் பெற்ற டாக்டர் எம்.எஸ். ராமச்சந்திரன், முன்னிலையேற்ற மூதறிஞர் குழத் தலைவர் டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே. ராஜன், பேராசிரியரும் முன்னாள் நேஷனல் மெடிக்கல் போர்டு தலைவருமான டாக்டர் ஏ. ராஜசேகரன் நன்றி உரையாற்றிய, தோழர் இரா. பரஞ்சோதி, ஆகிய அனைவரும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அரிய உரைகளை நிகழ்த்தினர்.
இறுதியில் சில வார்த்தைகளைச் சொல்ல எனக்கும் வாய்ப்புத் தந்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை அறிவுரை கேட்டு மகிழ்ந்த - மற்ற நண்பர்களைப் போல - கற்றலின் கேட்டலே நன்று - மிகு பயன் தருவது என்பதாக அமைந்திருந்தது - மகிழ்ச்சியைத் தந்தது!
சரியாக 6 மணிக்குத் துவங்கி - கேள்வி பதில் விளக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கி சரியாக இரவு 8 மணிக்கெல்லாம் முடிவடைந்து, மன நிறைவுடன் வந்தோர் அனைவரும் திரும்பினர்.
(மேலும் வரும்)
- விடுதலை நாளேடு, 16.8.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக