பக்கங்கள்

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுநீரகப் பாதுகாப்பான 6 கட்டளைகள்!



நமது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தக்க முறையில் பாதுகாக்கப் பட வேண்டியதே.  என்றாலும் அடிப் படையானது இருதயம்; (Heart) தான் ஓய்வெடுக்காமல், உறங்காமல் சலிப் பின்றி தனது கடமையைச் செய்யும் முக்கிய உடல் உறுப்பு அது!

அதுபோலவே மூளையும் முக்கியம். அதன் செயலாக்கம்தான் நமது வாழ்வை பொருள் உள்ள (பணமல்ல - அர்த்த முள்ள வாழ்வு) வாழ்வாக ஆக்கிட உதவும். அது செத்துப்போனால் நாம் வாழ்வது பயனற்ற வாழ்க்கை அல்லவா? அதனால் மூளைச் சாவு ஏற்பட்ட வர்களின் உடல் உறுப்புக் கொடைமூலம், பலரையும் வாழ வைக்கும் அருமையான தொண்டறம் நடை பெறுகிறது. வாழு, வாழ விடு என்பதை சற்று மாற்றி, 'வாழு, முடியாவிட்டால் பிறர் வாழ வகை செய்ய நீ உதவிடு' என்பதற்காகவே இந்த உடல் உறுப்புக் கொடை. என்பது பரந்து விரிந்த மனிதநேயம்! இல்லையா?

கல்லீரல், கணையம் என்பதுடன் சிறுநீரகம் (Kidney) என்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தால் தான் நமது உடல் நலம், கவலைகள் அற்றதாக இருக்க முடியும்.

நமது சிறுநீரகம் (Kidney)) அதுவும் சலிப்பின்றி பணி செய்து நம்மை வாழ வைக்கிறது. இரண்டில் ஒன்று பழுதானால்கூட மற்றொன்று அதன் கடமையைத் தவறாமல் செய்து நமது ஆயுளை வளர்க்க உதவுகிறது.

ஆனால் நம்மில் பலர் அதனை சரிவர கடமையாற்ற விடாமல் நமது தவறான பழக்க வழக்கங்களால் செய்து விடுகிறோம். எப்படிப்பட்ட கவலையும், கவனமும் சிறுநீரகத் நோய்த் தொல்லையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பதுபற்றி, நமது மருத்துவ நண்பர் அனுப்பிய ஒரு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியே!

1. அதிகமாக மது அருந்துவோர் தங்களது சிறுநீரகம் கெடுவதற்கு விதை தூவி, உரம் போட்டு வருகிறார்கள். அது சிறுநீரகத்தை பாதிக்கிறது. குடிகாரர்கள்கூட (ஒரு தடவை) அளவுடன் குடித்தால் அது பெரிய அளவில் பாதிப்பதில்லை! மொடாக் குடியர்கள் என்றால் கல்லீரல் முதல் சிறுநீரகம் வரை நிச்சயம் பாதிக்கவே செய்யும் என்பது ஓர் எச்சரிக்கையாகும்.

2. நமது நாட்டில் வழங்கப்படும் எளிய பழமொழி ஒன்று உண்டு.

'ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் மூத்திரத்தை அடக்கக் கூடாது' என்பதே சரியான அறி வுரை. அவ்வப்போது மூத்திரப் பையை (Bladder) 
காலி செய்யத் தயங்கக் கூடாது. இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

சிறுநீர் வெளியேற்றப்படாமல் அடக்கி அடக்கி வைத்தால் அதனால் மூத்திரப் பையில் கற்கள் உருவாகி, பிறகு அது பெரும் வலியைத் தந்து உயிர்க் கொல்லி யாகவும்கூட சிற்சில நேரங்களில் ஆகும் ஆபத்தை உண்டாக்கி விடக் கூடும். எனவே சிறுநீரை அடக்கா தீர்கள்!

வயது முதிர்ந்தவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  இளைஞர்கள் கூச்சப்பட்டோ, சோம்பல் காரணமாக சிறுநீர் கழிப்பதைத் தள்ளி போட்டால், சிறுநீரகக் கற்களை அவர்களே உற்பத்திக் கான ஆயத்தம் செய்கிறார்கள் என்று பொருள்.

3. தேவைப்படும் அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும்.

போதிய தண்ணீர் குடிக்காவிட்டால் அதன் விளைவு நமது உறுப்புகள் செயலற்றுப் போக இந்தத் தண்ணீர் இன்மை (Dehydrate) காரணமாகிவிடும்!

நீரின்றி அமையாது உடம்பு என்று கவனமாக இருந்து அவ்வப்போது நீர் அருந்தினால் தான் நமது உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேற அது உதவி செய்யக் கடமை ஆற்றிடும், அதற்குப் போதுமான நீர் இல்லா விட்டால், அந்த சிறுநீரகம், - எண்ணெய் போடாத என்ஜின்  துருப்பிடிப்பதைபோல, இதுவும் கெட்டுப் போய் தட்டுத் தடுமாறிடும் நிலை ஏற்பட்டு டாக்சின் (Toxin)  என்ற விஷப் பொருள் உடம்பில் உற்பத்தியாகும். எனவே, போதிய  நீர் குடிப்பது மிகவும் தேவையாகும்.

4. உணவில் அதிக உப்பு ரொம்பவும் தப்பு - புரிந்து செயல்படுங்கள். சிறுநீரக பரிசோதனையில் உப்பு (Sodium) எவ்வளவு என்பதுபற்றியும் கிரியாட்டின் (Creatinine) 
அளவு சோதனை போலவே கவனிப்பார்கள். அதிக உப்பு, சிறுநீரகங்களை செயலிழக்கச் செய்ய முக்கிய காரணியாகச் செயல்படும். எனவே உடலில் உப்புச்சத்து குறைந்து விடவும் கூடாது; கூடியும் விடக் கூடாது என்பதில் விழிப்புடன் இருங்கள்.

உப்புச் சத்து அதிகம் உள்ள ஊறுகாய், கருவாடு இவைகளை அதிகம் எடுப்பவர்கள் கவனமாக இருங்கள்.

(ஊறுகாய்ப் பிரியனான நான் அதை குறைத்து வருகிறேன் - பிறகு நிறுத்தியும் விடுவேன்)

5. அளவுக்கு அதிகமாக ஒரு நாளில் பல முறை காப்பி (Coffee) 
) குடித்துக் கொண்டே இருந்தால் அது சிறு நீரகத்தை பாதிப்பது நிச்சயம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே!

எனவே அளவோடு, ஒன்று, இரண்டு முறையோடு காப்பியை நிறுத்திக் கொள்க.

6. தூக்கமின்மை: உணவு, விளையாட்டு, உடற்பயிற்சி இவையெல்லாம் நமது உடல் நலம் பேண எவ்வளவு முக்கியமோ அதுபோல தூக்கம் என்பதும் முக்கியமாகும்! குறிப்பிட்டநேரம் தூங்குவது எழுவது உடல் கடிகாரத் தினை ஒழுங்குபடுத்துவதோடு, நமது உடல்  நலத்தையும் பாதுகாக்கப் பயன்படும்!

தூக்கமின்மை என்பது பல நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது!

அண்மையில் படித்த ஒரு வாக்கியம் - பிடித்த சொற்களும்கூட!

"பகலில் தூங்கினால் அது உடல் சோர்வைக் குறிக்கிறது. இரவில் தூக்கம் வராமல் இருந்தால் அது மனச் சோர்வை - மன உளைச்சலைக் குறிக்கிறது என்று அது எவ்வளவு சரியான உண்மை!

வயது முதிந்தவர்களுக்குக்கூட குறைந்தது 8 மணி நேரம் அல்லது 7 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்கம் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள்.

எனவே, தூங்குவது அவசியம். குறிப்பாக இரவு 12 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை உள்ள நேரத்தில் கண் விழித்திருப்பதை தவிர்த்து தூங்கினால் அது உடல் நலப் பாதுகாப்புக்கு பொதுவாக நல்லது என்பது மருத்துவ ஆய்வியல் கூற்றாகும்.

எனவே இந்த ஆறு கட்டளைகளை தவறாது ஏற்று வாழக் கற்றுக் கொண்டு, சிறுநீரகம் சீராக இயங்க உதவி, நோயற்ற வாழ்வைப் பெறுவோமாக.

- விடுதலை நாளேடு, 6.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக