பக்கங்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2018

சிங்கப்பூரில் தமிழுக்கு சிறந்த ஆக்கம் இதோ!


சிங்கப்பூரில் தமிழ் மொழி வளர்ச்சி, தமிழர்களுக்கான தமிழ் கற்கும் வாய்ப்பு எல்லாம் எடுத்துக்காட்டானவை ஆகும்.

பெரும்பான்மை, சிறுபான்மை என்பதைப் பற்றி கணக்குப் பார்க்காமல், மொழி என்பது அந்த மக்களின் உணர்வு பூர்வமான பண்பாட்டு தளம் என்பதால் அதனை மதித்து, அங்கே நான்கு மொழிகளான (மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம்) ஆகியவற்றிற்கு சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்தந்த மக்களும் தத்தம் தாய் மொழிகளைக் கற்றுக் கொள்கின்றனர். அவர்தம் வழி வழி சந்ததியரான இளையவர்களும் தமிழ் மொழியைக் கற்கவும், பேசவும், எழுதவும், ஏடுகள், செய்தி நிறுவ னங்களும், தொலைக்காட்சி, ஊடகங்களும் மிகச் சிறப் பான வகையில், தமிழைப் பயன்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில்கூட, மொழி ஒலியிலும், கருத்திலும் தமிழுக்கு இத்தனைக் கவலை பொறுப்புணர்ச்சியுடன் அதன் வளர்ச்சிக்கு வித்திடுவார்களா என்பது அய்யமாக உள்ள நிலையில், செம்மொழியான எம் மொழி தமிழுக்கு சிங்கப்பூர் நாட்டின் அரசு தரும் ஆக்கமும், ஊக்கமும் மிகுந்த பாராட்டிற்குரியவை ஆகும்.

நேற்று (28.2.2018) என்னைச் சந்தித்த, தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் அவர்கள், அண்மையில் சிங்கப்பூரில் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில், தமிழ் மொழி பெயர்ப்புக் குழுவும், அதன் சொல்வளக் குழுவும் இணைந்து உருவாக்கிய கையேடு, அரசு அதிகாரிகள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழ் ஊடகங்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ் "சொல்வளக் கையேடு" - - (Glossary of English to Tamil Terms) என்ற நூலை என்னிடம் தந்தார்.

அந்நூல் பற்றிய செய்தி வந்தவுடன், அதனைப் படிக்க வேண்டும் என்ற எனது பேரவா நிறைவேறிற்று. அது கிடைத்து படித்ததில் எனக்குத் தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஆங்கில அகர வரிசைச் சொற்கள், அரசாங்க அமைப்புகள், சார்ந்த சொற்கள், சட்டப் பெயர் தொகுப்பு ஆகிய நான்கு பகுதிகள் இந்தக் கையேட்டில்  அடக்கமாகி உள்ளன.

மிகுந்த பயனுடன் சிறந்த சொல் லாக்கத்தை கொண்டதாக இந்நூல் உள்ளது.

படித்தேன் - சுவைத்தேன்!

ஏடு நடத்துவோர், வகுப்புகளை எடுப்போர், எழுத் தாளர்கள், சொற்பொழிவாளர்கள் எல்லோருக்குமே இந்த அரிய கருத்துக் கருவூலம் பயன்படும் என்பது உறுதி!

இந்தக் கையேட்டில் சுமார் 4000 சொற்கள் இடம் பெற்றுள்ளன.

இதனை   நண்பர் இலியாஸ் எனக்கு அளித்தவுடன் படிக்கத் துவங்கினேன். சொல்லாக்கங்கள் எப்படி எளிமையும், தமிழ் வலிமையும் பதியும் வண்ணமும் இந்நூலில் உள்ளன என்பதைப் பார்க்கையில் சிங்கப்பூர் அரசையும், வளர் தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினரையும் வெகுவாகப் பாராட்ட வேண்டும்.

ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லை இணையத்தில் தேடுவதில் உள்ள இடர்ப்பாடு இதன் மூலம் வெகுவாகக் குறையும். சிறப்பான சொல்லாட்சிகள் புழக்கத்திற்கு வரும் வாய்ப்புகளும், அதன் மூலம் தமிழ் வளர் தமிழாகவே உண்மையில் வளர்ந்து பெருகிப் பெரிய பயன் விளைவிக்கவும் கூடும்.

எடுத்துக்காட்டாக இதோ ஒரு சில மொழிபெயர்ப்பு - சொல்வளங்கள்.

Assassination  - அரசியல்வாதி படுகொலை, பிரமுகர் படுகொலை

Asteroid  - சிறுகோள் (செவ்வாய், வியாழன்ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறுகோள்).

Budget airlines- மலிவுக்கட்டணச் சேவை/ சிக்கன விமானச் சேவை

Business cartel  - வர்த்தகக் கூட்டு ஆதிக்கம்/இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி

Calamity  - பேரிடர் - பெருந்துயரம்

Pre emptive strike  - முன்னெச்சரிக்கைத் தாக்குதல்/முந்து நிலைத் தாக்குதல்.

Wrestling  - மற்போர்

WWW( World Wide Web) - உலக விரிவலை

Xenophobia - வெளிநாட்டவர்மீதான கடும் வெறுப்பு

இந்த 200 பக்கங்கள் கொண்ட கையேடு போன்று ஒன்று தமிழ்நாட்டிலும் நமது தமிழ் அறிஞர்கள், ஏட்டின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்கூடி தயாரித்து, உடனடி உதவி பயன்பாட்டுக்குச் செய்ய முன் வர வேண்டும்.

தமிழ் வாழ்க என்று ஆயிரம் முறை முழங்குவதை விட, இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ சாதனைகள் அளவற்றப் பயன்பாட்டைத் தருவது உறுதி! சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத்தினர், தமிழ்மொழி பெயர்ப்புத் துறையினர் இணைந்த இப்பணிகள் அனைத்திற்கும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பில் நெஞ்சம் வழியும் வாழ்த்துகள் உரித்தாகுக!

இத்தகைய ஆக்கங்கள் வருக! வளர்க! வாழ்க!

-விடுதலை நாளேடு, 1.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக