பக்கங்கள்

செவ்வாய், 20 மார்ச், 2018

தஞ்சை சரஸ்வதி மகால் ஏற்பட்டது எப்படி?



நேற்று (18.3.2018) தமிழ்ப் புலிகள் நடத்திய பெண்கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டு மதுரையி லிருந்து இரவு 11 மணியளவில் புறப்பட்ட 'துராந்தோ வேக ரயிலில்' பயணம் செய்து சென்னைக்குத் திரும்பினேன்.

தொடர் வண்டி 3 மணி நேர கால தாமதத்துடன் தான் வந்தது.

காலையில் சென்னைக்கு வந்து சேர வேண்டிய நேரத்தில், காட்பாடிக்கு முன்னே ரயில் நின்று கொண்டிருந்தது.

நல்வாய்ப்பாக மதுரையில் நேற்று என்னைச் சந்தித்த பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் பொறியாளர் டாக்டர் வா. நேரு அவர்கள் தென்கச்சி கோ. சாமிநாதன் (அகில இந்திய வானொலியில், 'இன்று ஒரு தகவல்' மூலம் பிரபலமான மறைந்தும் மறையாத இனிய நண்பர்) எழுதிய சிந்தனை விருந்து தொகுப்பு நூல் -  அவரது வானொலித் தகவல் தொகுப்பு தந்தார்; படித்து முடித்தேன் ரயில் பயணத்தில்.

பல சுவையான செய்திகளில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் ஏற்பட்ட கதை பற்றிய தகவல் இதோ!

படித்துச் சுவையுங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்.

"தஞ்சாவூரை சரபோஜி மன்னர் ஆட்சி பண்ணிக் கிட்டிருந்த காலம்.

அப்போ ஒரு தடவை அந்த மன்னர் காசி யாத்திரை போனார்.

அந்தச் சமயத்துலே கல்கத்தாவுலே இருந்த ஆங்கிலேய ராஜப்பிரதிநிதியையும் அவர் சந்திக்கறதுக் காகப் போயிருந்தார்.

அந்த ராஜப் பிரதிநிதி, தமிழ்நாட்டுலேயிருந்து ஒரு ராஜா தம்மைப் பார்க்கறதுக்காக வர்றார்ன்னதும், தமிழ் நாட்டோட அருமை பெருமையையெல்லாம் விசாரிச்சு வச்சிக்கிட்டார்.

அவரு ஏற்கெனவே திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பைப் படிச்சவர். அதோட பெருமையை எல்லாம் புரிஞ்சிக்கிட்டவர். அதனாலே அதோட தமிழ் மூல நூலைப் பத்தி தமிழ்நாட்டுலேயிருந்து வர்ற ராஜாகிட்டே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சிக் கிட்டிருந்தார்.

சரபோஜி ராஜா வந்து சேர்ந்தார். ஆங்கிலேய ராஜப்பிரதிநிதி அவரை அன்போட வரவேற்றார்!

ரெண்டு பேரும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருந்தாங்க.

அப்போ அந்த இங்கிலீஷ்காரர் தஞ்சாவூர் ராஜாவைப் பார்த்துக் கேட்டார்:

"தமிழ் நாட்டுலே உண்டான திருக்குறளோட ஆங்கில மொழி பெயர்ப்பை நான் படிச்சு அனுபவிச்சி ருக்கேன். மொழிபெயர்ப்பே அப்படி இருந்தா மூலநூல் எந்த அளவுக்கு இருக்கும்ங்கறதை நான் யோசிச்சுப் பார்க்கிறேன். அதை யாராவது சொல்லிக் கேட்கணும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு! அதனாலே திருக் குறள்லே சிலதை எனக்கு நீங்க சொல்லுங்களேன்!"ன்னு கேட்டுக் கிட்டார்.

சரபோஜி மன்னருடைய தாய் மொழி - மராட்டி (மகாராஷ்டிரம்)

அதனாலே தமிழ்லே திருக்குறளை எடுத்துச் சொல்ற நிலைமையிலே அவரு இல்லே!

ராஜப் பிரதிநிதி இப்படி கேட்டுட்டாரே என்ன பண்றதுன்னு முதல்லே கொஞ்சம் யோசிச்சார் - ராஜா! இருந்தாலும் அறிவுக்கூர்மை உள்ளவர் சரபோஜி மன்னர்.

அதனாலே அவரு அந்த ராஜப்பிரதிநிதியைப் பார்த்து, "என்னுடைய புத்தக சாலையிலே இதுமாதிரி ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் உண்டு. அதனாலே எல்லாத்தையும் நான் தெரிஞ்சு வச்சிருக்கறது முடியாத காரியம். நீங்க அனுமதி கொடுத்தா நான் ஊருக்குப் போனதும் அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!"னார்.

"இதுமாதிரி இன்னும் எவ்வளவு தமிழ் புத்தகம் இருக்கு?" ன்னு கேட்டார் அவர்.

"எவ்வளவோ இருக்குது! ஊருக்குப் போனதும் அதோட பட்டியலையும் அனுப்பி வைக்கிறேன்!"னார் இவர்.

"சரி! அப்படியே செய்யிங்க!" சொல்லிப்புட்டார் அவர்.

ராஜா திரும்பி வந்தார். யோசிச்சிப் பார்த்தார்.

தமிழ்நாட்டுக்கு ராஜாவா இருந்துகிட்டு - தமிழ் மொழியிலே கவனம் செலுத்தாமே இருந்தது எவ்வளவு பெரிய தவறு-ன்னு அவருக்குப் புரிஞ்சுது!

இனிமே அப்படி இருக்கப்புடாது-ன்னு முடிவு பண்ணினார். தமிழ்ச் சுவடிகளையெல்லாம் தேடிக் கண்டு பிடிக்கணும் - தமிழ்ப் புலவர்களையெல்லாம் ஆதரிக்கணும்-ன்னு தீர்மானிச்சுட்டார்.

அதோட விளைவுதான் இன்றைக்கு இருக்கிற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம்.

ராஜா, சொன்னது மாதிரியே திருக்குறள் பிரதியையும், தமிழ் நூல் பட்டியலையும் கல்கத்தாவுக்கு அனுப்பி வச்சார்.

சரபோஜி மன்னர் புத்தகங்களை தேடிக் கண்டு பிடிச்சு பாதுகாக்கறதுலே அக்கறையா இருந்தார்.

"நாமெல்லாம் புத்தகங்களை தேடிக் கண்டுபிடிச்சுக் கடையிலே போடறதுலே அக்கறையா இருக்கிறோம்!" என்று கூறினேன் என் நண்பர் ஒருத்தர்கிட்டே!

இதுக்கு அவரு பெர்னாட்ஷாவுக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்ணைச் சொன்னார்.

ஒரு தடவை பெர்னாட்ஷா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போயி சிலதை எடுத்துப் புரட்டிப் பார்த்துக்கிட்டிருந்தாராம்.

அவரே எழுதின நாடக நூல் ஒண்ணு இருந்தது. அதை எடுத்துப் பிரிச்சுப் பார்த்தார். அது ஒரு நண்பருக்கு பெர்னாட்ஷா ஏற்கெனவே அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகம்.

அந்த ஆளு கடையிலே போட்டுட்டார் போல இருக்கு.

பெர்னாட்ஷா மறுபடியும் அதை விலை கொடுத்து வாங்கினார். அதுலே ஏற்கெனவே 'அன்பளிப்பு'ன்னு எழுதியிருந்ததுலே அதுக்குக் கீழே புதுப்பித்த அன்பளிப்பு என்று எழுதி கையெழுத்து போட்டார். மறுபடியும் அதே நண்பருக்கு அனுப்பி வச்சுட்டார். அதாவது அன்பளிப்பை Renew பண்ணிட்டார் - 'லைசென்ஸ்'லாம் Renew பண்றாங்கள்லே, அது மாதிரி!

இந்தச் சம்பவத்தை என்கிட்டே சொன்ன நண்பர் கிட்டே நான் ஒரு கேள்வி கேட்டேன்.

"ஏன் சார்! நான் எழுதிய புஸ்தகம் ஒண்ணை  'அன்பளிப்பு'ன்னு எழுதி  உங்ககிட்டே கொடுத்தா நீங்க அந்த ஆளு செஞ்சது மாதிரியாச் செய்வீங்க?"ன்னேன்.

"நிச்சயமா அப்படிச் செய்ய மாட்டேன்! வேறே மாதிரி பண்ணுவே!"ன்னார்.

"என்ன பண்ணுவீங்க?ன்னேன்.

"நீங்க எழுதிக் கையெழுத்துப் போட்ட பக்கத்தைக் கிழிச்சுட்டு அதுக்கப்புறமா கடையிலே போடு வேன்!ன்னார்".

- புத்தகம் எத்தகைய தனிமையைப் போக்கும் மகத்தான பயனுறு நண்பன் பார்த்தீர்களா?
- விடுதலை நாளேடு, 19.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக