பக்கங்கள்

புதன், 1 மே, 2019

இதோ ஒரு பயனுறு நல வாழ்வு அறிவுரை!

உலகப் புத்தக நாளில் உங்களுக்கு ஒரு அரிய புத்தகத்தை  - வாழ்வைப் பாதுகாக்கும் பயனுள்ள மருத்துவ அறிஞர் தரும் நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்தும் மறையாத மாபெரும் மனிதநேய மருத்துவ மாமணி பேராசிரியர்  டாக்டர் செ.நெ. தெய்வ நாயகம் அவர்கள் எழுதிய "ஊட்ட மளிக்கும் உன்னத உணவுகள்" என்ற ஒரு குறுகத்தரித்த குறள் போன்ற நவில்தரும் நூலைப் பற்றிய சில செய்திகள்.
122 பக்கங்கள் கொண்ட நூலை "பாவைப் பப்ளிகேஷன்ஸ்" வெளியிட்டுள்ளனர். 15 பகுதிகள்:
1). உன்னத உணவு, 2). உணவின் அடிப்படை மற்றும் அடித்தளம், 3) சித்த மருத்துவ உணவியல் கொள்கை, 4) ஏழு உடற்கட்டுக்களுக்கான உணவுகள், 5) உடலுக்கேற்ற உணவுகள், 6) காலத்திற்கேற்ற உணவு 7) நோய்க்கேற்ற உணவு, 8) நலவாழ்வும் உணவும், 9) ஊட்டச்சத்து மருத்துவம் நவீன மருத்துவப் பார்வை, 10) கோடைக்கேற்ற சிறப்புடைய குளிர்ச்சியூட்டும் பருகு உணவுகள் (பானங்கள்), 11) தேன், 12) சமையல் கலன்களின் பயன்பாடுகள், 13) வீட்டுக்குள் கல்பாக்கமா?, 14) அரிசி என்னும் அவிழ்தரு, 15) சில உன்னத  உணவுகள்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்த தமிழ்ப் பேரறிஞரும், முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான தமிழ்த்திரு. அவ்வை நட ராசனார் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல,
"ஊதியத்தைப் பெரிதாகக் கருதாமல், உழைப் பையும், ஒழுக்கத்தையும்  அணிகலனாகக் கொண்டு வாழும் உயரிய மருத்துவ மாமணி என்று மருத்துவப் பேரறிஞர் பேராசிரியர் செ.ந. தெய்வநாயகம் அவர்களை மருத்துவ உலகமே கொண்டாடுகிறது" என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
டாக்டர் தெய்வநாயகம் அவர் களின் தொண்டறம் வியந்து போற்றத்தக்கது. அவர் லண்டனில் படித்துப் பட்டம் பெற்று, தந்தை பெரியாரைக் கண்டு (சென்னை பொது மருத்துவமனையில் அய்யா  அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற காலை) வணக்கம் செலுத்தி, இன உணர்வாளர் சுயமரியாதை வீரர் செ.தே. நாயகம் அவர்கள் வழிவந்த பேரன் என்பதை  தந்தை பெரியார்அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இளைஞர் - மருத்துவரை அன்று பாராட்டி வாழ்த்தினார். அருகில் இருந்து அக்காட்சியை - இன்பத்தை நேரில் அனுப வித்தவர்கள் நாங்கள்.
தாம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தேய்வு நோயால் (எயிட்ஸ்) அவதிப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மட்டு மின்றி உணவில் கூடுதல் இட்லி, பருப்பு, பால் முதலிய சத்துணவு களையும் அளிக்கும் நடைமுறை இவரது தலைமைக் காலத்தில் செயலுக்கு வர, தமிழக அரசினை வற்புறுத்தி வெற்றி கண்ட மனிதநேயரின் நூல் - இந்த கருத்துக் கருவூலம்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்குத் தேவைப்படும் உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் விளக்குவதோடு, நீரிழிவு நோய், காசநோய், புற்று நோய் மற்றும் கடுமையான நோய்களால் (இரத்தக் கொதிப்பு, மூல நோய் முதலியன) பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகளை எடுத்துக் கொள்வதோடு, எத்தகைய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பதையும் பட்டியலிடுகிறது! குழந்தைகள் பெற்ற தாய்மார் களுக்கும், குழந்தைகளுக்கும் தேவைப்படும் சிறப்பு  உணவுகள் பற்றியும் இந்நூல் எடுத்துக் கூறுகிறது!
ஆங்கில மருத்துவ நுணுக்கத்தோடு, சித்த மருத்துவத்தின் சிறப்புக்களையும் உடன் இணைத்து, ஆராயும் நெறியில் தலைப்பட்டு, சில முடிவுகளைக் கண்டறிந்தவர் மருத்துவர் தெய்வநாயகம் அவர்கள்!
"அரிசி எனும் அவிழ்தரு" என்ற தலைப்பில்... ஒரு செய்தி! நூலாசிரியர் மருத்துவர் கூறுகிறார்.
"கலாச்சாரக் கலப்படம், வியர்வை இல்லா உடலுழைப்பு, பெருகி வரும் மனப்பளு, இவற்றால் பெருகி விட்ட நீரிழிவு போன்ற நோய்களால், அதி சர்க்கரை உணவு என அரிசி கருதப்படுவதால் மருத்து வர்களும் அதைக் கொஞ்சம் உணவில் குறைக்கச் சொல்ல, சிலர் அரிசி உடல் நலத்திற்காகதென்றே விலக்கிட ஆரம்பித்தனர். உண்மையில் அரிசி தமிழனுக்கேற்ற தலை சிறந்த உணவு. வெயில் காலம் அதிகமுடைய, உடற் சூட்டை தரக்கூடிய இத்தென் னாட்டிற்கு அரிசியே ஏற்புடைய உணவு!
இப்படிப்பல புதிய, புதுமை விளக்கங்கள் படித்துப் பயன் பெறுக! நூலைப் படியுங்கள்! காலை, மாலை கடும் பகல் எல்லா நேரத்திலும் படிக்கா விட்டாலும் இரவிலாவது படுக்குமுன் நல்ல நூல்களைப் படியுங்கள் - சிந்தியுங்கள் - செயலாற்றுங்கள்!
- விடுதலை நாளேடு, 23.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக