பக்கங்கள்

ஞாயிறு, 19 மே, 2019

எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (1)& (2)

நேற்று 'அன்னையர் நாள்' என்று அறிவிக்கப்பட்ட நாள்!
நம்மைப் பொறுத்தவரை எல்லா நாளும் அன்னையர்களுடன்தான் இருந்து, அவர்களது அரவணைப்பில் நாமும், நம்முடைய மரியாதை கலந்த பாச மழையில் அவர்களும் என்றே வாழும் ஒரு வகை குடும்ப உறவுகளைக் கொண்டவர்கள்தான்!
தாயின் தியாகமும், தன்னலம் பாராத மன்னிக்கும் குணமும் வேறு எவருக்கும் எளிதில் வராது.
தாயைப் புறக்கணித்து, சிற்சில நேரங்களில் பிள்ளைகள் வரம்பு மீறி தகாத சுடு சொற்களை வீசினால்கூட, அன்னையர்கள் அதனைப் பொருட் படுத்தாமல் மீண்டும் மீண்டும் கவலையும், கருணை யும் கொண்ட பழகிடும் பான்மைக்கு, மன்னித்து மறத்தல் பண்புக்கு ஈடு இணை வேறு எங்கு தேடினாலும் கிட்டாதே!
பெற்ற தாய்தான் அன்பு சொரிவார் என்பதில்லை. வளர்த்து ஆளாக்கும் தாய்களும் அதற்கிணை யாகவோ அல்லது அதைமீறும் அளவிலோ, பாசப் பிணைப்புகள் வற்றாத உறவுப் பாசத்தை பொழியத் தவறுவதே இல்லை.
குறிப்பாக வளர்த்து ஆளாக்கிடும் பல பிள்ளைகளுக்கு வளர்ப்பவர் வேறு; பெற்றவர் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு குடும்பப் பாசத்துடன் இருப்பார்கள் - இருக்கிறார்கள்!
என்னைப் பெற்றவர் பற்றி  நான் அறியுமுன்பே (சுமார் 1 ஆண்டு, ஒன்றரை ஆண்டுக்குள்ளேயே) அவர் இறந்து விட்டார்.
அதற்குப் பிறகு என்னை வளர்த்து ஆளாக் கிடுவதில் பெரும் பங்கு அளித்த அம்மா - நான் விவரம் தெரிந்து, மற்றவர்கள் சொல்லும் வரை நானே இவர் நம்மைப் பெறவில்லை என்பது அறியாத ஒன்று!
பெற்றவரைவிட, வளர்ப்பவர்களின் பாசமும், கவலையும், பொறுப்பும் பல மடங்கு அதிகம் என்பதே நடைமுறை உண்மையாகும்!
நான் பெறாது பெற்ற அன்னைகள் பலர் உண்டு. அதில் பெருமையுடன் குறிப்பிடும் வாய்ப்பு - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் எனும் உலகறிந்த எனதுஅம்மாவே ஆவார்!
சட்டக் கல்லூரியில் நான் படிக்கும் போது (1956- 57இல்), தந்தை பெரியாருக்கு ஒன்றரை ஆண்டு - மூன்று ஆறு மாதங்கள் தண்டனை - செய்யாத குற்றத் திற்குத் தரப்பட்டு சிறை செல்லுமுன், "அம்மாவுக்குத் துணையாக இருந்து, இயக்கப் பணிகளைப் பார்த்துக் கொள்" என்று கூறி என்னை இயக்கப் பணிப் பயிற்சியில் ஈடுபட  வாய்ப்பளித்தார் நம் தலைவர் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
அப்போதுதான் அம்மாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னைப் பற்றிய பற்பல வாழ்க்கை உண்மைகளை என்னிடம்  கேட்டுத் தெரிந்துகொண்டபிறகு என்னை அவர்களது முதற்பிள்ளையாகவே கருதி பாசத்தை, வற்றாத அன்பைப் பொழிய ஆரம்பித்தார்!
அவர் நினைப்பதை அறிந்து செய்யும் பணி என்னைப் பற்றிக் கொண்டது.
அவரது தன்னலமற்ற, பொறுப்பு மிகுந்த, அய்யாவின் அருந்தொண்டர்களில் அணியமாகிய முதல் பெருந் தொண்டராகவே அவர் இறுதி வரை தன்னை நினைத்துப் பணிகளைத் தொடர்ந்த பாங்கு என்னுடைய உள்ளத்தில் அவரை மேலும் மேலும் பெருமைப்படுத்தி உயர்த்திய பதிவாகவே அமைந்தது!
எவரிடத்திலும் 'ஒத்தறிவுடன்' (Empathy) எதையும் கேட்டு உதவிடும் அவரது உயரிய மாண்புக்கு அன்றாட நிகழ்வில் பல உண்டு.
சிலரிடம் வறுமை, இல்லாமை அறிந்து அவர் அதற்காக இவர் கண்ணீர் விட்டு அழுது, பாதிக்கப்பட்டவர் கண்ணீரைத் துடைக்க இவர் தனது உதவிகளை - விளம்பரமில்லாமல் அய்யாவைப் போலவே செய்வார்; செய்தார்!
உபசரித்த கழகக் குடும்ப உறவுகளைக் கூட; கடன் பெற்றதுபோல் உள்ளுக்குள் நினைத்து, அதனைப் பல வழிகளில், பல தடவைகளில் திரும்பச் செய்வதில் அய்யா - அம்மா கொண்ட மன நிறைவுக்கு எத்தனையோ சம்பவங்கள் உண்டு. அய்யாவின் வாழ்விணையராக ஒரு போதும் அம்மா நடந்து கொள்ளவே இல்லை; ஒரு வேலைக்கார நிபந்தனையற்ற பணித் தாயாராகவே (செவிலித்தாயைவிட மேலான பதம் இது) நடந்து கொண்டார் என்பதை நாங்கள் அருகில் இருந்து அறிந்து, அறிந்து - வியந்து, வியந்து மகிழ்ந் திருக்கிறோம்.
அம்மா பெயரில் தான் பல வங்கிக் கணக்குகள்; காசோலைப் புத்தகங்கள் (Cheque Books). ஆனால் அவை அத்தனையும் அய்யாவின் கைப்பெட்டியில்  - ஒரு துணிப்பையில்!
அய்யா அவர்களே காசோலை எழுதி "அம்மாவிடம் கையொப்பம் வாங்கி வாருங்கள்" என்று எங்களிடம் கொடுப்பதும்; நாங்கள் கையொப்பம் வாங்கி அய்யாவிடம் தருவோம். இவை ஏன், எதற்கு, எவ்வளவு தொகை என்றுகூட பார்க்கவோ, கேட்கவோ மாட்டார்! பணியாட்களாக இருந்தால் கூட  ஒரு தெரிந்து கொள்ளும் ஆவலும்,  ஆசையும் தலை தூக்கும். அன்னையாருக்கு ஒரு நாளும் அது வந்ததே இல்லை.
அய்யா ஏன் அம்மாவைத் தேர்ந்து வைத்த நம்பிக்கை அவரது வாழ் நாளுக்குப் பின்பும் வாழ்ந்து வளர்ந்து தொடருகிறது என்பதன் ரகசியம் புரிகிற தல்லவா? மேலும்  பல நாளை.
(நாளை)
-விடுதலை நாளேடு, 14.5.19   எங்கள் அன்னை! எங்கள் அன்னை!! (2)
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் பற்றற்ற உள்ளம் பற்றி அறிந்தால், எவரும் வியக்கவே செய்வர்! அவருக்கென ஒதுக்கப்பட்ட பூர்வீக சொத்துக்களையும், தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தந்தை பெரியார் அவர்கள் அவருக்கென  - தனக்குப் பிறகு அவரது வாழ்க்கைக்கு வசதிகள் தேவை என்பதால் அவரது கடமையாகக் கருதி ஒரு ஏற்பாடு செய்தார்.
இது அன்னையாருக்கு பல ஆண்டுகள் தெரியவே தெரியாமல் செய்யப்பட்ட ஏற்பாடு!
சென்னை 1, மீரான் சாயபுத் தெரு, மவுண்ட்ரோடு, இல்லத்தை அய்யா அவர்கள் வாங்கிய நாள் முதல் தன் பெயரில் வைத்திருந்தார் - முன் யோசனையுடன். மற்ற அவரது சொத்துக்களையெல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கே எழுதி வைத்திருந்தார்!
முன்பெல்லாம் சென்னை மீரான் சாயபுத் தெரு இல்லப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி, நெரிசல் அதிகமாகி விட்டதால், வேன் நிறுத்தவும், கூச்சல் சத்தம் இவைகளின்று சற்று ஒதுங்கியும் இருக்க வசதியாக, எங்கள் அடையாறு இல்லத்திற்கு வந்து தங்கி, திருச்சி செல்லுவார்கள். நாங்கள் பெற்ற பேறு அது!
ஒரு முறை அய்யா, புலவர் கோ. இமயவரம்பன் அவர்களோடு மட்டும் - அம்மா இல்லாமல், தனியாக வந்தார். என் வீட்டில் தங்கி காலைச் சிற்றுண்டி முடித்த பின்பு, என்னையும் 'விடுதலை' நிர்வாகி என்.எஸ். சம்பந்தத்தையும் அழைத்து, 'மீரான் சாயபு வீட்டை அம்மாவிற்கு அளித்து - அவர்களுக்கு எதிர்கால சுதந்திர வாழ்வுக்கென ஒரு ஏற்பாடு செய்ய நினைக்கிறேன். அம்மா இதைத் தெரிந்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்; எப்படிச் செய்தால் சரியாக - சட்டப் படியான பாதுகாப்புடன் இருக்கும் என்பதை நமது மூத்த சிவில் வழக்குரைஞர் (மைலாப்பூரில் உள்ள) திரு. சுப்ரமணிய முதலியாரிடம் நான் அனுப்பியதாக நீங்கள் சென்று கேட்டு வாருங்கள்' என்றார்.
அதுபோலவே அவரிடம் (அவர் நமது ஜஸ்டீஸ் எஸ். மோகன் அவர்களுக்கே சீனியர் - மூத்தவர்) செல்ல, அவரும் சரியான சட்ட அறிவுரை கூறினார். 'செட்டில்மெண்ட்' எழுதச் சொல்லுங்கள். தானம் என்றால் பத்திரம் குறைவு; செட்டில்மெண்டுக்குகூட. தானம் என்றால் மாற்றலாம்; செட்டில்மென்ட் எழுதி விட்டால் அது மாற்ற முடியாது (Irrevocable) என்றும், பாதுகாப்பும் இருக்கும் என்றும் கூறினார். அய்யா விருப்பப்படி செய்யட்டும் என்றார்.
அய்யா என்னிடம் பணம் தந்து பத்திரம் வாங்கி எழுதச் சொல்லி, ராயப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில், நேரில் சென்று பதிவு செய்தார்; நாங்கள் இருவரும் சாட்சிகள் ஆவோம்.
நாங்கள் "100 ரூபாய் கட்டினால் பதிவாளரை, நம் வீட்டிற்கே வரவழைக்க லாம்" என்றோம். ஆனால் அய்யா, எதற்கு 100 ரூபாய் செலவு, நானே நேரில் பதிவாளர் அலுவலகம் வந்தால், அது மிச்சம்தானே என்று கூறி, நேரில்  சென்று பதிவு செய்தபின், பத்திரத்தை என்னிடம் கொடுக்கும்படியும் கையொப்பம் இட்டுத் திரும்பினார்.
இது "ரகசியமாக" அதாவது, அம்மா அறியாமல் நடந்தது. அய்யாவிடம் பத்திரம் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து, அய்யா மறையுமுன்  - ஒரு ஆண்டுக்கு முன்னர், பத்திரப் பெட்டியில் வேறு ஏதோ பத்திரம் தேடும் போது, அம்மாவின் கண்களுக்கு இது பட்டு விட்டது!
உடனே திருச்சியில் அன்னையார் அய்யாவிடம் ஏகத்திற்கு 'ரகளை' செய்து அழுது விட்டார்!  'எனக்கென்ன தனி ஏற்பாடு. என் செலவு, அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய என்னால் முடியுமே' என்றார்!
பிறகு அய்யா எவ்வளவோ சமாதானம் செய்தும்கூட, அவர் அமைதியாகவில்லை.
இது ஏதோ ஒப்புக்கு என்று யாரும் அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்!
அய்யா மறைந்த பிறகு, ஓராண்டுக்குள் அம்மா ஒரு தனி அறக் கட்டளையையே உருவாக்கி, அதன் முதல் சொத்தாக இந்த மீரான் சாயபு இல்லத்தைத்தான் - சொத்துப் பட்டியலில் இணைத்தார். சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது- உயிருக்குப் போராடியபோதுகூட, இந்த ஏற்பாட்டை மூன்று பெரிய மனிதர்கள் முன்னால் செய்தார்கள்!
என்னை அழைத்து 'நீ கூட என்னிடம் மறைத்து விட்டாயே' என்று கோபித்துக் கொண்டார்!  "அய்யாவின் கட்டுப்பாடு காக்கும் தொண்டன் நான் என்பது உங்களுக்குத் தெரியும்; அப்படி இருக்கையில் அய்யா அவர்கள் "ரகசியம்" என்று சொன்ன செய்தியைக் காப்பாற்ற வேண்டாமா?" என்று சொன்னேன். "சரியான தலைவர், சரியான தொண்டர்கள்" என்று தலையில் தட்டி விட்டுச் சொன்னார்!
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(குறள் - 350)
"எனக்கு எந்தப் பற்றும் கிடையாது; மனிதப் பற்று - அறிவுப் பற்று மட்டுமே உண்டு என்ற தந்தை பெரியாரைப் பற்றினார்; போற்றிப் பாதுகாத்தவரின்  "பற்றுக்கோடு" எப்படிப் பட்டது பார்த்தீர்களா? எப்படி எங்கள் அன்னை! எங்கள் அன்னை!!
-விடுதலை நாளேடு, 14.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக