பக்கங்கள்

திங்கள், 17 மே, 2021

அதிகாரவர்க்கத்தில் இப்படியும் ஓர் ஆளுமையா? அதிசயம்! அதிசயம்!!


புதிய அரசாக தி.மு.க. அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் பொறுப்பேற்றவுடன், சிறந்த ஆளுமையும், அனுபவமும், மனிதநேயமும், பண்பும் கொண்ட அதிகாரிகளை - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்பான பதவிகளில் அமர்த்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளரும், செயலாக்கமும் நிறைந்தவருமான மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரியான - தமிழ்கூறும் நல்லுலகம்பற்றி சிந்தித்துச் செயலாற்றும் இயல்பாளருமான திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ். அவர்களை நியமித்தது ஒரு நல்ல திருப்பமாகும்!

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்' (குறள் 517)

என்ற குறளுக்கேற்ப முக்கிய நியமனங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன!

சேலம் மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்க பல்வேறு முயற்சிகள் எடுத்து, தொடர்ந்து அடுத்து முயன்று இப்பெரு நிலைக்கு வந்துள்ளார்!

சமூக சிந்தனையும், அறத்தின் மாண்பும் இன்றைய அரசு அதிகாரிகளுக்கு மிகவும் தேவை - அதுவும் இந்த கரோனா கொடுந்தொற்று காலத்தில்!

அவர் அப்பொறுப்பினை ஏற்று முறைப்படி பணியாற்றிவரும் இக்காலகட்டத்தில், அவர் விடுத்துள்ள ஓர் வேண்டுகோள் அறிக்கை - படிக்கும் எவரையும் மெய்சிலிர்க்க வைப்பது உறுதி.

‘‘நான் தலைமைச் செயலாளராக இருக்கும்வரை, எந்த அரசு நூலகத்திற்கும் எனது நூல்களை வாங்கவேண்டாம். அதன்மூலம் என்னை  மகிழ்விப்பதாக எந்த அதிகாரியும் மற்ற எவரும் கருதிடக் கூடாது'' என்பதுதான் அந்த வேண்டுகோள்.

சுயநலமும், சொந்த லாபமும் இதில் எவ்வளவு மிஞ்சும் என்று கணக்குப் போட்டுப் பார்த்து, எதிலும் காய் நகர்த்திடும் இக்காலகட்டத்தில், இப்படியும் நேர்மையும், வாய்மையும் கரைபுரண்டோடும் அதிகாரியும் இருக்கிறாரே - இதை எப்படிப் பாராட்டுவது என்பதே தெரியவில்லை!

அதிகாரவர்க்கம் என்றாலே தனி வர்க்கம் - தனியானதோர் உயர்ந்த மனப்பான்மையாளர் என்று கருதி, தங்களது சுயநலநோக்கத்தோடு மற்றவர்களை ‘காக்கா' பிடித்தே பழக்கப்படும் ஒரு பரவலான சூழ்நிலை என்ற பாலைவனத்தில் இப்படிப்பட்ட ‘ஓயாசிஸ்' - பூஞ்சோலை நீர்த் தடாகமும் இருக்கின்றது என்பதைக் காணும்போது, ‘அறம் என்றும் வெல்லும்' என்பது உறுதியாகிறது!

இவர் முந்தைய அரசுகளில் முக்கிய பதவிகளிலிருந்து, ‘முக்கியமற்ற' பதவிகளில் (மறைமுக தண்டனைபோல்) மாற்றப்பட்ட காலங்களிலும் தன் சுயமரியாதையை இழக்காமல், கெஞ்சுவதில்லை எவரிடத்திலும் - எந்தப் பணியிலிருந்தாலும் - அந்தப் பணியைச் செம்மையாகச் செய்து மகிழ்வுடன் வாழலாம். அம்மாற்றத்தின்மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, புதுப்புது துறையில் அறிவைப் பெருக்கிக் கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக அது அமைய வழிவகை கிடைத்து - அதுவும் நன்மைக்கே என்ற மன நிறைவு கொண்டு - ஆக்கச் சிந்தனையும் ‘செழித்தோங்கி' சிறந்து வருபவர்.

‘‘சுயநலமில்லாதவர் - தன்முனைப்பற்றவர் - எவருக்கும் எப்போதும் பயப்படவேண்டியதில்லை. சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்பவராகவே வாழ முடியும்'' என்று கூறுவார் தந்தை பெரியார் அவர்கள்.

அதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய ஆட்சியில் புதிதாகப் பொறுப்பேற்ற, சமூக உணர்வும், அறிவியல் மனப்பாங்கும் பெற்ற பல அதிகாரிகள் வந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களில் முதல் வரிசையில் உள்ள இவர், தனது சுயநலம் துறந்த அறிவிப்பால் மிக உயர்ந்து காணப்படுகிறார்.

தமிழக ஆட்சித் துறை நிறைய ‘இறையன்புகளை' காணவேண்டும் என்பதே நம் விழைவும், பெரு விருப்பமும்!

இது அவர்களுக்காக அல்ல -

சமூக நலம் ஓங்கிப் பரவலாவதற்கு இத்தகைய சுயநலம் துறந்த அறவேரான அதிகாரிகளால் ஆட்சி மகுடம் நிச்சயம் ஒளிவீசும் என்பது உறுதி!

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி ஓங்கி  நிற்கிறார் அவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக