பக்கங்கள்

செவ்வாய், 25 மே, 2021

நம்மால் முடியும்; இன்றேல் முடிவே! - மறவாதீர்!

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி,



கரோனா தொற்றிலிருந்து நம்மை தடுத்துக் கொள்ள எளிய வழிமுறைகள் (பலரிடமிருந்து திரட்டப்பட்டவை) :

1. வீடுகளில் உள்ள ஜன்னல்களை நன்கு திறந்து வைத்து வெளிச்சத்தையும், காற்றோட் டத்தையும் ஏற்படுத்துங்கள்.

கதவுகள் ஜன்னல்களைத் திறந்து உள்ளே காற்று தாராளமாக வீசினால், எப்படி பலவகை நாற்றம், வாசனை போக, நாம் திறந்து காற்று வீச விரும்பி ஏற்பாடுகளைச் செய்கிறோமோ அதுபோன்றே, கரோனா மூலம் பரவும் (Droplets and Aerosols) மூக்கிலிருந்து துகள் - துளிகள் இந்த 'வைரசை'ப் பரப்பும்  சக்தி ஒரு தொற்று உள்ளவரிடமிருந்து அது சுமார் 2 மீட்டரிலிருந்து 10 மீட்டர் அளவுக்கு பயணிக்கும் சக்தி உள்ளதாம்! எனவே காற்றோட்டம் வெளிச்சம் முக்கியம். அடிக்கடி திறந்து வைத்து, பிறகு மூடும் பழக்கத்தினை தொடருவது நல்லது.

வேலை செய்யும் இடங்களில் கதவுகள், ஜன்னல்களும் திறந்து வைத்தல் அவசியம்.

பேருந்துகளில்கூட பக்கத்து ஜன்னல் போன்ற கதவுகள் திறந்திருப்பது அவசியம்.

2(a). தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.

2(b). பணிபுரிவோர் பலரும் N95 முகக் கவசம் தந்து அணியும்படி ஏற்பாடு செய்தல் அவசியம்.

3. கரோனா தாக்குதல் மே 29, 31களில் தமிழ்நாட்டில் உச்சக் கட்டத்திற்குச் செல்ல வாய்ப் புகள் உண்டு என்கிறார் மக்கள் நல் வாழ்வுத்துறை செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.

கரோனா சங்கிலியை உடைக்க மக்களின் ஒத்துழைப்பே முக்கியம்; இன்றியமையாதவை. 

4. கரோனா பணியில் மும்முரமாக ஈடுபட்டு, மெழுகுவத்திகளாக எரிந்து, மற்றவர்களுக்கு வாழ்வு கொடுக்க தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்த தியாக தீபங்கள் 329 மருத்துவர்கள் - என்கிறார் இந்திய மருத்துவர்கள் சங்கத் தலைவர்.

மருத்துவர்களையும், செவிலியர்களையும் அறிவும், நிதானமும் இழந்து, சிலர் அவர்களைத் தாக்குவதோ அல்லது மிருகத்தனமாக நடந்து கொள்ளுவதோ விரும்பத்தக்கதா? எண்ணிப் பாருங்கள்! இழப்பிலும் நிலைகுலையாததுதானே உறுதியான மனிதம் - அதை மறக்கலாமா?

5. இந்தக் கரோனா கொடுந் தொற்று எப்படி இவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பது பலருக்கும் புரியாமலிருப்பதை துல்லியமாக, தெளிவாக விளக்குகிறார் விஞ்ஞானி ராபர்ட் ஏ.ஜெ. சிங்கர் என்பவர். 

கரோனா தொற்று உள்ள ஒரு நபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அவர் 30 நாளில் 406 பேர்களுக்கு கரோனாவைப் பரப்புகிற நிலை கண்டறியப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.

இந்தசமூக தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்த முடியும் - எப்படி? இந்த நடைமுறை 75% கடைப் பிடிக்கப்பட்டால்  அது 30 நாளில் 2.5% மட்டுமே பரவும் அளவுக்கு குறைக்க முடியும் என்கிறார்.

25 நகரங்களில் உள்ள குடிமக்களில் 50 விழுக் காட்டினர்  முகக் கவசம் அணிவதில்லை!

அது மட்டுமா?

முகக்கவசம் அணிவோரில்கூட 64 விழுக் காட்டினர் வாயை மூடுகிறார்கள் மூக்கை மூடுவதில்லை.

20 விழுக்காட்டினர் 'தாவாக்கட்டை' வரை முகக்கவசம் அணிகிறார்கள்! என்ன கொடுமை!

2 விழுக்காட்டினர் கழுத்துப் பட்டை மாதிரி அணிந்துள்ளனர்!

அகர்வால் என்ற விஞ்ஞானி இதைக் கூறுகிறார்! ஒரு நபர்தானே என்று அலட்சியமாய் இராதீர்கள். அவர் பல நூற்றுக்கணக்கானவர் களுக்கு பரப்பும் அபாயம் உண்டு - மறவாதீர்!

இப்போது நாட்டின் சில மாநிலங்களில் குறைந்து வருகிறது.

கண்டிப்பான இந்த தடுப்பூசி, முகக் கவசம், தூய்மை, தனி நபர் இடைவெளி கடைப்பிடித்தால் கரோனாவை விரட்டலாம்.

இல்லையேல் முன்பு கரோனா பயம், இப்போது கறுப்பு கண் பூஞ்சை நோய்ப் பயமும் சேர்ந்து வந்து நம்மை அச்சுறுத்துகிறது!

பலருக்கு நோயால் ஏற்படும் சாவைவிட, பயத்தால் ஏற்படும் (நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவினால்)   மரணம் அதிலே - அநியாயம்கூட நடைபெறலாம்.

எனவே நம்மையும் காத்து நாட்டு மக்களையும் சமூகத்தையும் குடும்பத்தவரையும் காக்க கட்டுப்பாடு காத்து ஒத்துழைப்பு நல்கி -

புது வாழ்வு பெறத் தயாராவோம்

எளிய ஒரே வழி - ஒத்துழைப்பு - முகக்கவசம் மறவாதீர் - அது நம் கையில் - மனதில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக