இன்று (12.5.2021) உலக செவிலியர்கள் நாள்.
நோய்களுக்குப் பரிகாரம் தேடிட மருத் துவர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றும், சிற்சில சமயங்களில் மட்டுமல்ல, பெரும்பாலான சிகிச்சை முறைகளிலும் மருத்துவர்களைவிட அதிகமான அளவுக்கு தியாக உணர்வுடனும், தன்னை இழக்கவும் எப்போதும் தயாராக இருக்கும் போர்க் களத்துப் போர் வீரர்களைப் போன்று, கொடுந்தொற்றிலும், தங்கள் வாழ்வைப் பணயம் வைத்து, நோயுற்றவர்களைக் காப்பாற்றி புது வாழ்வு - மறுவாழ்வு அளிப்பவர்களாகவே செவிலியர்கள் ஒவ்வொருவரும் பாலின வேற்றுமையின்றி கடமையாற்றுபவர்கள் ஆவார்கள்!
அவர்களது தொண்டறத்திற்கு எளிதில் ஒப்புவமையே சொல்ல முடியாது.
அதிலும் குறிப்பாக கரோனா கொடுந்தொற்று அதன் இரண்டாம் அலையின் வீச்சை அதிக மாகவே காட்டி, மக்களை அச்சுறுத்தி, அரசு களுக்கு அறைகூவலாக இருக்கும் இத் தருணத் தில், மருத்துவ நல்வாழ்வுப் பாதுகாப்பு மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள், வீராங்கனை களைப் போல, மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் முதல் துப்புரவு தொண்டறப் பணித் தொழிலாளத் தோழர்கள் கரோனா வந்தவர் களுக்கு மட்டுமல்ல, வராமல் தடுத்துக்கொள்ள தடுப்பூசி போடும் தகைசான்ற மருத்துவத் தொண்டினை செவிலியர்களே, டாக்டர்கள் முன் னிலையில் சிறப்பாக செய்து வரலாறு படைத்து வருவது, அவர்களது முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துவதாகும்!
புதிய தி.மு.க. ஆட்சியின் தலைவரான நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.5.2021) மருத்துவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர மருத்துவ நலப் பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் என்று அறிவிப்பை வெளியிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கது. (செய்தி முதல் பக்கம் காண்க).
(இன்னும்கூட அதிகமாகவே தரலாம்; ஆனால், மாநில அரசின் நிதிப் பற்றாக்குறை என்ற கொடுவாள் அதன் தலைமீது தொங்கும் நிலைதானே இன்றுள்ள யதார்த்தம். ‘‘அவர்கள் தாயுள்ளத்துடன் சேவை செய்கின்றனர்'' என்ற முதலமைச்சரின் வைர வரி கூற்றே, பெரியதொரு ஊக்க மாத்திரையாகும்!).
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற ‘Lady of the Lamp'என்று' வரலாற்றில் இடம்பெற்ற செவிலியர் தொண்டின் கலங்கரை வெளிச்சத்தின் பிறந்த நாள் அடிப்படையிலேயே இன்றைய நாள் அமைந்துள்ளது!
நம் நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கையில் மருத்துவர்கள் ஆற்றும் பெரும் பங்கை, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் செவிலியர்களே செய்வதை நேரில் பார்த்து வியந்த அனுபவம் எனக்கு உண்டு.
1991 இல் சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ‘மில்வாக்கி' (விஸ்கான்சின் மாநிலத்தின் பெருநகரங்களில் ஒன்று) நகரில் உள்ள செயிண்ட் மேரீஸ் மருத்துவமனையில் எனக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படும் பிரபல டாக்டர் டட்லிஜான்சன் - (மற்றொருவர் டெக்சாஸில் வாழ்ந்த டாக்டர் கூலி) இதய மாற்று (Bypass Surgery) அறுவை சிகிச்சை செய்தார். 5 நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, அறுவை சிகிச்சை மருத்துவரை நேரில் பார்த்தது மூன்று முறைதான்! ஒன்று, அறுவை சிகிச்சை யன்று; மற்றொன்று வழியனுப்பியபோது. (இடையில் இந்தியாவிலிருந்து வந்தவன் என்பதால், அவர் கனிவுடன் வந்து என்னைப் பார்த்து நலம் விசாரித்து அறிவுரை வழங்கிய வாய்ப்பு).
மற்றபடி எல்லா பணிகளையும் மேற்பார்வை, அறிவுரை, வழி நடத்தியமை எல்லாம் இருபால் செவிலியர்களே!
என்னே அன்பு! கவனம், பராமரிப்பு, ஊக்கமூட்டல், ‘தாயினும் சாலப் பரிந்து' கவனித்த முறை - இறுதியில் உடலில் தைத்திருந்த தைய லைப் பிரித்து இழுக்கும்போதுகூட, உரையாடி, நம்மை திசை திருப்பியே வலியை மறக்கச் செய்த அவர்களது பணி செய்த முறை என்னால் மறக்கவே முடியாத நிலை. (அவ்வப்போது டாக்டர்கள், செவிலியர்களிடம் தொலைபேசி மூலம் நோயாளிகள்பற்றி கேட்டறிந்து, சிகிச் சைக்குத் தேவைப்படும் அறிவுரையை செவி லியரிடமே வழங்குவர்).
(பெரியார் பன்னாட்டமைப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், அவரது காரில் என்னை அமர வைத்து, ‘அஷ்டாவ தானம்'போல ஒரே நேரத்தில் வியக்கத்தக்கப் பணிகளை செய்வதை நேரில் கண்டு நான் வியந்து அதிர்ந்தேன்.
காரில் பயணம் செய்யும்பொழுது, செவி லியரை தொலைப்பேசியில் அழைப்பார். நோயாளிகள்பற்றிய அப்போதைய நிலை - அதற்குத் தரவேண்டிய மருந்து, நம்மிடம் இடையே உரையாடல், காரில் பெரியாரின் உரையை காதால் கேட்பது (ஆடியோ) - கார் டிரைவிங், கவனத்துடன் ஓட்டுதல் - தூரத்தையும், நேரத்தையும் துரத்திவிட்ட அதிசயம் இவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். கடமையில் கண்ணாக இருப்பார். செவிலியர்களுடன் மிகவும் அன்புறவுடன் வேலை வாங்குவார் - நேரில் கண்டுள்ளேன்).
தமிழ்நாட்டில் தரத்துடன் புதிய நர்சிங் கல்லூரிகளைத் தொடங்கி நடத்திட அடிக்கட்டு மானத்தை மேலும் விரிவாக்கி, கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை தரவேண்டியது - செவிலியர்கள் எண்ணிக்கையைப் பெருக்கும்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் இவ்வகைத் தொண்டு அளப்பரியது; எடுத்துக் காட்டானது ஆகும். கிராமப்புற பெண்களை அவர்கள் நல்ல முறையில் ஆயத்தப்படுத்தி, கல்வி அறிவை உண்டாக்கி வருகின்றனர்.
செவிலியர்களுக்கு நம் இதயம் கனிந்த வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக