July 17, 2020 • Viduthalai
நமது வாழ்க்கை தான் எத்தனை எத்தனை அனுபவங்களை நமக்குக் கற்றுத்தரும் முதல் ஆசானாகவே அமைகிறது! எண்ணிப் பாருங்கள்.
நம் வாழ்வில் எத்தனை கசப்பான அனுபவங் கள், எத்தனை மகிழ்ச்சிகரமான இன்ப ஊற்றுகள்! அதே நேரத்தில் அதை மிஞ்சும் துன்பமும், துயர மும் நிறைந்த துன்பக்கேணிகள்தான் எத்தனை! எத்தனை!!
அதுவே சிலருக்கு ‘‘குளம்''; பலவீனமான மனமுடையோருக்கு அதுவே ‘‘துன்பக்கேணி'' அல்லது ‘‘துன்பக் கடலாகத்'' தெரிகிறது; இதில் வீழ்ந்த நாம் எப்படி நீந்தி கரைசேரப் போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி அயர்வினைத் தருகிறது.
மனிதநேயம் தான் சமூகத்தின் ஆணிவேர்! அதனால்தான் பாசத்தோடு சாயாத மரங்களாக பற்பல நேரங்களில் ஓயாத புயல் அடித்தாலும் அவை அதனை எதிர்கொண்டு மீளுகின்றன. நம்பிக்கை என்னும் இதயத்துடிப்பு - எதைப் பற்றியும் கவலைப்படாமல் - தனது ஓய்வில்லாப் பெரும் பணியைச் செய்வதில் சளைக்காத ஓர் இயந்திரமாக ஆகிறது!
நாம் மிகவும்நேசிப்பவர்கள் - நம்மை மிகவும் நேசித்தவர்கள் இவர்கள் உடல் நலக் குறைவுற்று அல்லது இயற்கையின் நியதிப்படி நம்மிடமிருந்து ‘விடைபெறும் போது', அந்த மரணம் இயற்கை தானே, பிறப்பது எப்படி உறுதியோ அப்படி இறப்பதும் இயல்பான ஒரு நடவடிக்கைதானே என்ற நினைப்பா வருகிறது?
என்னதான் பதவி, பவிசு, பணம் எல்லாம் ஏராளம் இருந்தாலும், முதுமையை எப்படி தவிர்க்க முடியாதோ, அதுபோல் மனித வாழ்வின் முடிவான கட்டம் மரணம்தானே என்ற தத்துவ ரீதியான உலகியலை - உளவியலை எண்ணி நம்மைத் தேற்றிக் கொள்ள முடிவதில்லையே!
வரவேற்கத் தெரிந்த நமக்கு, வழியனுப்பி வைக்கும் தெளிவும், துணிவும் ஏனோ வருவ தில்லை! மனித இயல்புகளின் விநோத விசித்திரங் களில் இதுவும் ஒன்றுதான்!
'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?' என்று கவிதை வரிகளில் கேட்ட கவிஞனின் கருத்துரை, துயரக் கடலில் மூழ்கிய போது மூச்சடக்கி தத்துவ முத்துக்களை எடுக்க உதவுகிறது! எளிதில் விடை காண முடியாத விவேகமான கேள்வி அது!
புத்தர், வள்ளுவர், பெரியார் போன்ற ஞானிகள் - மரணத்தை உலகின் இயல்பாகவே கருதி, ‘‘துன்பத்தினால் துவண்டு விடாதீர்கள், இன்பத்தின் உச்சத்திற்குப் போய், இதற்கு மேலும் செயலில் ஏறிடும் 'நுனிக்கொம்பர்'களுக்கு ஆளா னால் அதுவே உயிர்க்கிறுதியாகி விடும் என்ற இயற்கையின் உண்மையைக் கூட மறந்துவிட்டு, ஏனோ எளிதில் மனதில் அதனை ஏற்கத் தயங்குகிறீர்கள்'' என்றல்லவா கேட்கிறார்கள்.
அதுவும் கரோனா தொற்று உலகத்தையே உலுக்கி உலுக்கி ஒர் உண்மையைக் கற்றுக் கொடுத்து விட்டது! நோயைக் கண்டு அஞ்சாதே; எதிர்த்துப் போராடு; மரணம் தான் இறுதியில் என்றால் எதை ஏற்க முடியாதோ அதை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு ஆயத்தமாக பிறரை தயார்படுத்து!
நம் மனதின் திட சித்தம் நன்கு பக்குவப்பட்டிருக் கிறதா இல்லையா என்பதற்கு அளவுகோல் - உண்மையின் முதிர்ச்சியின் முத்திரையை நாம் பெற்றிருக்கிறோமா இல்லையா என்பதை அறிவிக் கும் மானி - இந்தப் பிரிவும், துன்பம் - துயரமும்! இவற்றைத் துணிவுடன் ஏற்று, ஓர் இராணுவ
வீரன் எப்படி கடைசி வரை தனது கடமையிலி ருந்து பின்வாங்காத உறுதி கொண்ட நெஞ்சின னாய் கடமையாற்றுகிறானோ அதே உணர்வைப் பெறுதலே அந்த அளவுமானி!
நம்மில் எத்தனைப் பேருக்கு இத்தகைய தன்மை உள்ளது!
அதுதான் இப்போதைய கேள்வி!
மிகுந்த பலவீன, கோழை மனம் கொண்டு, இயற்கை மரணத்தை ஏற்க மறுத்து தற்கொலை என்ற குறுக்கு வழியினைத் தேடுவதைப்போல மோசமானது மனித வாழ்வில் எதுவுமே இல்லை. உண்மைப் பிரச்சினைக்கு அது உண்மையான தீர்வு காண்பதில்லையே!
"கரோனா காலத்து மரணங்கள்,
மிகவும் நேசிப்பவர்களின் பிரிவுகள்,
கைம்மாறு கருதாத நம்மை வாழ வைத்த வள்ளல்களான வாழ்வளித்தோர்,
நம் கொள்கைத் தோழர்கள்,
மனித நேயத்தோடு வாழ்ந்த மகத்தான மாண் பின் சிகரங்கள்
இவர்கள் மறையும் போது - நமது உள்ளத்தில் பீறிட்டுக் கிளம்பும் பாசத்தினை நினைத்து, நினைத்து, இதனைக் கனத்த இதயத்தோடு எழுதி முடித்து, எனது இதயத்தை லேசாக்கிக் கொள்ள முயலுகிறேன்." அவ்வளவுதான், நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக