நமக்கு மதி உரைஞர்களாகவும், வழிகாட்டும் மூத்தோர்களாகவும் முழுமதிபோல் என்றும் வெளிச் சத்தையும், குளுமையையும் தரக்கூடிய பலரைப் பெற்றதைவிட பெருஞ்செல்வம் வாழ்க்கையில் ஏதும் இல்லை.
மனத்துக்கண் மாசற்ற மாமனிதர்கள் நமக்கு என்றும் ஒளி விளக்குகள்; அதைவிட மேலான கலங்கரை வெளிச்சம் நமது வாழ்க்கை கலத்திற்கு என்று கருதிடும் பண்புடையும், அன்புடையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான ஆளுமை - அனுபவக் களஞ்சியம், எளிமையோடு எவரிடத் திலும் கருணையும், வாஞ்சையும் காட்டி ஊக்கப்படுத் தும் உயர் மனிதர்களில் ஒருவர் 92ஆம் அகவையில் உள்ள மிசோரம் மாநில மேனாள் ஆளுநரும், சிறந்த பண்பின் பெட்டகமுமான அய்யா திரு.ஆ.பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்கள். ஆழமும். அடக்கமும் கொண்டவர். முதுமுனைவர் பட்டங்கள் பெற்றவர், ஆங்கிலப் புலமையாளர்; கவிஞரும் கூட! பல்வேறு பதவிகளின் ஆளுமையில் முத்திரை பதித்து, தூயவ ராகவே வாழ்ந்து வருபவர்.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், மேனாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதலியவர்களின் அன்புக்குப் பாத்திரமான ஒரு மனித நேயர்.
வடபுலத்திலும் பல குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களின் பாராட்டைப் பெற்ற ஆளுமையின் சின்னம் ஆவார்.
சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்; அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதை ஆட்சியில் இருந்தபோது நடைமுறைப் படுத்தத் தவறாத சமூக நீதித் தராசு.
அவரை சென்ற சில மாதங்கள் முன் நலம் விசாரித்தேன். மகிழ்ந்தார். முதியவர்களை இந்த கரோனா காலத்தில் நலம் விசாரிப்பது, அவர்களுக்குத் தரும் மகிழ்ச்சியை விட நமக்கு அதிகமான - எல்லையற்ற - மகிழ்ச்சியைத் தருவதாக அமைகிறது.
நேற்று (9.10.2020) மாலை எனது இல்லத்திற்கு அய்யா திரு.ஆ.பத்மநாபன் அவர்கள் தாம் எழுதிய சில நூல்களையும், தன் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் ஓய்வு பெற்ற பொறிஞர் திரு.நயினார் மூலம் கொடுத்தனுப்பினார். பெற்று மகிழ்ச்சி அடைந்தேன். அவரது அக்கடிதம் - அவர் கையா லேயே எழுதியதை அப்படியே கீழே தருகிறேன்.
மிசோரம் மாநில மேனாள்
ஆளுநர் மேதகு அ.பத்மநாபன் அவர்கள்
தமிழர் தலைவருக்கு எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்
ஆ.பத்மநாபன் அய்.ஏ.எஸ்.(பணி நிறைவு) மேனாள் ஆளுநர் சென்னை
மிசோரம் மாநிலம் 9.10.2020
மரியாதைக்குரிய டாக்டர் வீரமணி அவர்களுக்கு,
வணக்கம். மிசோ மொழியில் ஆக்கம் செய்யப்பட்ட திருக்குறள் புத்தகத்தை, பிற சில புத்தகங்களையும் இத்துடன் தங்களுக்கு அனுப்பி யுள்ளேன். நான் மிசோரம் மாநில ஆளுநராக இருந்த பொழுது, எடுத்த முயற்சியில் மிசோ மொழியில் மாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் நூலாகும் அது.
தாங்கள் தங்களுடைய கொள்கை சார்ந்த செயல்பாட்டில் மிகுந்த உறுதிப்பாடு கொண்டு, உற்சாகத்துடன் சமுதாயப் பணி ஆற்றி வருகிறீர் கள். தங்களது பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்மதிப்புடன்...
பெறுநர்
டாக்டர் கி.வீரமணி அவர்கள் தோழமையுள்ள,
தலைவர் & அறிஞர் ஆ.பத்மநாபன்
- - - - -
எத்தகைய ஊக்கச்சத்து! எவ்வளவு பெருந் தன்மை மிளிரும் பண்பாடு. எதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால் வாழ்வியலில் பெறற்கரிய பேறு என்பது பதவி அல்ல; கோடானுகோடி செல்வம் அல்ல!
எவ்வித கைம்மாறும் வேண்டா கடப்பாடுடைய மாரி போல வழங்கும் - பாராட்டு - பண்புரைகள் - தொண்டறம்! அறிவும் அனுபவமும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்குக் கிடையாது என்ற ஆணவத்துக்கு சரியான மறுப்புரை போன்ற சாதனைகள் பொங்கும் வாழ்க்கை வாழ்ந்து காட்டி, ஓய்வு பெற்றும், மற்றவர் களை ஊக்கப்படுத்தி, வேலை வாங்கி சமுதாயப் பலனைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எவ்வளவு உயர்ந்த ஒன்று!
"பண்பு உடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் 996)
"பண்புடையவர்களால் போற்றப்பட்டு வருவ தால், உலகியல் நடப்பானது எப்பொழுதும் நிலை பெற்று நின்று இயங்கி வருகின்றது. அப்படிப்பட்ட பண்புடையவர்கள் இல்லாமற் போய் விடுமேயானால் போற்றப்படும் உலகியல் நடப்பு, மண்ணில் மறைந்து போய்விடும் என்பது உறுதி" என்பது இக்குறளின் கருத்து.
அவர் அனுப்பிய நூல்கள் பல்வேறு அரிய தக வல் களஞ்சியங்கள் - வெறும் வாழ்க்கைத் தொகுப்பு அல்ல.
அய்யா ஆ.ப. அவர்கள் எழுதிய கடிதம். கையெழுத்தோடு இந்த வயதிலும் எவ்வளவு தெளிவு, பண்புக்கான ‘பளிச்' என்ற எழுத்தாக உள்ளது என்பது பாராட்டத்தக்கது!
ஊக்கப்படுத்துதல் - உற்சாகமூட்டல்கள் பொது வாழ்க்கையில் பாராட்டப்படுபவர்களுக்கு மேலும் பொறுப்பை உணர்த்தும் எச்சரிக்கை மணியாகவே கருதி அதற்கு தலைதாழ்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.