பக்கங்கள்

புதன், 16 டிசம்பர், 2020

முதுமை: இன்பத் திளைப்பா, துன்பத் துளைப்பா!



உலகம் ஒவ்வொரு நாளையும் ஒரு சிறப்பு நாளாக - நல்லொழுக்க நன்னெறி நிலைத்திட நினைவூட்டும் நாளாக பற்பல நாட்களையும் பகுத்துள்ளது.


அவை வெறும் நாட்காட்டியின் அச்சுதானா? செயலில் காட்டப்படவேண்டியவைகள் அல்லவா!


அன்பெனும்பிடியில் அகப்பட்டு மகிழும் நாள்,  அந்நாளே! சிந்தித்துப் பிறகு செயலாற்றி மற்றவரையும் மகிழ்வித்து, தங்களது மகிழ்ச்சிக்கும் காப்பீடு செய்து கொள்ளும் நாள் தான் இன்று (ஜூன் 15)  முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்!


இந்தத் தலைப்பே ஒரு சோகப் படலத்தைச் சுட்டிக் காட்டி அதற்குரிய புது வழிகாணும் நாள் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.


இது இளைய தலைமுறைக்குப் பெருமையா? சிறு மையா? கொடுமைக்கு அவசியமே இல்லாத அன்பில் திளைத்தவர்களாக மூத்தோர்கள், முதியவர்கள் வாழ்க்கை அமையுமானால், சந்ததியினாரால் கொடு மைகளுக்கு இடம் உண்டா? கொடுமை ஏற்படுவது நியாயமாகுமா?


‘பால் நினைந்தூட்டிய தாயின் மார்பகம் புற்று நோய்க்கு ஆளாகியது' என்பதால் துடித்திடும் பாசத் தின் உருவம்தானே - ஊட்டி வளர்க்கப்பட்ட அந்தப் பிள்ளைகள்? ‘நோய் வந்துவிட்டது, அப்படியே ஒதுக்கி விடு, ஓரங்கட்டி விடு' என்று கூறி, ஓடிப்போவது நன்றி கெட்டத் தனம் மட்டுமா? நல்லவர்கள் ‘‘தூ''வென்று காறித் துப்பும் அவமானத்தின் உச்சமல்லவா?



பிள்ளைகளே, பேரப் பிள்ளைகளே, பிஞ்சுகளே, வீட்டில் உள்ள உங்கள் முதியோர்களை ‘‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்'' என்று நினைக்காதீர்கள்;  எல்லாவற் றிற்கும் உதவியவர்கள் அவர்களே என்பதை மறக் காதீர்கள்; எனவே அவர்களை ஒதுக்காதீர்கள்.


ஒதுங்காதீர்கள் - அவர்களைவிட்டு!


பதுங்காதீர்கள் - அவர்களைப் பார்ப்பதைத் தவிர்க்க!


அவர்கள் வாழ்க்கை எப்படி முதுமையை அடைந்தது?


அவ்வையாரை நினைக்கும்போது, அவர் ஏதோ பிறந்த போதே கிழவியாகத்தான் பிறந்தார் என்பது போன்ற ஒரு தவறான சிந்தனை நம்மில் பலருக்கும் ஏற்பட்டதுண்டு; காரணம் நம் மனதில் பதிந்தது பாட்டி அவ்வையாராகத்தான். அவரது இளமைப் பருவம் தான் முதுமையடைந்துள்ளது என்ற எண்ணமே பல ருக்குத் தோன்றுவதில்லை. அதுபோல்தான் பேரர்க ளும்கூட தாத்தாக்களை, பாட்டிகளை, பிள்ளைகள்கூட வயது தந்தையர்களை - அன்னையர்களைப் பார்க்க (அவரது சந்ததிகள்) தயங்கக்கூடாது! 


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அவரது ‘குடும்ப விளக்கு' இலக்கியத்தில் ஓர் ஓவியம் தீட்டி யுள்ளார்.


("முதியோர் காதல்" - 5ஆம் பகுதியில்)


"ஆடிய பம்ப ரங்கள்


அல்லவா அம்மூத் தோர்கள்?


மணவழகர் உடல்நிலை


மணவழ கர்க்கு முன்போல்


வன்மையோ தோளில் இல்லை!


துணைவிழி, ஒளியும் குன்றக்


கண்ணாடித் துணையை வேண்டும்;


பனையுடல், சருகு! வாயிற்


பல்லில்லை! மயிர்வெண் பட்டே!


உணவெலாம்! பாலின் கஞ்சி;


உலவுதல் சிறிதே ஆகும்.


தங்கத்தம்மையார் உடல்நிலை


நன்னிலாக் கதிர்போல் கூந்தல்


நரைத்தது. கொண்டை யிட்டு


முன்னிலா முகில்உண் டாற்போல்


முகத்தொளி குறைய லானார்!


அன்புடல் அறத்தால் தோய்ந்த


ஆயிரம் பிறைமூ தாட்டி


மன்னுசீர் அன்னாள் மெய்யோ


வானவில் போற்கூ னிற்றே!


முதியோர் அறைக்கு மக்கள்


பேரர் வந்து போவார்கள்


இருபெரு முதியோர் தம்மைத்


தலைக்கடை அறைசு மந்து


பெரும்பேறு பெற்ற தன்றோ!


பிள்ளைகள், அவர்ம னைமார்


வருவார்கள்; அறங்கேட் பார்கள்.


மற்றுள பேர்த்தி பேரர்


வருவார்கள் அளவ ளாவி


மணியோடு பள்ளி செல்வார்.


இரு முதியோர் நிரம்பிய உள்ளம்


மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்


மகள்மார்க்கும் அவ்வா றேயாம்


எம்தக்க கடன்மு டித்தோம்


இனிதாக வாழு கின்றோம்;


முந்துறச் சுற்றத் தார்க்கும்


செய்வன முழுதும் செய்தோம்;


இந்தநாள் வரைக்கும் வாய்மை


இம்மியும் மறந்த தில்லை.


நாட்டுக்கு நலம் செய்தோம்


இந்நாட்டின் நலனுக் காக


நல்லறம் இயற்றி வந்தோம்.


எந்நாளும் பிறர்க்குத் தீமை


எங்களால் நடந்த தில்லை.


சின்னதோர் நன்று செய்தார்


திறம்மறந் தறியோம் என்றே


இன்னிசை பாடும் அன்னார்


இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்."


- இப்படி ஒரு கூட்டுக் குடும்பத்து உறுப்பினர்கள், பெற்ற பிள்ளைகள் முதல் உற்ற பேரர்கள் - பேத்திகள் வரை தத்தம் அன்பினை வற்றாத ஜீவநதியின் அலைகளாய்ப் பாய்ச்சிக் கொண்டே கடமையாற்றும் நிலை இருந்திருந்தால், மேற்கண்ட ஒரு நாள் - அதுவும் பன்னாட்டு அளவில் ‘‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்!'' என்று  உருவாகி இருக்குமா?


அன்பும் பாசமும் காட்டுவது பெருந்தன்மையும், பெருங்கடமையும் மட்டுமல்ல; கொஞ்சம் ஆழமாக இளந்தலைமுறையினர் சிந்தித்துப் பார்த்தால், அது ஒருவகையான விதை நடும் பணி என்பது விளங்காமல் போகாது.


எப்படி என்கிறீர்களா?


முதுமையடைந்த பெற்றோர்களுக்கு நீங்கள் திருப்பித் தரும் பாசம்  உங்களுக்கே எதிர்காலத்தில் மீண்டும் திரும்பி வரக்கூடியதே என்பது புரிய வேண் டாமா?  நாளைக்கு இளையவர்களும் முதியவர்கள் ஆகும்போது அவர்களது பெற்றோர்களிடம் காட்டிய பாசமும், கடமை உணர்வும் தானே இவர்களுடைய பிள்ளைக்கு வழி காட்டும் துணைவன் - வெளிச்சம் இல்லையா!


முன் ஏர் சரியாகப் போனால்தானே - பின் ஏர்க ளும் சரியாகச் சென்று உழவுப் பணியை ஒழுங்காக முடிக்க முடியும்?


ஆனால், இன்றைய சமுதாயத்திலோ, ‘கணக்குப் போட்டுப் பழகும் கயமைத்தனம், படமெடுத்தாடுகிறது. கடைந்தெடுத்த சுயநலம் கட்டுப்பாடற்ற மக்களின் வாழ்வாகிவிட்டது! சமூகத்தில் எத்தனை எத்தனை சொல்லொணாக் கொடுமைகள்! ஏய்ப்புகள்! சொந்த பெற்றோர்களைக்கூட நடுத்தெருவில்  ஈவு இரக்க மின்றி நிறுத்திடும் நயவஞ்சக நரித்தன சொல்லொணாக் கொடுமை!


(நாளை மேலும் ஆராயலாமே!)

முதுமை: இன்பத் திளைப்பா, துன்பத் துளைப்பா! (2)


நேற்று "15 - ஜூன்" என்பது ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு நாள்‘ என்பதால் அது பற்றிய - முதியோரை மதிப்பதும், பாசப் பிணைப்பில் அவர்களைக் கட்டிப்போட்டு, மனதில் கனமற்ற, சினமற்ற சீரிய வாழ்வுக்குரியவர்களாக அவர்களை ஆக்குவதும் நமது சுயமரியாதை வாழ்வியலின் முக்கிய அம்சம் என்பதை விளக் கிடவே புரட்சிக் கவிஞரின் - ‘குடும்ப விளக்கு' காவியத்தின் 5ஆம் பகுதியான ‘முதியோர் காதல்' பகுதியை எடுத்துக் காட்டினோம்.


‘முதியோர் காதல்' என்ற தலைப்பிலேயேகூட முதியோர்களிடையே காதல் - வயது முதிர்ந்த நிலையில் கூட உண்டு என்பது வெளிப்பாடாகிறது. காரணம் ‘காதல்' என்ற சொற்றொடர் வெறும் உடல் இன்பத்தையே மய்யமாகக் கொண்டது அல்ல. ஏன் ‘காமம்' என்பதற்குக்கூட திருவள்ளுவர் விரிந்த பொருளைத் தந்துள்ளார் என் பதை குறளைப் படிக்கும் பலரும் அறிவார்களே!



‘கல்லாதான் சொல் காமுறுதல்' என்ற குறளில் காமுறுதல் என்பது, ‘விரும்பும் தன்மை', ‘அவாவும் தன்மை' - ‘ஈர்ப்பு' என்பதைத்தானே குறிக்கிறது? அதுபோல ‘முதியோர் காதல்' என்று புரட்சிக் கவிஞர் கொடுத்த தலைப்பு - அன்பு, ஆசை, ஒருவரை ஒருவர் கைம்மாறு கருதாது நேசித்தல், ஒருவர் பற்றிய கவலை - அடிநீரோட்டமாகவே மற்ற இணையருக்கு ஏற்படுவது எல்லாம்தான் அந்த "முதியோர் காதல்" - புரிகிறதா?


முதிய வயதில்கூட ஏற்படும் ‘ஊடல்கள்' ஏராளம் - எப்போதும் உண்டு. அவை வெறுப் பால், உண்மை கோபத்தால் வெளிப்படுபவை அல்ல; மாறாக,  முதிய வயதில் ஒருவரை ஒருவர் அளவற்று நேசிப்பதின் பயனாக முந்துறும் பொறுப்பான வெளிச்சம் தான் அது என்பது மனோதத்துவம் - உளவியல் - புரிந்தவர் அறிவர்!


எனவே ‘முதியோர் காதல்' என்ற மிக அற்புத மான தலைப்பை நாம் சற்று அகலப்படுத்தலாமே!


முதியோர் மேல் இளையோர் ‘காதல்'  என்பது பொறுப்பை உணர்ந்து, நன்றி பாராட்டுதல் என்ற ஆழ்மனதின் அடி நீரோட்ட அலையாகவே கருதவேண்டும். நாம் நமது பெற்றோர்களை, தாத்தா, பாட்டிமார்களைக்கூட ‘காதலிக்க'க் (ஈர்ப்பு டன் அன்பு காட்டக்) கற்றுக் கொள்ள வேண்டும்; இது அவர்களுக்கும் பெரும் நன்மை என்பதோடு, முதியவர்களுக்கும் பெரும் லாபம்! எப்படி எனில், இது இளையர்களது வருங்காலத்திற்கான வைப்பு நிதி (Fixed Deposit).


"வட்டியை" மட்டும் (அவ்வப்போது ஏற்படும் மகிழ்ச்சி) அனுபவிக்க வேண்டும். நாளை நாம் முதியவராகும் நிலையில், இன்று நாம் நமது பெற்றோரிடம் காட்டும் பாசமும், அன்பும், நன்றி யின் வெளிப்பாடான கடமையின் கடப்பாடுதான் என்பதை நம் பிள்ளைகளுக்கு மறைமுகமாக நாம் கற்றுக் கொடுக்கும் பாடம் - இல்லையா?


எனவே, பெற்றோர்களிடம் அன்பு காட்டுதல், பாசம் கொட்டுதல், பண்பாடு குறையாத "மனம், வாக்கு, காய" 'திரிகரணசுத்தியுடன்' நடந்து கொள் ளுவது என்பது நமது வருங்கால வாழ்வுக்கான வைப்பு நிதி மட்டுமல்ல; நம் மனம் சோர்வடை யாமல், சங்கடத்தைச் சந்திக்காமல் இருக்கச் செய்யும் ஒருவகை காப்பீடும் (Insurance) ஆகும்! தந்தை பெரியார் அவர்கள் ஒரு தத்துவ ஞானியாக உயர்ந்து நின்று சொல்லுவார், "சுயநலம் என்பது, உண்மையில் அது பொதுநலம் - பிறர் நலம்; பொதுநலம் என்பது உண்மையில், தன்மை யில் அது சுயநலம் - தனக்கு எல்லையற்ற மகிழ்ச் சியைத் தரத் தானே, ஒருவன் செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடு" என்ற கருத்தடங்கிய வகையில்!


அதே கோணத்தில், நமது பெற்றோர்களை நாம் நடத்தும் முறைதான், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் நாம் எங்கிருந்தாலும் முறையாக நம்மிடம் நடந்து கொள்ளத்தக்க முன்னோட்டமாக அமையும்.


இன்றைய சமுதாயத்தில் எல்லாமே வேகம்! வேகம்!!  வேகம்!!! அவரவரும் அலுவல் பணி என்று ஓடிக்கொண்டே, ஏன் - ‘கடிகாரம் ஓடு முன்  ஓடிக்கொண்டே' உள்ள நிலையில், (கரோனா - கோவிட்19 காலம் அதற்கு இயற்கை தந்த ஒரு விசித்திர விதிவிலக்கு என்றாலும்கூட, அது தற் காலிகம்தானே!) இளையர்கள் நம்மிடம் நிறைய நேரத்தை செலவழிக்கவில்லையே என்று  முதி யோர் தேவையற்று ஏங்கும் நிலையோ, எப் போதும் நம்மையே விசாரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையோ முதியோ ரும் - எதிர்ப்பார்ப்பதும் நியாயமல்ல, தேவையு மல்ல!


எங்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லையோ அங்கு ஏமாற்றங்கள் அதிகம் ஏற்படவும் வாய்ப்பு இல்லை என்பதுதானே உலகியல் உண்மை!


எனவே, இன்றைய வேக உலகத்தில் பிள்ளை களிடம்  முதியோர்கள் அதிக எதிர்பார்ப்பை எதிர்பார்ப்புக் கொள்ள வேண்டாம். காலத்தைக் கனிவுடன் நம்மிடம் அவர்கள் செலவழிப்பார்கள் என்பதை நம்புங்கள். அதிகமான எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளாதீர்கள்!


ஆனால், பேரப் பிள்ளைகள் அப்படியல்ல. தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும்  உற்ற நண்பர்களைப் போல் பாசப் பொழிவுகளாக இருப்பர் - எங்கும் என்பது பொதுவானது - சில விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.


(நாளையும் ஆராய்வோம்!)

முதுமை: இன்பத் திளைப்பா, துன்பத் துளைப்பா! (3)


முதியவர்களாக வீட்டில் இருப்போர் தத்தம் நேரத்தை மிகவும் திட்டமிட்டு செல வழித்தால் முதுமை எப்போதும் ‘இளமையாகவே' தென் படக்கூடும்! அது பிறர் கையில் இல்லை; நம் மனதின் திட்டத்தால், செயலின் வடிவத்தால் அதை எளிதாக அடையலாம்.


உடற்பயிற்சி - பெரிதும் நடைப்பயிற்சி - அதற்கும் இயலாதவர்கள் வீட்டுக்குள்ளே நடந்து, தத்தமது அன்றாடக் கடமைகளை முடித்து மற்ற வர்களுக்குக் கூடுமான வரை ‘பாரமாக' இல்லாத அளவுக்கு நமது பணிகளை நாமே செய்ய இளமை முதற்கொண்டே பழகி வந்தால், இது இயல்பான தாகி விடும்; ஓய்வு பெற்றவர்கள்கூட திட்டமிட்டு பணிகளை வகுத்துக் கொள்ளலாம். உணவு - மதியம் ஒரு லேசான தூக்கம் 'siesta' - முழுத்தூக் கம் இரவு தூக்கத்தைக் கெடுத்து விடும் என்பதால் 40 நிமிட நேரம், அதிகம் போனால் - ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் படுத்து உறங்கி எழுந்து, தேநீர் அருந்தி, சிறு நடை நடந்து, எழுத்து பேச்சு, நூல்கள் படித்தல், தொலைக்காட்சிகளில் செய்தி களை அறிதல் - போதுமானவை. தேவையற்ற வையே அவற்றில் அதிகம் என்பதால், அதனைப் பார்த்த பலருக்கு இரத்தக் கொதிப்பு - படபடப்பு, கோபம், ஆத்திரம் எல்லாம் - தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்தால் வரக் கூடும். எனவே,  முக்கியமானவை என்று கருதும் ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவதே நல்லது.


நம் நாட்டுத் தொலைக்காட்சிகள் ‘அட்டைக் காப்பி', ஒருவர் துவக்கியதையே மற்றவர் போட்டி யிட்டுச் செய்தல் - புதிய புத்தாக்கச் சிந்தனைகள் அரிதினும் அரிதாகவே உள்ளன!


அவற்றில் சினிமா போதைதான் பெரிதும்!



இன்றேல் குற்றங்கள் பற்றிய விலாவரியான விசாரணைகள் இதன் பயன் பார்ப்பவர்களுக்குப் பூஜ்யம்தான்; இன்னொரு கெடுதியும் இதில் உண்டு; புதிதாகக் குற்றங்களை எப்படி இணைப் பது என்று சொல்லிக் கொடுப்பதற்கு மறைமுகமான பாடமாகவும் ஆகிவிடுகின்றன - மன அமைதியைக் குலைப்பதாகவும் உள்ளன! எனவே, அதற்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்து, நல்ல புத்தகங் களைப் படிக்கலாம்! பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோ அவர்கள் வேலையை விட்டு வந்த பிறகு அவர்களிடம் சிறிது நேரம் அள வளாவி மனப்பூர்வமான திருப்தியை வாழ்க்கை யில் பெறலாம்; இது ஒரு கால அட்டவணை (Time-Table) போட்ட வாழ்க்கைபோல ஆக்கிக் கொள்வது சிறப்பானது.


உண்மையான நட்பு வட்டம் - அதன் தேவை முதுமையில்தான் மிக மிக முக்கியம்; தங்கள் வயதை ஒத்தவர்களின் நட்புறவு முதுமையில் மிகத் தேவை - உள்ளூர், வெளியூர் வட்டாரங்களில் - எங்கிருந்தாலும் சரி அவர்களோடு நீண்ட நேரம் செலவழித்து தம்மைத் தாமே செழுமையாக்கி கொள்வது முதியோர்களுக்கு மிகவும் முக்கியம்!


இளைய தலைமுறையினரும் இதமான சொற் களை - உரையாடல்களை - கனிந்த விசாரிப்புகளை - மகிழ்ச்சிதரும் அன்பளிப்புகளைத் தருவது முதியோருக்கு எல்லையற்ற இன்பத்தைத் தரும். அது பற்பல நேரங்களில் ஒரு வழிப்பாதையல்ல - இரு வழிப்பாதையாகவே அமைவது நல்லது.


முதுமையில் உள்ள கோளாறு - குறைபாடுகளில் ஒன்று -  எவரிடமும் - அவரது சூழல் பற்றியே கவலைப்படாது - நீண்ட நேரம் (Non-stop) ‘தொணதொணப்பது!' போன்று பேசுவது - தவிர்க்கப்படுவது கட்டாயம்.


மற்றவர்கள் எவ்வளவு நேரம்தான் காது கொடுப்பார்கள்?


ஒருமுறை ஒரு வணிகத் துறை நண்பர் அனுபவ ரீதியாக ஒரு செய்தியை என்னி டம் பகிர்ந்து கொண்டார். நன்கொடை என்று கும்பல் கும்பலாக வரும் பல அரசியல் மற்ற அமைப்புக் காரர்களைக் கடைகளுக்கு முன்னால், நான் வெகு நேரம் பேச விடுவதில்லை. உடனே ஏதோ ஒரு தொகையை - உதாரணத்துக்கு 25 ரூபாய், 50 ரூபாய் தந்து அனுப்பி விடுவேன்; காரணம் அவர்களை நெடுநேரம் நிறுத்தி விவாதித்தால், பல நூறு ரூபாயின் வியாபாரம் கெட்டுப் போகும் சூழல் அமையும், அதனால்தான் அந்த அவசரம் என்றார்.


சரிதானே!


வீட்டில் முதியவர்களுக்கு அதிக ஓய்வுகள் உள்ளதால் வீட்டில் உள்ள மற்றவர்களும் தங்களு டன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மனிதநேய மற்ற சிந்தனை. எதையும், 'ஒத்தறிவு' (Empathy) - பிறரின் நிலையில் நின்று யோசிக்கும் தன்மைப் படி நடந்துகொள்வது அனைவருக்குமே நன்மை!


அவரவர் நேரம் அவருக்குத்தானே! அதுவும் செல்போன் யுகத்தில் முதியவர்களிடம் இளைஞர் கள் வருவதே அபூர்வம்; வந்து நலம் விசாரித்து, சிறிது நேரம் அன்புடன் - பண்புடன் - பாசத்துடன் அவர்கள் உரையாடினால் அதுவே இவர்களுக்கு ஒரு "பொன்னான வாய்ப்பு" அல்லவா?


எனவே, மற்றவர் நிலையிலிருந்து நின்று, எதையும் ஆராயும் போதுதான், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர முடியும்.


மேற்கிந்தியத் தீவுக்காரர்களின் பழமொழி ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் படித்தேன்.


"என்னைக் குறை கூறும்முன் எனது காலணியை மாட்டிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்த பிறகு சொல்லுங்கள் - எனது நடை சரிதானா, இல்லையா? அதில் உள்ள இன்னல்கள் எவ்வளவு என்பது அனுபவிக்கும் எனக்கல்லவா தெரியும்; வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்து விமர்சிக்கும் மற்றவர் களுக்கு எப்படித் தெரியும்?" என்பதுதான் அதன் விரிந்த பொருள். எனவே புரிந்து நடந்தால் இன் பம் - புரியாமல் நடந்தால் துன்பம்.


எனவே, இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம்மிடம் தான் உள்ளது என்றே முதியோர்கள் எண்ணவேண்டும், அதைக் கற்று வாழப் பழகிக் கொள்ளவேண்டும்; நம் நோக்கும், போக்கும்தான்  அதனை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள் ஆகும், மறவாதீர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக