நேற்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்' கட்டுரையில், பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நூலில் உள்ள சில சொற்கள் பற்றிய ஆய்வினைக் கண்டோம்.
இன்றும் அதுபோன்றதோர் ஆய்வினைக் காண்போமா? நம்மிடையே வாழும் சீரிய ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் அவர்களது ‘தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்' என்ற நூலும், ‘கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்' என்ற நூலும் மிகவும் சுவையான தகவல்களையும், தரவு களையும், அளிக்கக்கூடிய அறிவு விருந் தாகும்!
ஆய்வாளர் நா.வானமாமலையின் முதல் மாணவர்களில் ஒருவர். தமிழினத்தின் தலை சிறந்த நாட்டார் வழக்காற்றியல் புலமை யாளர். மார்க்சிய கருத்தியலாளர். செயற்பாட் டாளர். 16 வயதிலிருந்தே பொது உடைமை இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். இன்றும் படித்தும், எழுதியும் வரும் வரலாற் றுக் களஞ்சியம் இவர்!
இவரது ‘பிள்ளையார் அரசியல்' மிகவும் ஆழமான நூல்களில் ஒன்று.
மேற்காட்டிய “தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும்'' என்பது - ‘மீண்டும் பாடம் கேட்கிறேன்' என்ற வகையில் இவரது மாணவத் தோழர் (பேராசிரியர்) ந.முத்து மோகனின் நேர்காணல்களின் தொகுப்பு.
படிக்கவும் சுவையான சிந்தனை விருந்து. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர் களின் பதில்கள் - மனந்திறந்தவை - மறைக்க எதுவும் இல்லை என்ற அளவில் எதையும் அறிவு நாணயத்துடன் அணுகிடும் ஆய்வுக் குரிய தகவல்களைக் கொண்டவை.
“கேள்வி: உங்களுடைய எழுத்துக்களில், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புச் செயல் பாடுகள் குறித்து எழுதியுள்ளீர்கள். தலித்து கள், பெண்கள் ஆகியோர் உளவியல் ரீதியாக எதிர்ப்பை எவ்வாறெல்லாம் வெளிப் படுத்த நேர்ந்தது என எழுதியுள்ளீர்கள். திராவிட இயக்கத்தாரின் திரைப்படங்களால் சாதாரண மக்கள் ஈர்க்கப்பட்டதை அத னோடு இணைத்துச் சொல்வீர்களா?
பதில்: நில உடைமையாளர் ஆதிக்கம், பிராமணிய ஆதிக்கம், சமயம் சார்ந்து நிற்கும் பிற்போக்கான சிந்தனைகள் ஆகிய வற்றிற்கு எதிரான சிந்தனைகள் திராவிட இயக்கத்தாரின் திரைப்படங்களில் இடம் பெற்றன. அழுத்தமான அல்லது அலங்கார மான உரையாடல்கள் வாயிலாக மட்டுமின்றி, பாடல்கள் வாயிலாகவும் கூட இடம் பெற் றன. கலைவாணரின் ‘நந்தன் கதை' (கிந்தனார் காலேட்சேபம்) இதற்கொரு நல்ல எடுத்துக் காட்டு!
திருநெல்வேலி நகருக்கு மேற்கே ‘பேட்டை' என்ற பெயரில் ரயில் நிலையம் ஒன்று உண்டு. அதன் அருகே நரிக்குறவர் குடியிருப்பு உண்டு. ஊசி, பாசிமணி, மருந்துப் பொருட்களை விற்க அந்த மக்கள், திருநெல் வேலி நகரம், சந்திப்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்று ரயில் மூலம் திரும்புவார்கள். பெண்கள் மாலை 6 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்பது அவர்களுக்குக் கட்டா யம் ஆனதால் திரையரங்குகளில் பகல் நேரக் காட்சிகளுக்கு மட்டும் போவார்கள். பெரும்பாலும் எம்.ஜி.ஆர். ரசிகர்களான இவர்கள் படம் பார்த்துவிட்டு மாலை ரயிலைப் பிடிக்க வரும் வழியில் அவர்கள் பார்த்தத் திரைப்படத்தின் சுவரொட்டியில் இடம் பெற்றிருக்கும் வில்லன் நடிகர் (பெரும்பாலும் நம்பியார்) படத்தின் மீது சாணியை எறிந்து விட்டுச் செல்வார்கள். இது நம்பியாரின் நடிப்புக்குக் கிடைத்த அங்கீ காரம் என்று சொன்னாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கொள்வதே பொருத்தமாகும். இது ஒரு வகையான அறக்கோபம். சாதாரண மக்க ளிடம் அழுத்தமான அறவுணர்வும் உண்டு. மீறல்களை அலட்டிக் கொள்ளாமல் கையா ளும் திறனும் உண்டு.”
சுவரொட்டிகளின் மீது சாணியடியை பலரும் பார்த்துச் சென்றிருந்தாலும் கூட, அது எளிய மக்கள் எப்படிப்பட்ட அறச்சீற் றத்தை - அவர்களுக்குத் தெரிந்த முறையில் வெளிப்படுத்திடும் வழக்கம் - அதன்மூலம் எத்தகைய ஒன்று என்பதை நமக்கு உணர்த்து கிறார் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள்.
அந்த அறக்கோபம் - அதுவும் ஏழை, எளிய மக்களிடம் தோன்றுவது, பதுங்கிப் பாயும் புலி போன்றது. அது வெறும் சாணியடி - “போஸ்டரோடு” நின்று விடுவதில்லை. பெரிய நீதி நூலினால் உருவாக்க முடியாத தாக்கத்தை சில காட்சிகள் நமக்கு மட்டுமல்ல; சமூக ஆதிக்கவாதிகளுக்கும், அக்கிரமத்திற் குத் துணை போகிறவர்களுக்கும்கூட, பாடங் களாக கற்றுத்தருவன அல்லவா?
சிறிய நிகழ்ச்சி - பெரிய பாடந்தானே!