நவம்பர் 14ஆம் தேதி (2020) 'இந்து தமிழ் திசை' நாளேட்டில் த. ராஜன் அவர்கள் எழுதி - "வெளிவந்தது மூன்றாவது முறையாக விரி வாக்கப்பட்ட 'க்ரியா' அகராதி" என்ற தலைப்பில் வெளிவந்த 'கருத்துப் பேழை' கட்டுரையின் இரண்டாவது தலைப்பு மிகவும் எவரையும் ஈர்க்கும் தலைப்பு ஆகும்!
"கரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் எஸ். ராமகிருஷ்ணன்" என்பதே அது! அத்துடன் 'இந்திய மொழிகளில் தமிழின் சாதனை' என்ற தலைப்பின் கீழ் 76 வயதிலும், அதிலும் கரோனா கொடுந் தொற்று காரணமாக, ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் (அவர் விரைவில் குண மடைந்து வீடு திரும்பி மேலும் பல தமிழ் ஆக்கங் களை- கருவூலங்களைத் தர வேண்டுமென விழைகி றோம்) மூன்றாவது பதிப்பை, எழுத்தாளர் இமையம் அவர்களை வைத்து வெளியிட்டு "சாதனை" புரிந்துள்ளார்.
அவரது தன்னம்பிக்கை, தனிப்பெரும் தளராத உழைப்பும் ஒப்பற்றவை. நோய் தாக்கும் நிலை யிலும் அந்த வலியை மறந்து, தமிழின் பெருமை - அகராதிப் பதிப்பு மூன்றாவதும், கூடுதலாக இணைப்பு ஆக பல புதிய சொற்களை வைத்து (Updating) செய்துள்ள அருஞ்சாதனை, நோயையே தமிழ்ப் பற்றும், கடும் உழைப்பும் விரட்டியடிக்கும் வகையில், மருத்துவப் படுக்கையைக்கூட தனது பணியிடமாக மாற்றிய கடமை வீரரின் சாதனை எடுத்துக்காட்டானது.
நமது வீடுகளில், நூலகங்களில், கல்வி நிறுவ னங்களில் ஆங்கில அகராதிகள் போல, ஆங்கில - தமிழ் அகராதிகள் முன்பு தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது ஆக இருந்ததை, 'க்ரியா' போன்ற பதிப்பகத்தவர்கள் போக்கி தமிழ்த் தொண்டு புரிந்துவருகின்றனர்!
பிற மொழியில் படிக்கும்போது, அய்யங்களைத் தீர்க்கும்போது அகராதிகளில் அச்சொற்களின் பொருளை அறிந்து மனதிற் பதிய வைத்து, புரிந்து வைத்துக் கொள்ளல் நம் மொழி அறிவைப் பெருக்கக் கூடியதாகும்.
இது போன்ற பணியை பல கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களும் செய்ய வேண்டும்.
பேராசிரியர் வையாபுரியார் தொகுத்த சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம் -தமிழ் அகராதி (அது சில பிரச்சினைகளையும் கிளப்பிய ஒன்று!) - அதற்கு பல ஆண்டு காலம் கடந்து அண் ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர், தமிழில் முதலில் ஆராய்ச்சிப் பட்டம் (பி.எச்.டி.) பெற்ற அறிஞர் டாக்டர் அ. சிதம் பரநாதன் (ஏ.சி. செட்டியார்) அவர்களை ஆசிரி யராகக் கொண்டு ஆங்கிலம் - தமிழ் அகராதி வெளிவந்ததும் அடுத்த கட்ட வரலாறு.
இந்த 'க்ரியா'வின் "தற்காலத் தமிழ் அகராதி" அதன் பெயருக்கு ஏற்ப முதல் பதிப்பு 1992இல் வெளியிடப்பட்டது.
பின்னர் 16 ஆண்டுகள் கழித்து - இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான உருவான சொற் களையும், மாற்றங்களையும் உள்ளடக்கி, மேற்படுத் தப்பட்ட பதிப்பு 2008இல் வெளி வந்தது.
இப்போது 12 ஆண்டுகள் கழித்து, அதன் பிறகு தமிழில் உருவான சொற்களையும், மாற்றங்களை யும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாம் பதிப்பு - இப்படி அதனைத் தொகுத்தவர் - கரோனாவில் படுக்கையிலிருந்தும்கூட "குடி செய்வார்க்கில்லை பருவம்" என்பதுபோல "பணி செய்வார்க்கில்லை உடல்" என்ற புது மொழிக்கேற்ப உழைத்துள்ளார்.
தமிழ் கூறும் நல்லுலகத்தின் வாழ்த்தும், பாராட் டும் இத்தகைய உழைப்பாளர்களின் உரிமையாகும்.
கரோனாவை தமிழ் வெல்லும் என்று காட்டி யுள்ளது இம்முயற்சி!
அவரது பதிப்புகளை வாங்கி பயன்படுத்தும் பயனாளிகளில் ஒருவன் - வாசகன் என்ற நிலை யில் இந்த புதிய வரவுக்கும் - அதுவும் நெருப்பில் பூத்தது போன்ற வியத்தகு சாதனைக்கும் நன்றி கூறி வரவேற்போமாக - வாங்கிப் பயன் பெற்று அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்!
குறிப்பு: இந்த "வாழ்வியல் சிந்தனைகள்" மூன்று நாள்களுக்கு முன்பாக எழுதப்பட்டதாகும். எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களின் ‘க்ரியா'வின் "தற்காலத் தமிழ் அகராதி!" நூலினை வாங்கி நேற்று (16.11.2020) இரவு படித்தேன். இந்நிலையில் இன்று (17.11.2020) அதிகாலை அவர் மறைவுற்றது பெரும் துயரத்திற் குரியதாகும். இரங்கல் அறிக்கை 4ஆம் பக்கம் காண்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக