அச்சத்திற்கு தந்த விலை - நியாயந்தானா?



நோய்களில் மிகக் கொடுமையான நோய் (மக்களின்) அறியாமை (Ignorance) தான் என்றார் அமெரிக்கப் பகுத்தறிவாளர் ராபர்ட் கிரின் இங்கர்சால்.


அறியாமையை விரட்டி, அறிவை விரிவு செய்வதற்குத்தான் பகுத்தறிவு. அய்ந்து அறிவுள்ள மிருகங்களுக்கும், ஆறறிவுள்ள மனிதனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்தப் பகுத்தறிவுதான். பகுத்தறிவு, அறியாமையை - மூடத்தன இருட்டை விரட்டி அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சி மனித குலத்தை முன்னேற்றி வளர்ச்சி அடையச் செய்யும்.


கல்வி அதற்கான சாணைப்பிடிப்பதற்குரிய நுண்கருவி என்றாலும், அந்தக் கல்வியும் கூட, பற்பல நேரங்களில், பற்பல மக்களிடையே பகுத் தறிவைப் பயன்படுத்திராத மூடநம்பிக்கைக்குப் புது வியாக்கியானமும், விளக்கங்களும் சொல் லவே பயன்படும் பரிதாப நிலை நம் நாட்டில்!


வேதனையும், வெட்கமும் தரும் செய்தி சில நாட்களுக்கு முன் ஏடுகளில் வெளிவந்தது.


சென்னையில் ஒரு கர்ப்பிணிப் பெண் மகப்பேறு நடக்கும் காலம் நெருங்குகையில், அந்தப் பேறு கால வலி (Labour Pain) அவஸ்தைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், அளவிலா வெட்கத்தையும் நம் அனைவருக்கும் தரக்கூடிய ஒரு சம்பவம் ஆகும்!


இது, நமது பெற்றோர்களுக்கும் கூட, குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து அவர்களது வாழ்வினை அமைக்கப் பெரிதும் கவலைப்படும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பாடம் ஆகும்!


நூறு ஆண்டுக்கு முன்பு எந்தப் பெண்ணாவது கருவுற்றிருந்தால், நம்முடைய வீடுகளில் உள்ள பெரியவர்களும் சரி, தாய்மார்களும் சரி, 'அவள் சாவைத் தலைமீது வைத்துள்ளாள்; அவள் விருப்பத்தினை அறிந்து அதனைப் பூர்த்தி செய்ய வேண்டும்' என்றார்களாம்! “அறிவுரை” - “மூதுரை” - கூறி தனியாக கருணையுடன் கவனிப்பது உண்டு.


ஆனால், கடந்த சுமார் 50 ஆண்டுகளில் மருத்துவ (இயல்), விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள காரணத்தால், மகப்பேறு முடிந்தவுடன் தாயும்- சேயும் நலம் என்று தான் செய்திகள் வருவது வழமையாகிவிட்டது!


மருத்துவமனைகளின் வசதிகள் பெருக்கம் - கருவுற்ற பெண்மணிகளுக்குரிய உடல் நலம் பேணும் வகையில் ஊட்டச் சத்து முதலியன தருதல், அவ்வப்போது தவணை முறைகளில் ஆரோக்கியப் பரிசோதனைகளை நடத்துதல் முதலியன நடைபெற்றும் வருவது உண்மைதான்.


என்றாலும், அடிப்படையில் நமது பெண் குழந் தைகளுக்குப் போதிய பாலியல் பற்றிய தெளிவை ஏற்படுத்த பல பெற்றோர்களும், நமது சமூக பழக்க வழக்க மரபுகளும் தடையாக உள்ளனவே!


பல திருமணங்கள் தோல்வியில் இணையரி டையே முடிவதற்கு மூல காரணம் அறியாமையே! - உடற்கூறு பற்றியும், உடலின் அங்கங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி விளக்கிட பெற்றோர்களே கூட மனம் திறந்து தனது பெண் பிள்ளைகளிடம் பேசுவதும் கிடையாது; வெட்கம், கூச்சம், பயம், இவை - அவர்களை அறியாமை இருட்டில் வைத்து அச்சத்தை - பீதியை ஏற்படுத்துகிறது! கருவுற்ற பெண்களுக்குப் போதிய அளவில் கற்றுத் தெளிவுபடுத்தத் (educate) தவறி விடுவதால் - இதுபோன்ற அதிர்ச்சியூட்டக்கூடிய அறியாமையின் உச்சத்து  நிகழ்வுகள் நடைபெறுகின்றன.


பிரபல மராத்திய முற்போக்கு எழுத்தாளர் வி.ச.காண்டேகர் அவர்கள் எழுதிய ‘கருகிய மொட்டு' என்ற ஒரு புதினத்தில் எப்படியெல்லாம் மகளிர் மணவாழ்க்கைக்கு முன்பு கூட தாம்பத் தியம் பற்றிய அறிவே இல்லாது அதிர்ச்சியும், பயத்தால் வாழ்வே இருண்ட வாழ்வாக ஆகிய பல்வேறு சமூக வாழ்வின் சிதிலங்கள், எப்படி உள்ளன என்பதை ஸ்கேன் எடுத்துத் தருவதுபோல் விவரிப்பார்கள். இது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் வந்த புதினம் ஆகும்!


எனவே, பெண் குழந்தைகள் வளர்ப்பு முறையில் உள்ள இத்தகைய குறைபாடுகளை பெற்றோர்களும், கற்றோர்களும் உணர்ந்து, இதுபோன்று வரும் செய்திகளில் இதுவே கடைசி செய்தியாக அமையட்டுமாக!


அச்சத்திற்குத் தந்த இந்த விலை உயிர் தற்கொலை - அநியாயம் அல்லவா? உணர்ச்சி வயப்படும் பெற்றோர்கள், அறிவு வயப்பட்டால் சரியான மாற்றம் ஏற்படும் - நிச்சயமாக!