நேற்றைய (14.7.2020) ‘இந்து' ஆங்கில நாளேட்டில் வந்த செய்தியைப் படித்து உள மெல்லாம் பூரித்தது உடல் எலாம் சிலிர்த்தது.
இப்படி மனிதநேயத்துடன் ஆளுமைகள் அமைந்தால், நாடு எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணி எண்ணி உவகை பொங்கிய செய்தி.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமத்தில் வாழும் எளிய குடும்ப வாழ்விணையர்கள். 49 வயது நிரம்பிய பழனி யம்மாள், 58 வயது நிரம்பிய முதியவரான கே.சோமு.
கரோனா கொடுமையால் ஊரடங்கு, அவர் களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏதும் இல்லை. வீடெங்கும் தேடித் தேடி, ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தபோது, தங்களது டிரங்க் பெட்டி ஒன்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைத்திருந்த 24 ஆயிரம் ரூபாய் நோட்டு களைக் கண்டெடுத்து மகிழ்ந்தனர்.
அவர்கள் சேமித்து வைத்த ரூபாய் நோட் டுகள் - பழைய ரூபாய் நோட்டுகள் - (மோடி அரசின் பண மதிப்பிழப்புத் திட்டத்தினால்) இப்போது செல்லாதவை அல்லவா என்பது நினைவுக்கு வந்ததும், அவர்களின் மகிழ்ச்சி காணாமற் போனது. தங்கள் வீட்டுப் பசு மாடு ஒன்றை விற்று வைத்த சேமிப்புப் பணம் அது (மறந்துவிட்டது போலும்).
இத்தகவலை, வருவாய்த் துறை அதிகாரி கள்மூலம் அறிந்து, முதிய தம்பதிகளை அழைத்து வரச் சொன்னார் ஈரோடு மாவட்ட ஆட்சியராக உள்ள திரு.கதிரவன் அவர்கள். எவரும் எதிர்பார்க்காத வகையில் இதற்குத் தீர்வு கண்டார் - மனிதநேயம் பொங்கி வழிந்த முறையில்.
செல்லாத நோட்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றமல்லவா? அதனால், அதனை அரசு கருவூலத்திற்கு அளித்துவிடுங்கள் என்று கூறி, தனது சொந்தப் பணத்தை - ஒரு காசோலைமூலம் 25 ஆயிரம் - 24 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியும் சேர்த்து கொடுத்ததுபோல ஓர் ஆயிரம் கூடவே கொடுத்து, இதை வைத்து வாழுங்கள் என்று தனது கருணை பொங்கும் உதவியைச் செய்தார் - அனை வருக்கும் இன்ப அதிர்ச்சி!
பெற்ற பிள்ளைகளேகூட பெற்றோர்களை வாழ வைக்கும் கடமையாற்றத் தவறுவது வாடிக்கையாகி விட்ட இந்தக் காலத்தில், இப்படி மனிதநேயமும், கருணையும் பொங் கிட முதிய தம்பதிகளை - இந்தக் கரோனா கால பட்டினிக் கொடுமையிலிருந்து காத்த எடுத்துக்காட்டான மாவட்ட ஆட்சியர் கதிர வன் அவர்களது தொண்டறத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அதிகார வர்க்கம் என்றால், இன்று எப்படி என்பதை நாடு நன்கு அறியும். அதில் மனிதம் மலர்ந்து, ஆட்சிபுரியும் இப்படி ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரா? என்று நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.
இத்தகு கதிரவன்களின் தொண்டற ஒளி ஆட்சியின் கதிர்களாக எங்கும் பரவினால் ஆளுமை என்ற அதிகார, தோரணை மற்றும் குறுகிய கால குபேரர்கள் ஆவது எப்படி என்பதிலேயே மூழ்கிக் கிடக்கும் பலரையும் மாற்றி சிந்திக்க வைக்கும். எப்போதோ ஒருமுறை கதிரவன்கள் போன்ற இப்படிப்பட்ட குறிஞ்சி மலர்களும் பூக்கத்தான் செய்கின்றன!
இத்தகைய மனிதநேயம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஆட்சிகளின் ஆளுமை யாக அமைய வேண்டும்.
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியராக இருந்து இத்தகைய தொண்டறம் புரிந்து உயர்ந்த அவர் பெயர் ‘கதிரவன்' என்பதை எண்ணும் போது, ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் அவர்களை ‘‘பகுத்தறிவுப் பகலவன்'' என்று தானே உலகம் அழைக்கின்றது!
எனவே, அங்கே மீண்டும் கதிரவனின் ஒளி - வறுமை இருட்டை விரட்டி வாழ வைத்த உதாரணம், வரலாறாகி ஜொலிக்கிறது!
வளர்க மனிதநேயம்!
வாழ்க - வருக பல கதிரவன்கள் அவரைப் பின்பற்றி!