ராகுல சாங்கிருத்தியாயன் பன்மொழிப் புலவர், 'ராகுல்ஜி' என்று அக்காலத்தில் பலராலும் அறியப்பட்டவர். அவரது ஆழ்ந்த பன்மொழிப் புலமை சிறப்புடையதாகும். குறிப்பாக ஹிந்தி, சமஸ்கிருதம், ரஷ்ய மொழி போன்ற பலவும் அவருக்கு அத்துபடி.
பலராலும் அதிகமான அளவு படிக்கப்பட்ட அவர் எழுதிய பிரபல நூல்கள் "வால்காவிலிருந்து கங்கை வரை", "பொது உடைமைதான் என்ன?" போன்றவையாகும். பன்மத தத்துவங்களையும் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளார். அவரது அரிய கருவூலங்களான நூற்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அவர் எழுதிய ஒரு நூல் - 'ஊர் சுற்றி புரணம்' என்பது. இந்த 'ஊர் சுற்றிக்கு' பல ஆண்டுகளுக்கு முன் வந்த நூலை நமது கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பார்வதி (கணேசன்) அவர்கள் அன்பளிப்பாக அளித்தார்.
எனக்கு சுற்றுலா பற்றிய நூல்கள் படிக்க மிகவும் பிடிக்கும்.
'விகடன்' ஏட்டில் பல ஆண்டுகளுக்கு முன் 'நான் சென்ற சில நாடுகள்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் எழுதிய நூலைப் படித்து, அதில் உள்ள சில செய்திகளை மேடைகளில் கூறும் அளவுக்கும் பயன்பட்டன.
அதற்கு முன் பள்ளிப் பருவத்திலேயே 'உலகம் சுற்றும் தமிழன்' ஏ.கே.செட்டியார் எழுதிய நூல்தான் பள்ளி முடிக்கும் தருவாயில் படித்த புத்தகம் - 'குமரி' மலர் ஆசிரியர்.
'அமெரிக்காவைப் பார்' என்று 'சோ.லெ' என்கிற சோம.லெட்சுமணன் (செட்டியார்) எழுதிய நூல் எங்களுக்கு இண்டர்மீடியட்டில் துணைப் பாட நூலாக வைக்கப்பட்டு படித்துச் சுவைத்தேன்.
பட்டப்படிப்பு, கல்லூரிப் படிப்பு இவை யெல்லாம் பல ஊர்களுக்கும், வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி சென்று திரும்பி பல செய்திகளை அறிவது போன்ற சிறந்த பொதுக் கல்வி, பொது அறிவு அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது!
'அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு உலகை'
என்ற புரட்சிக்கவிஞரின் ஆணையை செய லாக்கி, இந்த ஊர் சுற்றி, உலகம் சுற்றும் பயணம் தான் பெரிதும் அனைவருக்கும் பயன்படும்!
மற்ற வெளிநாடுகளில் பலரும் எவ்வளவுதான் சாதாரண நடுத்தர குடும்பத்தவராக இருப்பினும், சம்பளம் பெறும் ஊழியம் பார்ப்பவராகவிருப் பினும் ஓராண்டில் விடுமுறையில் 'இளைப்பாறிட' (Relaxation) இப்படி சுற்றுலா சென்று திரும்பி, புத்துணர்வு புத்தாக்கச் சிந்தனைக ளையும் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
இரண்டு ஆண்டு சேமிப்புத் திட்டம் ஒன்றை மேல்நாட்டு வாழ்விணையர்கள் திட்டமாகக் கொண்டு சேமித்த தொகையின்மூலம், புதுப்புது ஊர்கள் - நாடுகளுக்குச் சென்று திரும்புவர்!
வெளியூர் - வெளிநாடு சென்று திரும்பும் ஊர் சுற்றி அனுபவம்பற்றி, வாழ்நாள் முழுவதும் சுற்றுப்பயணத்திலிருந்த தந்தை பெரியார் அவர் கள் இந்த சுற்றுலா அறிவு எவ்வளவு பெரிதும் பயன்படக் கூடியது என்பதை கீழே கொடுக்கப் பட்டுள்ள அவரது எழுத்து அவசியம் நமக்கு நன்கு பாடம் போதிப்பது போல சொல்லிக் கொடுக்கும்!
இப்போது கரோனா கொடுந்தொற்று காலம் ஆயிற்றே - எங்கும் நகர முடியாத நிலை உள்ளதே என்கிறீர்களா?
"இது என்ன நிரந்தரமா? மாற்றம் என்ற ஒன்று தானே மாறாதது!" என்ற நம்பிக்கையுடன் அந்த வெளியில் சுற்றுலா செல்லும் வியப்பான காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம் நண்பர்களே!
விடியாத இரவுகள் உண்டா?
முடியாத செயல்தான் உண்டோ?
மனித அறிவுக்கு முன் நம்பிக்கையுடன் நம்மை நாமே பாதுகாப்போம்!
இதோ, தந்தை பெரியார் பேசுகிறார் கேளுங்கள்!
"பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு தாலுக்கா ஒரு கண்காட்சி. தாலுக்காவை விட்டு வெளியே வந்தவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி!
ஜில்லாவிலிருப்பவனுக்கு மாநகரத்தின் தலைநகர் கண்காட்சியாகும்.
தலைநகரில் இருப்பவனுக்கு பம்பாய், லண் டன் போன்ற பெரிய நகரங்கள் கண்காட்சியாகும்.
இம்மாதிரி பெரிய நகரங்களைப் பார்ப்பதும் ஒரு கண்காட்சி போன்றுதான் ஆகும்.
ரயிலை விட்டு இறங்கி தாஜ் ஓட்டலில் தங்கி விட்டு வந்தால், ஒன்றும் தெரியாது. விஷயம் தெரிய வேண்டுமானால் வீதியில் நன்றாகத் திரிய வேண்டும். அப்போதுதான் அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை முறை எப்படி என்பவைகள் தெரியும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சுற்றிப் பார்த்தவன், பி.ஏ. படிப்பாளிக் குச் சமமாகும். வேண்டுமானால் இங்கிலீஷ் பேச, எழுத காலேஜில் பயிலவில்லை எனலாம். ஆனால், இச்சுற்றுப்பயணத்தில், தானே சிறிது சிறிதாக அந்த அறிவு ஏற்பட்டு விடும். நம்ம பி.ஏ. படிப்பாளி கூட இவனுக்குச் சமமாக மாட்டான்.
- தந்தை பெரியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக