இந்தியாவின் முதல் பெண் டாக்டர் புனே என்று இன்றழைக்கப்படும் மகாராட்டிரா மாநில பூனாவில் 1865, மார்ச் 31ஆம் தேதி பிறந்த ஒரு 'மேல் ஜாதி' - பார்ப்பன (பெண்) ஆனந்தி பாய் ஜோஷி என்ற டாக்டர் ஆவார்!
நம்மில் பலரும், புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி அவர்களைத்தானே முதல் பெண் டாக்டர் என்று கூறி வருகிறோம். இந்தத் தகவல் என்ன மாறாக உள்ளதே என்று எவரும் குழம்ப வேண்டாம்.
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் - ஆனந்திபாய் ஜோஷி என்றாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தியாவின் முதல் (இசை வேளாளர் குலத்தில்) டாக்டரான முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி என்று கொண்டால் குழப்பம் தானே தீரும்!
பெண்களே படிக்கக்கூடாது; அவர்கள் உயர்ஜாதி - பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும்கூட என்பது தான் வர்ணாசிரம படிக்கட்டு ஜாதி முறை. ‘‘பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர'' என்ற நான்கு வகை வர்ணத்தார்களுக்கும் கீழே உள்ள out castes என்ற இந்து மத வர்ணாசிரம அமைப்பு திட்டப்படி "பஞ்சமர்" என்ற அய்ந்தாம் ஜாதிப் பிரிவுக்கும் கீழே, அத்தனை ஜாதிப் பெண்களும் - உயர் ஜாதியாக இருந்தாலும் - அடிமைகள் என்பதால், எந்த உரிமையும் அற்றவர்கள் ஆவார்கள்.
கல்வி உரிமை மறுக்கப்பட்டது. 8, 9 வயது மிகாமல் விவாகம் 'பால்ய விவாகம்' செய்து கொடுத்துவிட வேண்டும் என்பதும், ஹிந்து சனாதனத்தின் கோட்பாடு. 1874 இல் இருந்த நிலைமை - சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? யூகித்துப் பாருங்கள்!
புனேயில் கணபதிராவ் ஜோஷி என்பவருக்கும், கங்காபாய் என்பவருக்கும் அய்ந்தாவது பிள்ளையாக ஆனந்திபாய் பிறந்தார். அப் பெண் குழந்தைக்கு யமுனா என்று பெயரிட்டார்கள். (அவர் தான் பிறகு ஆனந்தி பாய் ஜோஷி) 31.3.1865இல் பிறந்த இவருக்கு 9 ஆவது வயதில், கோபால் ராவ் ஜோஷி என்பவரை கணவராக, இரண்டாம் தாரத் திருமணமாக செய்து வைத்தனர்; கணவர் கோபால் ராவ் ஒரு போஸ்ட் மாஸ்டர் "விதவன்" ஆனவர்.
எப்படியோ ஆனந்திபாய் ஜோஷி 22 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து ஒரு வரலாறு படைத்து விட்டார்! அமெரிக்காவின் பென்சில்வேனியா மெடிக்கல் காலேஜில் (அது பெண்களுக்காக மட்டுமே நடந்த மருத்துவக் கல்லூரி பிலெடல்பியாவில்!) அங்கே எம்.டி. மேற்பட்ட படிப்பும் படித்து சாதனை புரிந்தார்! இந்தியா வுக்கு 1886இல் திரும்பி, கோல்காபூரில் இருந்த எட்வர்ட் ஆல்பர்ட் நினைவு மருத்துவமனையில் டாக்டராகப் பொறுப்பேற்றார்! 21 வயதில் டாக்டர் எம்.டி. ஆன பெண். ஆனால் க்ஷயரோகம் காரணமாக ஓராண்டு மட்டுமே வாழ்ந்து மரணமடைந்து வரலாறாகி விட்டார்!
Fragmented Feminism என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை பற்றி ஒரு நூலை மீரா கோசாம்பி என்பவர் எழுதியுள்ளார். அதில், ராம் ராமசாமி, மாதவி கோல்காட்கர், அபான் முகர்ஜி ஆகியோர் தொகுத்து அளித்துள்ள பல நிகழ்வுகள், அவர் தன் கணவரிடம் பட்ட கொடுமையெல்லாம் அந்த வாழ்க்கை வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ளன.
கடல் கடந்து சென்ற பெண் டாக்டர், ஹிந்து மத சம்பிரதாய சனாதனத்தை உடைத்தவர். ஜாதிக் கட் டைத் தகர்த்த வர்ண விரோதியும் கூட!
அமெரிக்காவிற்கு மருத்துவ மேல் படிப்புக்குச் சென்ற அவர் தனது கணவர் கோபால் ராவ் ஜோஷிக்கு எழுதிய ஒரு கடிதம் மிகவும் உருக்கமானது!
"...எனது பத்து வயதில் மரக்கட்டையால் என்னை அடித்துள்ளீர்கள், நாற்காலிகளைத் தூக்கி என்மீது வீசி அடித்துள்ளீர்கள், எனது புத்தகங்களைத் தூக்கி என்மீது வீசி யெறிந்துள்ளீர்கள் - 12 வயதில் நான் இருக்கும் போது, 'என்னை தனியே விட்டு விடுவேன்' என்று பயமுறுத்தியுள்ளதோடு விநோதமான தண்ட னைகளையெல்லாம்கூட கொடுத்துள்ளீர்கள்!
என் வயதுக்கும், உடலுக்கும், மனதுக்கும் மிகவும் கொடூரமான தண்டனைகள். இவற்றையும் தாண்டி தான், நான் டாக்டராகி சேவை புரிய முன்வந்துள்ளேன்."
'தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள்' என்ற பீடிகையுடன் அக்கடிதம் தொடங்குகிறது!"என்னை நீங்கள் அப்படி நடத்தியது நல்லதா? கெட்டதா என்று என்னால் தீர்மானிக்க முடியாத பருவம் அந்நாளில் என்றாலும், என்னைக் கேட்டால் இரண்டும்தான் என்பதே எனது பதிலாக இருக்கும் என்றாலும் டாக்டராகினேன்!"
அக் கொடுமைகள் எதுவும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருக்கு இல்லை. இவர் டாக்டராக வந்து புரட்சிகரமாக "தேவதாசி ஒழிப்பு சட்டம்" வர அரும் பாடுபட்டு வரலாறாக வாழ்ந்து வருபவர்!
மராத்திய புரட்சியாளர் ஜோதி பாபூலே மண்ணும், பெரியார் மண்ணும் இரண்டு பெண்ணியப் புரட்சிகளை உருவாக்கி வரலாறு படைத்தன!