இன்பத்தில் திளைப்பதே வாழ்க்கை என்றுதான் இந்த உலகத்தில் பலரும் எண்ணுகிறார்கள்! துன்பமே இல்லாத வாழ்க்கைதான் எனது லட்சியம் என்று பல மனிதர்கள் கருதுகிறார்கள்!
இன்பத்திற்கு என்ன அளவுகோல்? ‘இன்பம்‘ என்பதுதான் என்ன? என்ன செய்தால் - அது எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்? எவ்வளவு விலை கொடுத்து மனிதன் இன்பத்தை வாங்கிட முடியும்?
கொஞ்சம் ‘ஆற அமர’ சிந்தித்துப் பாருங்கள்.
ஆசைகள் எல்லாம் நிறைவேறினால் இன்பம்தானே வரும் என்றார் என் நண்பர் ஒருவர்!
‘அப்படியா? அதனை எப்படி அளப்பது? கணக்கு முறையில் கணித்தால், 50 ஆசைகளை உருவாக்குவதில், 25 நிறைவேறின என்றால், 50 விழுக்காடு இன்பம் கிடைத்து விடுகிறது என்பதுதானா பொருள்?
கூட்டிக் கழித்துப் பார்க்கையில், கணக்குக்கு இது சரி. ஆனால், வாழ்க்கைக்கு....? சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
பக்கத்து வீட்டுக்காரர் ஒரு கோடி ரூபாய்க்குமேல் சம்பாதித்து ‘பெரிய கோடீசுவரனாக’ (கோடி ரூபாய் சம்பாதித்தால் ‘ஈஸ்வரர்’ கடவுள் ஸ்தானம் தானே கிடைத்துவிடுகிறது. இந்த ‘லட்சுமி’ பிறந்த நாட்டில்..) ஆகி விட்டார்; நாமும் அப்படி எப்போது ஆவது? என்ற ஏக்கம் இவரை அரித்துக்கொண்டே இருந்தது!
எப்படியோ ‘லாட்டரி’ பரிசு விழுந்து இவருக்குக் கோடி ரூபாய் கிடைத்துவிட்டது!
அவர் விரும்பியது நடந்துவிட்டது; அதன் பிறகு ஆசை நிறைவேறிவிட்டது என்று இன்பத்தில் புரள முடிந்ததா என்றால், ‘இல்லை’ என்பதே யதார்த்தமாகும்!
கோடி ரூபாய் கிடைப்பதற்குமுன் படுத்தவுடன் தூங்கி விடுவார்!
முன்பு பசியோ நல்ல வண்ணம் எடுத்து, உணவை - எவ்வகை உண வானாலும் முழு மன நிறைவோடு உண்ணுவார். நிதானமான வாழ்வு; நிம்மதியைத் தரும் அன்றாட நிலை - இவை அறவே மாறிவிட்டன! இப்போது தூக்கம் வரவில்லை; மருத்துவரிடம் சொன்னார், அவர் மாத்திரை எழுதித் தந்து விழுங்கச் சொன்னார்.
வேளா வேளைக்குப் பசியெடுப்பது - அப்படியே பணம் வந்த நாள்முதல் படிப்படியாகக் குறைந்துவிட்டது!
அதற்குமுன் ‘கவலையில்லாத’ மனிதராக இருந்த இந்த மனிதர், சதா கவலை தோய்ந்த முகம் கொண்டவராக மாறிவிட்டார்; ‘பணத்தை எப்படிப் பாதுகாப்பது? - திருடன் பயம் - அடுத்து வருமான வரித்துறைக்கு இனிமேல் வருஷா வருஷம் ரிட்டன் தாக்கல் செய்யவேண்டுமாமே - அதற்கு என ஒரு ஆடிட்டரை தேட வேண்டுமாமே!’
‘இதற்கிடையில் நம்மை வள்ளல் ஆக்கி, வரிசையில் நிற்கும் நன்கொடை கேட்போர் எண்ணிக்கை வேறு!’
‘சொந்தங்களான உறவுகளுக்கு நான் கிள்ளிக்கூடத் தரவில்லையே - அள்ளித்தராவிட்டாலும்கூட என்ற வசை அம்புகள் வீச்சு ஏராளம்!’ என்று மனம் புலம்ப ஆரம்பித்துவிட்டது.
அப்போதுதான் அந்தப் புதிய கோடீசுவரருக்குப் புரிந்தது! பழைய நிலையே எவ்வளவு நிம்மதியானது? ஏன் இந்தப் பணம் வந்து விரைவில் நம்மைப் பிணமாக்கிட முழு முயற்சி செய்கிறது? என்று எண்ணினார்.
பொருள் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை என்பது உண்மைதான்; ஆனால், பொருளே வாழ்க்கை என்றால், வாழ்க்கையே பொருளற்றுப் போகும்!
எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த இருந்த தமிழறிஞர் ஒருவரின் வாசகத் தைப் படித்தார்.
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா!’
ஆம்! மகிழ்ச்சி என்பது பணத் தாலோ, புகழுரைகளாலோ, பதவிகளாலோ, முகமன்களாலோ வருவதல்ல; ஏற்றம் தரும், கவலை அண்டாத எளிய வாழ்வின் மூலமே கிடைக்கும்.
அது வற்றாமல் கிடைத்தால் போதும், அதுவே வளமான வாழ்வாக அமையும் என்பதை புரிந்துகொண்டார்!
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
- கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,20.10.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக