பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

புரட்சிக்கவிஞரின் ‘‘முதியோர் காதல்’’ தனிச்சிறப்பு



புரட்சிக் கவிஞரின் கவிதைகள் அனைத்தும் கற்கண்டு. தெவிட்டாத தேன் பாகு; தெள்ளமுது!
குடும்ப விளக்கு அய்ந்தாம் பகுதி ‘முதியோர் காதல்’, அதுதான் என்னை மிகவும் ஈர்த்த இலக்கிய இன்சுவை!
‘‘நீங்கள் முதியோர் வரிசையில் நின்று கொண்டிருப்பதாலா?’’ என்று அவசரப்பட்டு கேட்டு விடாதீர்கள்!
இளமைப் பருவத்திலும் கூட இதைத்தான் மற்ற நான்கு பகுதிகளையும் விட அதிகமாக சுவைத்தேன். இன்புற்றேன் - மீண்டும் மீண்டும் படித்து. அதன் கருத்து, நடை, உவமைஅழகு இவைகளை அசைபோட்டு மகிழ்வேன்.
வாழ்விணையர்களின் கூட்டுறவு இளமைக் காலத்தில் இருப்பது வெறும் உடலின்ப வேட்கையுடன் கலந்த இன்பம் மட்டுமே - ஒருவருக்கொருவர் ஊன்றி தாங்கி, வெளிப்படுத்த முடியாத அன்பு வெள்ளத்தின் தேக்கம் - அப்போதுதான்!
ஆனால் ‘முதியோர் காதல்’ என்ற தலைப்பின் தன்மை - ‘காதல்’ என்பது அகத்தைப் பொறுத்தது என்பதன் உண்மைத் தத்துவம்; முதியோர் காதல் என்ற தலைப்பில் உள்ள காதலின் முழுப்பொருள் - பருப்பொருளின் தொகுப்பு.
“புலன்கள் தேய்ந்தன; கருவிகள் ஓய்வு பெற்றன,
உள்ளம் உண்டு. ‘முதியோர் காதல்’ இன்னது
என மொழிவது இந்நூல்” - என்கிறார்
புரட்சிக் கவிஞர்.
‘‘‘ஆடிய பம்பரங்கள்’
அல்லவா அம் மூத் தோர்கள்?'' - என்னே அழகு!
மணவழகர்
உடல்நிலை
‘‘மணவழ கர்க்கு முன்போல்
வன்மையோர் தோளில் இல்லை!
துணை விழி, ஒளியும் குன்றக்
கண்ணாடித் துணையை வேண்டும்;
பனையுடல், சருகு! வாயிற்
பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெலாம் பாலின் கஞ்சி;
உலவுதல் சிறிதே ஆகும்!

தங்கத்தம்மையார் உடல்நிலை
நன்னிலாக் கதிர்போல் கூந்தல்
நரைத்தது. கொண்டை யிட்டு
முன்னிலா முகில்உண் டாற்போல்
முகத்தொளி குறைய லானார்!
அன்புடல் அறத்தால் தோய்ந்த
ஆயிரம் பிறைமூ தாட்டி
மன்னுசீர் அன்னாள் மெய்யோ
வானவில் போற்கூ னிற்றே!

முதியோர் அறைக்கு மக்கள்
பேரர் வந்து போவார்கள்
இருபெரு முதியோர் தம்மைத்
தலைக்கடை அறைசு மந்து
பெரும்பேறு பெற்ற தன்றோ!
பிள்ளைகள், அவர்ம னைமார்
வருவார்கள்; அறங்கேட் பார்கள்.
மற்றுள பேர்த்தி பேரர்
வருவார்கள் அளவ ளாவி
மணியோடு பள்ளி செல்வார்.
இரு முதியோர் நிரம்பிய உள்ளம்
மைந்தர்க்குக் கல்வி சேர்த்தோம்
மகள்மார்க்கும் அவ்வா றேயாம்
எம்தக்க கடன்மு டித்தோம்
இனிதாக வாழு கின்றோம்;
முந்துறச் சுற்றத் தார்க்கும்
செய்வன முழுதும் செய்தோம்;
இந்தநாள் வரைக்கும் வாய்மை
இம்மியும் மறந்த தில்லை.

நாட்டுக்கு நலம் செய்தோம்
இந்நாட்டின் நலனுக் காக
நல்லறம் இயற்றி வந்தோம்.
எந்நாளும் பிறர்க்குத் தீமை
எங்களால் நடந்த தில்லை.
சின்னதோர் நன்று செய்தார்
திறம்மறந் தறியோம் என்றே
இன்னிசை பாடும் அன்னார்
இரண்டுள்ளம் இன்பம் கொள்ளும்.

முதியோளே வாழ்கின்றாள் என் நெஞ்சில்
விதைத்திட்டேன் அவளின் நெஞ்சில்
என்றனை! நேற்றோ? அல்ல;
இதற்குமுன் இளமை என்ப
தென்றைக்கோ அன்றைக் கேநான்!
கதையாகிக் கனவாய்ப் போகும்
நிகழ்ந்தவை; எனினும் அந்த
முதியோளே வாழு கின்றாள்
என்நெஞ்சில் மூன்று போதும்!''
இப்படியெல்லாம் பல்வேறு சிந்தனை ஓட்டங்கள்!
சுவைத்துப் பாருங்கள் -
எதிர்கால முதியோர்களான - நீங்களும்தான்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,5.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக