பக்கங்கள்

சனி, 29 அக்டோபர், 2016

இதயத்தைப் பாதுகாக்க இதோ நான்கு வழிகள்!

 
நம் உடலின் ஓய்வறியா உழைப்பாளியான இருதயத்தை நாம் பாதுகாத்து வாழ வேண்டாமா? மற்ற உறுப்புகள் ஓய்வு எடுக்கின்றன; எடுக்கலாம். ஆனால் இதயம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமா? இதயத்தின் விழிப்பும் உழைப்பும் -  நம் வாழ்வின் பாதுகாப்பும் வாழ்க்கை நீட்டலும் - உழைப்பு! உழைப்பு! சதா உழைப்பு! இதற்கு ஊறு செய்து நம் வாழ்வை நாமே முடிவுக்குக் கொண்டு வரும் கேடான பழக்க வழக்கங்களைப் பற்றியும், அவைகளைப் பற்றியுள்ள நண்பர்களும்  உலக இதயப் பாதுகாப்பு நாளான இன்று (29.9.2016) சற்று சிந்திப்போமா?
உலகின் அதிகமான மரணங்கள் இதயம் செயல் படாததின் காரணமாகவே - மாரடைப்பு காரணமாக நிகழ்கின்றன!

ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் 1 கோடியே 75 லட்சம் பேர் இதய வலி, மாரடைப்பு மூலம் மரணம் அடையும் கொடுமை நிகழ்கிறது!

உலகின் முதல் தர கொலையாளி நோய்தான் இந்த மாரடைப்பு! வயதானவர்களை முதுமை காரணமாகத்தான் இந்நோய் தாக்கி வாழ்க்கையை முடிக்கிறது என்பது பழங்காலத்துக் கதை!
இப்போது இளையவர்களுக்கெல்லாம் இதய நோய் - மாரடைப்பு - இவை தாக்கி, அந்த வளர வேண்டிய தளிர்கள் உதிரும்படியான கொடுமைகள் மிகச் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன.
காரணம் என்ன?

எப்படி, வருமுன் காத்து, வாழ்வை நீட்டுதல் என்பதுபற்றி சிந்திக்க வேண்டும்; வந்த பின்பு,
'ஸ்டெண்ட்' (Stent) பொருத்துதல்,
பேஸ்மேக்கர் பொருத்துதல்
மாற்று அறுவை சிகிச்சை செய்தல்

இவைகளை எல்லாம் செய்து கொண்டு, அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துவதைவிட, சற்று முன் எச்சரிக்கையான நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை நாம் மேற்கொள்ளலாமே! இன்றைய இளைய தலைமுறையினருக்கும் இதனை நாம் எளிதில் சொல்லி சிந்திக்க வைக்க வேண்டும்.

(அ) புகையிலை, புகைபிடித்தல் - இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
புகை - நல்ல உடல் நலத்திற்கு மிகப் பெரும் பகை என்பதை மக்கள் மறக்கக் கூடாது! காசு செல வழித்து இப்படிப்பட்ட மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றை 'சிவப்புக் கம்பள வரவேற்பு' கொடுத்து நாமே வரவழைத்தல் தேவையா என்று இன்றைய 'புகைஞர்கள்' சிந்திக்க வேண்டும்!
விளக்கை நோக்கிய விட்டில் பூச்சிகளாக அவர்கள் ஆகலாமா?

(ஆ) கண்டபடி ஆரோக்கியமற்ற - உடல் நலத்துக்கு கேடு செய்யும் உணவுப் பழக்கம். சதா அரைத்துக் கொண்டே இருப்பர். நம் நாட்டில் அமெரிக்க உணவு முகமைகள், கே.எப்.சி. (K.F.C.) போன்ற பல்வேறு துரித உணவுகள், தெருத் தெருவாக எங்கணும் கோழிக்கறி - பிரியாணி போன்றவை பழையவையா, புதியவையா என்று கண்டறிய முடியாத உணவுப் பண்டங்கள், 'கோக்', 'பெப்சி கோலா', 'கொக்கோ கோலா' போன்ற  கேடு பயக்கும் சுவை நீர்கள் சதா குடித்துக் கொண்டு, இயல்பான வீட்டு உணவைக்கூட நமது இளைய தலைமுறையினர் தவிர்த்து, தங்களுக்குத் தாங்களே குழி வெட்டி மாளும் கொடுமை முற்றாக மாற வேண்டும்!

(இ) கணினி புரட்சி ஏற்பட்டுள்ள இன்றைய நவீன உலகில், பணியின் காரணமாக ஒருபுறம் ஓய்வு - இளைப்பாறுதல் என்ற போக்கில் பல மணி நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் அமர்ந்தே உள்ள பழக்கம் (Sedentary Habits - No Physical activity) என்ற நிலையால் மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்!

(ஈ) மது குடித்தல் - இப்போது அது ஒரு நவ நாகரிகப் பழக்கம்.தமிழ்நாட்டில் எங்கெங்கு காணினும் 'டாஸ்மாக்' (Tasmac)   மது விற்பனைக் கடைகள்!
பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், உள்ள பகுதிகளுக்கு அருகில்கூட இந்தக் கடைகள்! பிறகு சொல்லவா வேண்டும்? இதனால் அங்கிங்கெனாதபடி எங்கும் ஏராளமான இளைய குடிகள்!
விளைவு...?
முதலில் மனிதன் குடிக்கிறான்
பிறகு, குடி குடிக்கிறது!
இறுதியில், குடி மனிதனையே குடிக்கிறது!
வாழ்வு முடிகிறது! தேவையா?

எனவே, உடல் நலம் பேணுங்கள்; கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொரியாதீர்கள்! வாழ வேண்டியவர்கள் சாவுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்கத் தயாராகாதீர்!
மேலும் இரண்டும் முக்கியம்

1. உடற்பயிற்சி - நடைபயிற்சி.
2. மன இறுக்கம் (Stress)
தவிர்த்த, இளைப்பாறுதல் இவையும்.
50 வயதுக்குட்பட்டவர்கள் உடலில் Master Checkup ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்ளுங்கள்!
50 வயதுக்கு மேற்பட்ட 'முன்னாள் வாலிபர்கள்' ஆண்டுக்கு இரு முறை இந்த முழு உடற் பரிசோதனையைச் செய்து கொள்ளுங்கள்.
தெரிந்தே தற்கொலை செய்து கொள்ளுவதுபோல தவறான பழக்க வழக்கங்களை விட்டொழியுங்கள்.
-விடுதலை,29.9.10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக