பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

தாகத்திற்கு அதிகமாக தண்ணீர் அருந்தாதீர்!




இராமச்சந்திரா மருத்துவமனையில் சில ஆண்டு களுக்குமுன், கலைஞர் அவர்கள் முதல்வராக  இருந்தபோது, அவருக்கு முதுகுத்தண்டுவடச் சிகிச்சை நடைபெற்று, வெற்றிகரமாக முடிந்த நிலை யில், அங்கு அவரைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்து கடமையாற்ற ஒரு இளம்பெண் செவிலியரை மருத்துவர்கள் நியமித்திருந்தனர்.

படுக்கையில் வந்து சாய்ந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருக்கு மயக்கம் தெளியும் நிலையில் (மயக்க மருந்து கொடுத்ததால்) குறைய வேண்டும் என்பதால், அந்த மருத்துவக் குழு, செவிலியரிடம், ‘‘அவர் தண்ணீர் கேட்டால் (குடிப்பதற்கு) லேசாக சில சொட்டுகள் நாக்கில் படும்படி கொடுங்கள்; அதிகமாகக் கொடுத்துவிடாதீர்கள் - (காரணம் வாந்தி வரும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்பதால்) சொட்டுச் சொட்டாகக் கொடுங்கள் என்று அறிவுறுத்திச் சென்றனர்!

கலைஞருக்குத் தாகம் எடுத்தது; தண்ணீர் வேண்டுமென அருகில் இருந்த செவிலியரிடம் கேட் டார்; நாக்கை நீட்டச் சொல்லி, சொட்டு சொட்டாக தண்ணீர் விட்டார் செவிலியர்!

அந்த வலி - உபாதையிலும்கூட - கலைஞருக்கே உரித்தான நகைச்சுவை உணர்வு - மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து  மயக்கம் முழுமையாக தெளிந்து - அறவே பழைய நிலை மீளாதபோதுகூட, அந்த இளம் செவிலியரை அழைத்து, ‘‘ஏம்மா, உங்க பேரு காவிரியா?’’ என்று கேட்டவுடன், அந்தச் செவிலியருக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்த செவிலியர் மிகவும் குழம்பிப் போய், ‘‘இல்லீங்க அய்யா, என் பெயர் இது’’ என்று அவரது இயற்பெயரைக் கூறினார்.

‘‘இல்ல, கருநாடகத்துக்காரன்தான் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் தராமல் சொட்டுச் சொட்டாக தருகிறான். நீயும் அதுபோலவே சொட்டுச் சொட்டாகத் தரு கிறாயே’’ என்று சொல்ல, அருகில் இருந்த அத்துணை மருத்துவர்களும் சிரித்து, சிரித்து, ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று இவருக்குத்தான் வள்ளுவர் சொன்னார் போலும்! என்று வியந்தனர்.

இன்று (10.10.2016) வெளிவந்த ஆங்கிலநாளேடு ஒன்றில் ஒரு முக்கிய உடல்நலக் குறிப்பை - எச்சரிக் கைபோல் எழுதியுள்ளது!

சில நபர்களும், பொறுப்பற்ற நாளேடுகளும் சிறு கட்டம் கட்டி ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அவசியம் குடியுங்கள் என்று விளம்பரம் செய்கி றார்கள்!

இன்னும் சிலர் அதை நம்பியும், ஜப்பானியர் காலை யில் எழுந்தவுடன் வயிறு முட்ட முட்ட தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தாலே ஒரு வகை சிகிச்சை (வாட்டர் தெராபி) என்று கருதி தொடர்ந்து பலரும் குடித்து வருகின்றனர்! நானும் சில காலம் இந்தத் தவறுக்குப் பிறகு மாற்றிக் கொண்டேன்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ‘‘மோனஷ் பல்கலைக் கழகம் (Monash University), நீர் குடித்தல்பற்றிய ஓர் அரிய ஆய்வு செய்து முடிவை அறிவித்துள்ளது.
தாகம் ஏற்படும்போது மட்டுமே தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த உடல்நலம் பேணும் முறை. தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது உறுப்புகளை அதிக வேலை செய்ய வைத்து, எதிர்விளைவுகளையும், (intoxication) மயக்கத்தையும் உண்டாக்கி, அதனால் உடல்நலக் கேடு ஏற்படும் நிலையை உருவாக்கக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது!
தேவைக்கு அதிகமான தண்ணீர் அருந்துவதினால், அது உடலில் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி விடு கிறது. (சிறுநீரகமும் மற்ற உறுப்புகளும் கூட அதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது அல்லவா?).

அதிக தண்ணீர் குடிப்பதால், களைப்பும், சோர்வும்  (Lethargy) ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

காரணம், உப்புச் சத்து குறைவதால் களைப்பு, சோர்வு மிகவும் ஏற்படும்.

உணவை விழுங்குதலில்கூட இதனால் தடை ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

எனவே, எதிலும் அளவோடு, தாகத்திற்கேற்ப, செரிமானத்திற்குத் தேவைப்படும் அளவு மட்டும் தண்ணீர் அருந்துங்கள்!
-விடுதலை,10.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக