பக்கங்கள்

புதன், 26 அக்டோபர், 2016

அறிவும், துணிவுமே புதுமைக்கு அடிப்படை!



நம்முடைய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு மனிதனின் தனித்தன்மை.
இதன் உண்மையான பயன் என்ன தெரியுமா?

மந்தைகளில்சேராமல்,மனிதன் உண்மை மனிதனாகப் பரிமளிப்பது தான்!
எப்படி என்கிறீர்களா?

தனித்தன்மையோடு, சென்ற வழியே செல்லாமல் புது வழிபற்றிச் சிந்தித்து, அதில் துணிந்து நடப்பதன்மூலம் - எத்தகைய தற்காலிக இழப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், தோல்விகள், துன்பங்கள் தொடர்ந்தாலும், இறுதியில் நிரந்தர வெற்றியும், நீடுபுகழும் - அப்படி தனி வழி சென்ற அந்த மனிதனை, மாமனிதனாக வரலாறு காட்டும் - வாழ்த்தத் தவறாது.
அறிவுடைமை பற்றி எழுதிய வள்ளுவர் துணிவுடைமைபற்றியும் கூறினாரே!

அறிவுடைமையின் முழுப் பயனை நாம் எப்போது அடைய முடியும் தெரியுமா?

அறிவுடைமையும் - துணிவுடைமையும் இணைந்து பணியாற்றும்போதுதான்!

அன்றைய உலகத்திலிருந்து இன் றைய உலகம் வரை இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டே!

2500 ஆண்டுகளுக்குமுன், தன் வழி தனி வழி என்று வகுத்துக்காட்டிய வரலாற்று பகுத்தறிவாளர்கள் மகா வீரரும், புத்தரும்தான்!

முன்னோர் சென்ற வழி என்ப தற்காகவோ முன்னோர் நடந்த வழி என்பதற்காகவோ, முன்னோர் எழுதியது என்பதற்காகவோ அதையே பிடித்துக் கொண்டிராதீர்கள்!
உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி அந்த உரை கல்லில் உரைத்துப் பாருங் கள்!

புது வழி - அறிவு மார்க்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்றார்!

அறிவியலின் அடிப்படை அது தானே!

அன்றிருந்தவழியிலிருந்துமாறு பட்டு, மனித குலத்திற்கு அறிவு வெளிச்சத்தைத் தந்தவர் ஒரு அய்ன் ஸ்டீன், கலிலியோ, கலைத் துறையில் பிகாசோ அல்லது பீத்தோவன் ஆகியோர் அல்லவா?

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனரான ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’ எளிதாகச் சொன்னார் - ‘‘மாறுபட்டுச் சிந்தியுங்கள்!’’ (Think Differently) அதுதானே அவரை உலகப் புகழ் பெற்றவராக ஆக்கியது - இல்லையா?

உலகத்தாரின் கருத்தைப் பின்பற்றி இவ்வுலகில் வாழ்வது மிகவும் எளிது. நம் கருத்தைக் கொண்டே தனிமையில் வாழ்வதும் எளிதே. ஆனால், கூட்டத்தின் இடையே சுவை குன்றாமல் தனிமையின் தனித்துவத்தை - தனி சுதந்திரத்தை நிலை நாட்டுபவனே மகத்தான மனிதன் என்றார் எமர்சன்; அதற்கு இலக்கணம் மேலே சுட்டிக் காட்டப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற ‘ஆப்பிள்’ மாமனிதர்.

அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். தந்தை பெரியார் போன்ற மகத்தான எதிர்நீச்சல்காரரை உலகம் கண்டுள்ளதா? 

மலையளவு எதிர்ப்புகள் வந்த நிலையிலும், தினையளவும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லையே! எவ்வளவு ஏளனம்! இழிமைகள் - எல்லாவற்றையும் தாண்டி -  இறுதியில், தன் கொள்கை வெற்றியை - அதன் சுவையை தனது வாழ்நாளிலே கண்டவர் -சுவைத்தவர் அல்லவா தந்தை பெரியார்?

மனிதர்கள் சென்ற வழியே சென்றிருந்தால்,ஓலைச்சுவடியும், கட்டை வண்டியும்தான் இன்றும் இருந்தி ருக்கும்.

மாற்றி தனித்தன்மையோடு சிந்தித்ததால்தான் மனிதர்கள் விஞ்ஞானிகளானார்கள், விவேகத்தின் விளைச்சல், அறுவடையாகக் கிடைத்தது; வேற்றுக் கிரகத்திற்குச் சென்று பயணம் செய்யும் அளவுக்கு அறிவும், துணிவும் மனிதர் களை உயர்த்தியது!

எனவே, மந்தைகளாகாமல், துணிந்து தனித்த சிந்தனையாளர்களாகி தகத்தகாய தங்கமாக ஒளிருங்கள், மிளிருங்கள்!

- கி.வீரமணி

-விடுதலை,26.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக