பக்கங்கள்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மாறாத் துயரிலும் ஆறா நாட்டு நலச் சிந்தனை!



அண்மையில் சிங்கப்பூரில் வெளிவந்த, அதனை நவீனப்படுத்திய தந்தையென அனைவராலும் மதிக்கப்படும் மேனாள் பிரதமர் லீக் வான்யூ அவர்களிடம் மிக நெருக்கமாகப் பழகிய பல நண்பர்கள், உதவியாளர்கள், நிர்வாகிகள் ஆகியவர்கள், அவரைப் பற்றிய பல் வேறு அனுபவங்களை எழுதியுள்ள ஓர் நூல் அற்புதமான  தொகுப்பாக வெளி வந்துள்ளது!

சிங்கப்பூரின் பிரபல புத்தக விற்பனை நிலையங்களில் இந்நூல்,  அதிகம் விற்பனை யாகும் (Best Seller)நூல் வரிசையில் முதல் இடம் பெற்ற நூலாகவும் காணப்டுகிறது!

328 பக்கங்களைக் கொண்ட அந்த நூல், மேதை லீக் வான்யூ அவர்கள் எவ்வளவு சிறப்பாக நாட்டைப் பற்றியே இறுதிவரை கவலைப்பட்டு வாழ்ந்த ஒரு தலைவர் - பொது நலச் சிந்தனையின் பெட்டகமாகத் திகழ்ந்தவர் என்பதை இந்நூலில் 37 அறிஞர்கள் - அவரிடம் பழகியபோது ஏற்பட்ட அனுபவங்களைத் தந்துள்ளார்கள்! அனைவருக்குமே பயன் படக் கூடியது.
குறிப்பாக தலைவர்கள் என்பவர்கள் அவரது ஆளுகை சார்ந்த சிந்தனைகளும் செயற்பாடுகளும் எப்படி மற்றவர்களும் கற்று, பின்பற்றப்பட வேண்டிய உயர்ந்த தொண்டறப் போதனை இந்நூல் ஆகும்!

லீக் வான்யூவின் வாழ்விணையர். அவர்கள் இங்கிலாந்தில் சட்டம் பயின்ற போதே காதலர்களாகி, வாழ்விணையர்கள் ஆனவர்கள்!
பிரதமர், அல்லது மதியுரை அமைச்சர் (Mentor) ஆக அவர் இருந்தபோதும் அவரும் அவரது வாழ்விணையரும் தங்கள் இல்லத்திற்கு பின்புறம் ஓடும் 'சிங்கப்பூர் ஆறு' பக்கம் சிறிது நேரம் பேசிக் கொண்டே  - இரவு நேரங்களில் தூக்கம் வராதபோது நடந்து (நடை பயிற்சியாகவும்) செல்வது வழக்கம்!

திருமதி லீ மறைந்தார் அப்பேரிழப்பை அவர் தாங்க இயலாது தவித்தார். என்றாலும் பெருந் தன்மையுடன் அதனை எதிர் கொண்டார்.

அவரது துணைவியாரின் சடலம் அடக்கம் செய்யப்படவில்லை. ஒரு சில நாள் கழித்தே சீனர்கள் அடக்கம் செய்யும் வழக்கமுடையவர்கள்.

படுக்கையில் புரண்டு கொண்டிருந்த இவருக்கு தூக்கம் வரவில்லை; திடீரென்று எழுந்து வாழ்விணையரோடு இரவில் பேசிக் கொண்டே நடந்து செல்லும் ஆற்றோரம் - இப்போது தனியே துயரம் பொங்க நடந்து சென்றார் - அமைதியாக! அடுத்த நாள் காலை அந்த அம்மையாரின் இறுதி ஊர்வலம் நடைபெறவிருக்கிறது!

அப்போது ஆற்றில் பல்வேறு குப்பைகள் கழிவுகள் இருப்பதைக் கண்டார்; தன்னுடன் எப்போதும் பாது காப்புக்கென பின்னால் வரும் பாது காவலர்களை, அழைத்து இதை ஒரு போட்டோ எடுங்கள் என்றார்! இம்மாதிரி  குப்பைகளை எடுத்து ஒரு சிவப்பு பெட்டி(Red Box) ஆங்காங்கே வைக்க வேண்டும்; அதன் மூலம் சுற்றுச் சூழல் மாசு அகற்றப்பட வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தியதால்தான் சிங்கப் பூர் ஒரு தூய்மை நகர - நாடாகத் திகழும் நிலை.

சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து இக்கட்டுரையாளர் Heng Swee Keet) கடிதம் வந்தது! உடனடியாக சிவப்புப் பெட்டி அந்த இடத்தில் வைத்து, குப்பைகளையும் ஆற்றுக் கழிவுகளையும் தனியே அகற்றி அதில் சேகரித்து ஆற்றின் தூய்மையைக் காப்பாற்றிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து தெரி விக்கப்பட்டது!
அங்கே சென்று அதை பார்த்தபோது அந்தத் துறைக்கு - தனது காவலர்களை அனுப்பும்படிச் சொல்லி இரண்டு ஒளிப் படங்களை போட்டோக்களை எடுக்கச் சொன்னார்!
ஒன்று அந்தக் குப்பை; மற்றொன்று தான் அதனருகில் அமர்ந்துள்ள நிலை யிலும்  என்று எடுக்கச் சொன்னார்.

இதற்குக் காரணம் சொன்னபோது "இதற்குரிய பரிகார நடவடிக்கையெடுக்கும் அது எந்த குறிப்பிட்ட இடத்தில் கிடந் துள்ளவை என்று எளிதில் அடையாளம் காட்டவே தான் அதன் அருகில் அமர்ந்த படத்தினையும் இணைத்தே அனுப்பச் சொன்னேன்" என்று விளக்கம் கூறினாராம்!

அவரது வாழ்விணையரின் துயரம் கடல் போல் உள்ளத்தில் பொங்கிய நிலையிலும் சிங்கப்பூர் நாட்டில் ஆற்றில் ஓடிய குப்பைக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க சொன்ன அவரது பெரு உள்ளம் - தொண்டு மனப்பான்மை எத்தகையது பார்த்தீர்களா?

துன்பம் உறவரினுஞ் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை         (குறள் - 669)
- விடுதலை,2.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக