பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

எச்சரிக்கை - மனிதன் என்ற சுயநலக்காரன்!


மனிதன் தன்னைப் பகுத்தறிவுவாதி என்று ஆணவத்துடன் கூறி தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுகிறான்!

மிருகங்கள், ஏனைய பிராணிகள் அய்ந்தறிவு மட்டுமே உடையன என்று கர்வத்துடன் கூறுகிறான்!

மனிதனுக்கு மட்டுமே சிரிக்கத் தெரி யும் என்று “பீற்றிக்'' கொண்டு திரிகிறான்.

இத்தனைப் பெருமையுள்ள மனிதனைவிட மரங்களும், பறவைகளும், பிராணிகளும் அறிவில் குறைந்தவை. சிந்திக்கத் தெரியாதவைதான்.
என்றாலும், உலகில் இயற்கையைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள்!

‘‘ஆறுகள் நமக்குத் தண்ணீரை காசு வாங்காமல் தாராளமாகத் தருகின்றன. மனிதர்கள் செய்யும் சாகுபடிக்குப் பாசனமாய் உதவி, பயிர்கள் செழிக்க உதவுகின்றனவே தவிர, தனது தண் ணீரை தான் மட்டும் குடிக்கவோ, சுய நலத்தோடு தன்னோடு மட்டுமா நிறுத்திக் கொள்ளுகின்றன?  இல்லையே!
ஓ, மனிதா! இதைக் கவனித்தாயா?

மரங்களைப் பாருங்கள், பருவத்தில் தவறாது காய் கனிகளைத் தருகின்றனவே - அவைகளை அவைகளா உண்ணு கின்றன?

கடப்பாடு வேண்டா மாரி என்று பெயரெடுத்த மாமழை யாருக்காகப் பெய்கின்றது?

அகழ்வாரையும் தாங்கும் நிலம், பயிர்களையும், செடி, கொடி, தாவரங்களையும் தனக்காகவேதான் பயன்படுத்திக் கொள்கின்றனவா?

அதை அசிங்கப்படுத்துபவரையும், மனிதனின் இறுதிக் காலத்தில் - மாண்ட அவனை பெருமனதோடு மன்னித்து, தன் மடியில் இட்டுத் தாங்குகிறதே!
இவற்றையெல்லாம் கண்ட பிறகும்கூட, ஓ, மனிதா, ஏன் நீ இன்னமும் சுயநலத்தின் சூறாவளியாய் அலைகிறாய்?

அய்ந்தறிவுள்ள மிருகங்கள்கூட அவற்றின் பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன், பேத்திகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க அலைவதில்லையே!
தன்னை வளர்க்கும் எஜமானனுக்கு விசுவாசம் காட்டும் நாயைப் பார்த்தாவது, நன்றியினைக் கற்றுக் கொள்ளக்கூடாதா, ஓ மனிதா நீ?
நீ ஏன் வளர்த்தவனை நோக்கி காலை வாரி விடும் கயமைத்தனத்தில் உழலுகிறாய்?

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனியாகவும் பிறக்கவில்லை.'' அப்படிப் பட்ட மனிதன் ஏனோ தனிமைச் சுயநல பிம்பமாய் உலவுகிறான்? வெட்கக்கேடு அல்லவா இது?
தனக்காக வாழாது, அடையாளம் தெரியாத மனிதர்க்கு உதவியது, வாழ்க் கையின் ஒரு கட்டத்தில் அதுவே, கட்டி வைத்த சோறு பயன்பட்டதைப்போலவே, விட்டு வந்த கடன் திரும்ப வந்து மகிழ்ச்சி அளித்ததைப் போல ஓர் நிகழ்வைப் படித்தேன் - தேனைவிட இனித்தது அது!

அதை உங்களிடம் பகிர்ந்து கொள் வதில்தான் எத்தனை எத்தனை மகிழ்ச்சி!

1892 இல் அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக் கழகத்தில் படித்த ஒரு 18 வயது நிரம்பிய மாணவன், சம்பளம் கட்ட முடியாது அவதிப்பட்டான்; காரணம், அவன் ஓர் ‘‘அனாதை!’’
எப்படி பணம் திரட்டி, சம்பளம் கட்டுவது என்று தவித்த இவனுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இன்னொரு நண்பனோடு சேர்ந்துகொண்டு ஒரு இசைக் கச்சேரி (பியானோ) நடத்தி பணம் திரட்டுவது என்று இருவரும் முடிவுக்கு வந்தனர்.

நேரே, பிரபல பியானோ வாசிப் பாளரான இக்னேசி ஜே.பேடரிவாஸ்கி  என்பவரிடம் சென்றனர்.

அவரது நிர்வாகி, அந்த பியானோ கச்சேரிக்கு 2000 டாலர் தருகிறோம் என்ற உத்தரவாதத்தினைத் தரத் தயாரா? என்றார்.

இம்மாணவர்களும் ஒப்புக் கொண்டனர். பிரமாதமாக விளம் பரப்படுத்தினர், எப்படியும் பியானோ கச்சேரி தங்களுக்கு உதவும் என்ற நன்னம்பிக்கையுடன்; காரணம், அவர் ஒரு பிரபலமான பியானோ கச்சேரிக்காரர்!

நிகழ்ச்சியில் எதிர்பார்த்தமைக்கு மாறாக ஏமாற்றமே காத்திருந்தது!

மொத்த வசூலே 1600 டாலர் அளவுதான்! மிகவும் வேதனைப்பட்ட இருவரும் பிரபல பியானோ வாசிப்பாளர் பேடரிவாஸ்கி அவர்களை நேரில் சந்தித்து, இதனை மறைக்காமல் கூறி, வசூலான 1600 டாலர் பணத்துடன், 400 டாலருக்கு ‘செக்' எழுதி (பின் தேதியிட்டு) தந்து, ஏற்க வேண்டினர்!

பேடரிவாஸ்கி  அவர்களோ, இதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறி, இந்தப் பணம், செக் இரண்டையும் திருப்பித் தந்துவிட்டுச் சொன்னார்,

‘‘தயவு செய்து, இதில் நிகழ்ச்சிக்கான செலவு போகவும், உனது சம்பளத் தொகை போகவும், மீதமிருந்தால் அதை மட்டும் எனக்குக் கொடுங்கள்'' என்றார்!

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்தி விடைபெற்றனர்!

இந்தப் பியானோ பிரபலக்கார இசை மேதை பின்னாளில் போலந்து நாட்டின் பிரதமர் ஆனார்!

சிறந்த ஆளுமை உள்ளத் தலை வர்தான் என்றாலும், முதல் உலக யுத்தம் காரணமாக, போலந்து நாட்டு மக்கள் பசி, பட்டினி, பஞ்சத்திற்கு ஆளாகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தனது நாட்டின் ஒரு கோடியே 50 லட்சம் மக்களின் பசி, பிணியைப் போக்க தங்களிடம் பணம் இல்லாததைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க உணவு நிவாரண நிர்வாகத்திடம் உதவி கோரினார்.
அப்போதைய அதிபர் ஹோவர் உதவி செய்ய ஒப்புக்கொண்டு, உடனே கப்பல் மூலம் பல நூற்றுக்கணக்கில் உணவு வகைகளை அனுப்பி, பட்டினியால் பரிதவித்த போலந்துவாசிகளுக்கு உதவினார்!

பிரதமர் பேடரிவாஸ்கி அவர்கள், அமெரிக்க அதிபருக்கு நன்றி செலுத்த நேரில் சென்றார். அமெரிக்க அதிபர் ஹோவரை சந்தித்து நன்றி சொன்னபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா?

‘‘தயவு செய்து நீங்கள் எனக்கு நன்றி கூறவேண்டாம் பிரதமர் பேடரிவாஸ்கி அவர்களே, பல ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வை நீங்கள் மறந்திருப்பீர்கள்; ஸ்டாரண்ட் போர்டு பல்கலைக் கழக மாணவர்களில், ஒரு மாணவருக்குச் சம்பளம் கட்ட உதவினீர்களே, அந்த மாணவன் நான்தான்'' என்று கூறி, அவரையே திகைக்க வைத்தார்.
இந்த உலகம் விசித்திரமான ஒன்று!

‘What goes  around comes around’’    செய்தது தானே திரும்புவது அதன் விசித்திரங்களில் ஒன்று! எனவே, நாம் அனைவரும் நமது வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப உதவினால், அந்த விதை மீண்டும் பூக்கும், காய்க்கும். கனிந்த பலனைத் தரும், இல்லையா? என்றார்.
பொதுநலம் ஒரு ஊற்று;

தன்னலம் என்றுமே வற்றும் கிணறு-
மறவாதீர்!

-  கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,9.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக