பக்கங்கள்

வியாழன், 20 அக்டோபர், 2016

வற்றாத ஆறு இதோ!




ராபின் ஷர்மா என்ற அமெரிக்க எழுத்தாளர், வாழ்வியல் பற்றிய பல நூல்களை எழுதியுள்ளார். அதில் மிகவும் பிரபலமான ஒன்று Who will cry when you die? -- ‘இறந்தால் யார் அழுவார்கள்?’ என்ற அந்நூலில் உள்ள சில கருத்துகளின் பிழிவு இதோ:

இந்தப் புத்தகத்தில்...

‘‘நீ பிறந்த போது நீ அழுதாய்... உலகம் சிரித்தது.... 
நீ இறக்கும்போது, பலர் அழுதால்
அது உனக்குப் பெருமையை ஏற்படுத்தும்.

அறிஞர் திருக்குறளார் வீ.முனுசாமி அடிக்கடி தனது உரையில் குறிப்பிடுவார்.

‘‘ஓ! மனிதா, நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறந்தாய் என்றாலும், நீ மறையும்போது பலர் அழவேண்டும்; அவைதான் உன்னை ஒரு நல்ல மனிதனாக - மனிதம் படைத்த மனிதனாக உயர்த்திக் காட்டும்‘’ என்று உருக்கமாகச் சொல்வார்!

அதிலுள்ள அற்புதமான கருத்துகளை நமக்கு இணையத்தின்மூலம் அனுப்பியுள்ளார் நண்பர் ஒருவர்.

அவற்றின் பிழிவுகள் இவை:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றைச் சொல்லித் தருகிறார்; எனவே, நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப்படாதீர்கள்; தேவை எனில், கவலைப்படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது மணித்துளிகளை ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்துக் கவலைகள் குறித்தும் சிந்தியுங்கள்.
(கவலைப்படுவதால் தீர்வு கிட்டி விடாது என்பது பொது உண்மை).

4. அதிகாலை எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலை எழுபவர்களே!
(நேரம் கூடுதலாக கிடைக்கும் உணர்வு அதன் மூலம் கிட்டும்!)

5. தினமும் சிரிக்கப் பழகுங்கள் - மகிழுங்கள்.
(‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்‘ என்பது பழைய பழமொழி அல்லவா?) அது நல்ல ஆரோக்கியத்தையும், ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தரும். (மன பாரம் - சுமை குறையுமே!)

6. நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள். எங்கு சென்றாலும், பயணத்தின்போதும்கூட ஒரு புத்தகத்தை கையோடு எடுத்துச் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் அது மன அழுத்தத்தைக் குறைக்கும்!

இப்படிப் பல அறிவுரைகளை ‘ராபின் ஷர்மா’வின் புத்தகம் அள்ளி அள்ளித் தருகிறது!

(புத்தக நண்பர்களைப்போல புத்தாக்கம் தரும் நண்பர்கள் வேறு எவரே உளர்? என்பது நமது கேள்வி!)

படித்த பின் கற்க
‘கற்ற பின் நிற்க அதற்குத்தக’

 

- கி.வீரமணி
-விடுதலை,18.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக