முற்போக்குச் சிந்தனையும், சமூக மாற்றத்தில் அக்கறையும் கொண்ட - தவறானவைகளையே சரியானவைகளாகச் சாதிக்கும் சமூக முதலைகள் நிறைந்த - நமது நாட்டுக் கலை உலகின் புரட்டர் களை நாசுக்காக அம்பலப்படுத்தும் அறிவுப் புரட்சி யாளர்களாக பல இயக்குநர்களைச் சந்தித்தபோது, நம்முள் நம்பிக்கை துளிர்த்தது!
‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்தோம். இன்றைய சமுதாய ஊழல்களை தோலுரித்து ‘எக்ஸ்ரே’வாகக் காட்டியிருந்தார் இயக்குநர் ராஜுமுருகன்.
அப்போது அவர் நமக்கு பல சிறந்த இயக்குநர் - எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தினார்.
நம்மால் ‘நம் வீட்டுப் பிள்ளைகள்’ என்ற பெருமிதத்துடன் பார்க்கப்படும் வெற்றி இயக்குநர் வெற்றிமாறன், சீரிய சிந்தனையாளர் சீனு இராம சாமி - இவர்களது அறிவார்ந்த சமூகம் சார்ந்த திரைப்படங்களைப் பாராட்டியுள்ளோம். கலை நமக்கு விரோதி அல்ல; கலையை ஆதிக்கத்தின் அடி வேராக மாற்றும் பழைமையாளர்களும், சுயநல சக்திகளே நமக்கு - நம் இனத்தின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் தீராப் பகைவர் கள் என்று கூறிய பெரியாரின் தொண்டன் அல்லவா நாங்கள்.
அவ்வரிசையில் எவ்வளவு கவிதை, கற்பனை - எழுத்தாற்றல் உள்ளவராக இயக்குநர் தயாரிப்பாளர் லிங்குசாமி அவர்கள் உள்ளார்கள் என்பதை அவர் அன்று அறிமுகமானபோது, ‘அய்க்கூ’ கவிதைகள், புதுக்கவிதைகள் கொண்ட இரண்டு கவிதை நூல்களை அளித்தார்.
படித்தேன் - சுவைத்தேன் - பெருமிதம் தந்தது! நம் இளைஞர், வாலிபர், நடுத்தர வயதாளர்கள் எல்லோரும் முகிலைக் கிழித்த முழு மதிகளாக பரிணமிக்கின்றனர் என்று வியந்தேன்.
லிங்கூ 2 என்ற ஒரு நூலில் வரைகோடுகளாக ஓவியமும், கவிதைகளும் ஒய்யாரப் போட்டியில் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன!
செல்ஃபி மோகம் இன்று எவ்வளவு அங்கெங் கினாதபடி எங்கும் நிறைந்துள்ளது; பல நேரங்களில் உயிர்க்கொல்லியாகவும்கூட ஆகிவிடு
கிறது என் றாலும்கூட,
‘செல்பி எடுத்துக் கொள்கிறது மரம்‘ என்ற தொகுப்பு எல்லாம் சிந்தனைத் தெறிப்புகள்!
‘‘நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ உதிர்ந்து கொண்டிருக்கிறது ஒரு பூ’’
- என்னே கருத்து வளம்!
‘‘வீட்டில் நிகழ்ந்த மரணம் அறியாமல்
எப்போதும் கூவிக் கொண்டிருக்கிறது
குயில்’’
‘‘மரத்தடியில்
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர்
கற்றுக் கொடுக்கிறது
மரம்‘’
‘‘பதித்த எல்லாத் தடங்களும்
அடுத்த அலைவரைதான்’’
‘‘இன்னும் கூவித்தான்
விற்க வேண்டியிருக்கிறது
பூக்களை’’
- இப்படி எத்தனையோ கவிதைச் சொடுக்குகள்!
கருவாட்டை விற்பவர்கள்
கூவுவதில்லை. காரணம்
அதன் ‘நாற்றமே’ சுண்டியிழுக்கிறது
பல காலம் பழகிவிட்டதால் - இல்லையா?
என்றே கூறத் தோன்றுகிறது.
வண்ணத்துப் பூக்களை, வாடா மலர்களான மண மல்லிகளைக்கூட கூவித்தான் விற்றுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்! கூந்தல் உள்ளவர்களும் வாங்கத் தயங்குகிறார்களே!
எனவே, இன்னும் பல லிங்குசாமிகளைத் தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம்.
- நாளை பிருந்தா சாரதியின் ஒரு சுவையான சொடுக்குபற்றி....
- கி.வீரமணி
-விடுதலை,8.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக