பக்கங்கள்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வாருங்கள், இந்தக் கருவூலத்தைப் பாருங்கள், படியுங்கள்!

 சில நாள்களுக்கு முன் சீரிய சிந்தனையாளரும், சிறந்த  எழுத்தாளருமான அருமை சகோதரர் கவுதம சன்னா அவர்களும், அதேபோல் சிறந்த ஆய்வாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், பெரியார் – அம்பேத்கரின் கருத்தாளருமான ஜெர்மனி வாழ் சுபாஷினி அவர்களும் என்னை சந்தித்து, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களது உரைகள், எழுத்துகள் முதலியவற்றை பல புதிய முறையில் விளக்கப்பட பல நூல்கள் என்ற அறிவு நிதியை அளித்தனர்; தோழர் டாக்டர் ஒளிவண்ணன் அவர்களும் உடன் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் திரு.கவுதம சன்னா அவர்கள் கடுமையாக உழைத்து, பெரும் பொருட் செலவில் – தமிழ்ச் சமூகத்தை ‘அம்பேத்கரியம் இதுதான்’ என்று விளங்கிக் கொள்ளும் வகையில் அரிய தொகுப்புகளாக அவை அமைந்தன.

வியந்துபோனேன்! எளிதான சாதனை அல்ல அது. எழுத்து, பதிப்புலகில் அது ஓர் இமாலயச் சாதனை!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அருமை சகோதரர் முனைவர் தொல். திருமாவளவன் அணிந்துரையோடு வந்த அந்தக் கருத்துக் கருவூலத்தை நேர நெருக்கடியிருந்த போதிலும்,  ரயில், கார் பயண நேரத்தில் படித்து விடும் ஒரு மகிழ்ச்சி நோய் !(?) எனக்கு எப்போதும் உண்டு. அதன்படி படித்து எழுதுகிறேன்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள் (அவரது கடிதங்கள் உட்பட) என பல தொகுதிகளாக கொணரப்பட்டுள்ளது. ‘அம்பேத்கரியம் வழிகாட்டி’ என்பது அரிய படங்களுடன் அம்பேத்கரின் நூல்கள் உட்பட பல நூல்களின் தமிழாக்கம் உள்ளன.

முன்பு பெருமைக்குரிய பேராசிரியர் அரசு  மற்றும் சீரிய பகுத்தறிவாளர் புலவர் செந்தலை கவுதமன் போன்ற நண்பர்களைக் கொண்டு ‘திராவிட மாடல்’  அரசின் உதவியோடு, குறைந்த விலைக்கு நியூசெஞ்சரி வெளியீடு வந்ததும் ஒரு வகை மக்கள் பதிப்பாக மதிப்பும், பாராட்டத்தக்கவகையில் அமைந்தது என்ற  மற்றொரு வகையில் முக்கிய மானது!

வாழ்வியல் சிந்தனைகள்

சகோதரர் கவுதம சன்னா அவர்களது இந்தத் தொகுப்பில் சிறப்புக்குச் சிறப்புச் சேர்க்கக்கூடிய, இதுவரை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைப்பதற்கரிய பொன்னான வாய்ப்பு – புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின்கடிதங்களாகும் (இது ஆங்கிலத் தொகுப்பு).

1936இல் முதன் முதலில் 90 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டிற்கு டாக்டர் அம்பேத்கர் அறிமுகமாகாத கால கட்டத்திலேயே, அவரது வரலாற்றுப் பெருமை இது.  அந்நாளில் அவர் ஆற்றவிருந்து, ஆற்றாது மறுத்து வெளியான  Annihilation of Caste என்ற நூல் – அதனைக் கேள்வியுற்று அந்த ஆங்கில உரையை கடிதவியலில் டாக்டர் அம்பேத்கரை அனுப்பச் சொல்லி, தனது ‘பச்சை அட்டை’, ‘குடிஅரசு’ வார ஏட்டில் தொடராக வெளியிட்டு பிறகு ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் மக்களிடம் சேர்க்க 4 அணா விலையில் அச்சிட்ட முன்னோடி அறிவு ஆசான் தந்தை பெரியார் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து மகிழக் கடமைப்பட்டவர்களாவர்.

அதனால்தான் தொடர்ந்து நாம் கூறி வருகிறோம் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று!

‘சமூக விடுதலை’ என்பது அந்த நாணயம்தான் – பெற்றுத் தரத்தக்க ஒன்றாகும்.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பல தரப்பட்ட கடிதங்களைப் படிக்கும்போது, நம்மை அறிய வைக்க  அவர்தம் எதிர் நீச்சல் – அவருக்குப் பேராதரவு தந்து படிக்க உதவிய சமூகப் புரட்சியாளர், பிற்பட்ட சமுதாயத்தின் முதற் கடமையான இடஒதுக்கீடு மூலம் அதனை சமப்படுத்த முயன்ற (1922 – ஒரு நூற்றாண்டு) கோலாப்பூர் மன்னர் சிவாஜி பரம்பரை  சத்ரபதி சாகு மகராஜ் அவர்களது கடிதம் போன்ற அரிய தகவல்கள், கடித இலக்கியமாய், சிந்தனைச் செல்வமாய் நமக்கு கிடைக்க கவுதம சன்னாவின் கடும் உழைப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

அதன் சிலகடிதங்களிலேயே அதன் மூலம், அக்காலத்தில் அரசியல் பொது வாழ்க்கை எப்படிப் ‘படி’ உயர் ஜாதியினர் ஆதிக்கக்களமாய் அவர்கள் எழுதியதே எல்லோருக்கும் பழைய ஒப்பனை, ‘வேத சரக்கு’ என்று கூறி, தங்களது சமூக அநீதியை நியாயப்படுத்தியது பற்றிய பல தகவல்கள்  இன்றைய தலைமுறையை வெகுவாக சிந்திக்க வைக்கும் கடிதங்களாகும். சிலவற்றைப்பற்றி ஒரு சிறு தொடராக உங்களுக்குத் தருவதில் நமக்கு ‘ஈத்துவக்கும் இன்பம்’ என்ற ‘‘சுயநலம்’’ பெறுகிறோம்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 18.8.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக