பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2015

பேராசைக்குத் தடை போடுங்கள்!


மோசடிகளில்கூட மிகவும் முன் னேற்றமான முறைகள் (?) உலகில் எங்கும் காணப்படுகின்றன.

இணையம் - அறிவு சார் கண்டுபிடிப்பு - அகில உலகத்திலும் தகவல் பரிமாற்றத்தினுடைய மிக அருமையான சாதனம்! அதைவிட செய்திகள் காற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு அதி வேகத்தில் பயணிக்கும் நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மின் அஞ்சல் என்பதன்மூலம் ஒரு கோடியிலிருப்போர் மறுகோடி மனிதர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும், உரையாடல்களை (Chatting) நிகழ்த்தவுமான அரிய வாய்ப்பு கள் இந்த மின்னணுவியல் துறை யின் மகத்தான கண்டுபிடிப்புகளால் மிகவும் மலிந்துவிட்டன!

ஆனால் இதன் மறுபக்கமோ மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கும், ஆபாச வியாபாரத்திற்கும் வித்திடும் கொடூரமான நிலையும்கூடவே வளர்ந்து வருகின்றன!

சைபர் கிரைம்ஸ் (Cyber Crimes) என்ற இவ்வகை குற்றங்கள் நாளும் புதுப்புது வடிவங்களை எடுத்து, மனித குலத்தை வாட்டி வதைத்துக் கொண்டே யிருக்கின்றன!

ஒரு பட்டதாரி இளைஞன், பொறி யியல் கல்லூரியில் படித்தவர் என்று நினைவு, அவருக்கு ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு இந்த வங்கி மூலம் (வெளிநாட்டிலிருந்து) 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. அதை நீங்கள் பெற வேண்டுமானால், கீழ்க்காணும் கணக் குக்கு 5 லட்ச ரூபாய்களை உடனே அனுப்புங்கள் என்றவுடன் பல கோடி ரூபாய் வருவதை எண்ணி கனவுலகத்தில் சஞ்சரித்த அந்த இளைஞன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்; தன் கையில் பணம் இல்லை.

தாய், தந்தை நண்பர் களிடம் பணம் சிறுகச் சிறுக சேர்த்தான். கடனாகவும் (ஏராளமான வருவாய் வருவதால்) பெற்று அந்தக் கணக்கில் பணத்தைப் போட்டு மிகுந்த ஆவலுடன், கோடிகளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்!

கடன் கொடுத்தவர்கள் வட்டியையும், முதலையும் திருப்பிக் கேட்டபோது தான் இவருக்கு ஏற்பட்ட நெருக்கடி புரிந்தது! வசதியற்ற அவன், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டு தூக்கு மாட்டிக் கொண்டு செத்து மடிந்துள்ளான் - என்னே பரிதாபம்! படித்தவர்கள்கூட பகுத்தறிவைப் பயன்படுத்தவில்லையே!

உனக்குப் பசியா வரம் தருகிறேன் அம்மணி. எனக்குக் கொஞ்சம் பழைய சோறு போடு! என்று கேட்ட  சாமியாரை நம்பி, தன் வீட்டில் இருந்த பழைய சோற்றை துணைவருக்கென ஒதுக்கி வைத்தது - இந்தக் காவி மோசடி சாமியாருக்குப் போட்டு விட்டார் ஒரு வயதான பெண்மணி!

(தந்தை பெரியார் சொன்ன குட்டிக் கதை இது) கணவன் வீடு வந்தவுடன் இந்தப் பெண்மணி அவரிடம் சொல்ல, அவர் மோசம் போய் விட்டாயே, உனக்குப் பசியா வரம் தரும் சக்தி அவனுக்கு இருந்தால், அந்தச் சாமியார் ஏன் உன்னிடம் பழைய சோறு கேட்பான்? - புரிந்து கொள்ளவில்லையே - ஏமாந்து விட்டாயே! என்றாராம்! அதன்பிறகு தான், தன் அறியாமையைப் புரிந்து வருந்தினாராம் - அந்தப் பெண்மணி!

பேராசை - குறுக்கு வழிகளில் பணம் சேர்த்தல், தகுதிக்கு மீறி போலிப் பெருமைகளுக்காகக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்த முடியாமல் ஒளிந்து வாழும் உன்மத்த வாழ்க்கை - இவை எல்லாம் தொடர் கதைகளாகி விடும் அவலம் ஏற்பட்டு, அத்தகையவர் களைத் துரத்திக் கொண்டே இருக் கும் வாழ்க்கை முழுவதும்.

எனவே அளவறிந்து வாழ வேண்டும். எதையும் யாராவது தாராளமாக அல்லது எதிர்பாராமல் தருகிறார்கள் என்றால் ஏன் என்று உடனே யோசிக்க வேண்டும். இவருக்கு என்ன இப்படி நம்மீது திடீர் ஆர்வம்? ஏன் இவர் வள்ளல் போல வாரி வாரி வழங்கி வலை வீசுகிறார் என்று யோசிக்க வேண்டும்.

எச்சரிக்கை யுடன் இத்தகைய ஆசாமிகளிடம் சிக்கிக் கொள்ளாமல்,  விசுவரூபம் எடுக்கும் பேராசைக்கு அடி பணி யாமல், எளிய வாழ்வு, சிக்கன வாழ்வு கடனற்ற வாழ்வு வாழ்ந்தால்  பல பகைவர்களைத் தவிர்க்கும் பலன் தரும் அவ்வாழ்வாக அமையும்.

எனவே எதிலும் அளவுக்கதிக மான கவனமும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
-விடுதலை,8.5.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக