பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

முதுமையும் ஏற்க இயலாத முடிவுகளும்!


இன்றைய நாளேட்டில் ஒரு வேதனை தரும் செய்தி. நெல்லையைச் சேர்ந்த 80 வயது நிறைந்த பிரபல டாக்டர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்!
நெல்லை சந்திப்புப் பகுதியில் தனியார் மருத்துவமனை நடத்தியவர் அந்த டாக்டர் (நாம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை)
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனராம்! அவர்களில் ஒருவர் முடக்கியல் டாக்டராகவும், மற்ற இரு பிள்ளைகள் தொழிலதிபர்களாகவும் உள்ளனராம்!
நெல்லைப்பேட்டைப் பகுதியில் அமைந்த ஒரு நகரில் (பெயர் கோடீசுவரன் நகராம்) தனியே வசித்து வந்த அவர் இப்படி  ஒரு முடிவை அவரே தேடிக் கொண்டாராம்!
அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் வயது முதிர்ந்த நிலையில் என்னைக் கவனிக்க யாரும் இல்லை. தற்போது பார்வை குறைந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்!
என்னே கொடுமை!
வறுமை, கடன் தொல்லை, காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி என்பது போன்ற காரணங்களால் நிகழும் தற்கொலைகளைக்கூட பகுத்தறிவாளர் களால் ஏற்க முடிவதில்லை. இருட்டுக்குப் பின் வெளிச்சம் உண்டு - இரவுக்குப் பின் வெள்ளி முளைத்து விடியல் வருவது உறுதி. இரவே இருபத்து நான்கு மணி நேரமும் நீடிக்காது என்பது தானே இயற்கை நியதி? புரிந்து கொள்ள பலர் மறந்து விடுகிறார்களே!
ஆனால் வளமை - வசதி  - வாய்ந்த - குறையில்லாத போதும் தனிமையும் உதவி செய்ய எவரும் முன் வரவில்லையே என்ற ஆதங்கமும் அந்த டாக்டரை தற்கொலை முடிவுக்குத் துரத்தியது எவ்வளவு வேதனையானதொரு செய்தி! அது மட்டுமா? அவர் பிள்ளைகள் அவ்வளவு பெரும் நிலையில் உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த தந்தையின் கடும் உழைப்பும், உதவியும் அல்லவா?
முதுமை எல்லோருக்கும் வருவது என்பது காலத்தின் கட்டாயம்; இயற்கை யின் நியதி; இதைக் கண்டு இப்படி ஒரு முடிவுக்கு வந்து தமது இன்னுயிரைப் போக்கிக் கொள்ளும் முடிவை எடுத்தது புத்திசாலித்தனமா?
நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, வாழத் திட்டமிட்டி ருக்கலாமே!
அல்லது வயதானவர்களுக்கென்று பல நகரங்களில் அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து, அதில் பணம் கட்டியாவது சேர்ந்து வாழ்ந்திருக்கலாமே! இந்த அவசரப்பட்ட முடிவுக்கு அவர் வந்தது - ஒரு கெட்ட வாய்ப்பு என்றே நினைத்து வருந்த வேண்டும்! ஆண் பிள்ளைகள் மூவர் - சம்பாதிப்பவர்கள் தங்களை ஆளாக்கியவரை, அம்போ என்று விட்டு விட்டார்களே என்ற பழி அல்லவா அவர்கள்மீது வீழ்ந்துவிட்டது!
ஒரு தரப்பு வாக்குமூலத்தை வைத்தே தீர்ப்பு எழுத நாம் விரும்பவில்லை என்றா லும் பொதுவாக நாட்டில் இன்றுள்ள நிலை என்னவென்றால், நம் நாட்டில் இப்போதைய தேவை கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகள் இல்லம் அல்ல.
மாறாக, கைவிடப்பட்ட முதியோர் பாதுகாப்பு பராமரிப்பு  இல்லங்களே யாகும்!
பெற்றோர்களைத் தங்களிடம் வைத் துப் பராமரிக்கும்போது அந்த முதியவர் களும் சற்று அந்தக் குடும்பத்திற்கு உதவிகரமான நீக்குப் போக்குடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, அங்கு நான்தான் வயதில் மூத்த குடும்பத்தின் தலைவன் என்ற பழைய ஆதிக்க நினைப்பிலேயே அதிகாரம் செலுத்தவோ, ஆணைகள் பிறப்பிப் பதோ இல்லாமல், அவர்களுக்கு இன்றுள்ள நிலையில் (ஏனெனில் மகன் மருமகள் ஆகிய இருவரும் வேலைக் குப் போகின்றவர்கள்; அவர்களுக்கும் குழந்தைகளை ஆளாக்கும் கடமை இப்படி பல உண்டு என்பதை மனதில் நிறுத்தி) அன்போடு நடந்து கொண்டு அரவணைப்பு அணுகுமுறை தேவை.
பிள்ளைகளும், தங்களுக்கும் முதுமை வரும்; இதே கதி நமக்கு வருங்காலத்தில் நமது பிள்ளைகளால் ஏற்பட்டால் நம் நிலையும் தற்கொலை யில் தான் முடிய வேண்டுமோ என்று ஒரு கண நேரம் சிந்தித்தால், முதியவர் களின் தவறுகளைப் பெரிதாக்காமல், தக்கதோர் அன்பு, பாசம், கடமை உணர்வினால் கட்டுண்டு, பல முதி யோர்களை காப்பகத்தில் புகாமலோ, தற்கொலை முடிவுக்கு துரத்துதலோ இன்றி வாழ வைக்க முடியும்! யோசிப் பார்களா?
- கி.வீரமணி
-விடுதலை,20.10.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக