பக்கங்கள்

வெள்ளி, 4 டிசம்பர், 2015

துறவியும் - நடன மாதும்!


காரில் பயணம் செய்யும்போது, வானொலி கேட்கும் பழக்கமுடையவன் என்பதால் இரண்டு நாள்களுக்குமுன், 75ஆம் ஆண்டு விழாவைக் கொண் டாடும் சென்னை வானொலியைக்  கேட்கும்போது, இலக்கியப் புரட்சி எழுத்தாளர் பொன்னீலன் அவர்களது கணீர் குரலில் கதையொன்று ஒலித் தது!
ஒரு ஊரில் ஒரு துறவி. அவர் நமது ஆனந்தாக்களைப் போன்றவர்கள் அல்லர். உண்மையான துறவி - அவருக்குள்ள சிறப்பு சிறப்பாக ஓவியம் வரைதல்.
எவரையும் சிறப்பாக உயிரோட்டத் துடன் அவர் வரையும் ஓவியங்களால் இந்தத் துறவி பிரபலமானார்; ஆனால் அவரிடம் சென்று எவர் ஓவியம் வரையுமாறு கேட்டாலும் அதிகமான கட்டணம்   கேட்பாராம்! அவரது வியத்தகு திறமையைப் போற்றுவதால், அதிக கட்டணம் கொடுப்பதற்கு பலர் தயங்குவதில்லையாம்!
இவரது பெருமையை, ஓவியத் திறமையைக் கேள்வியுற்று ஒரு நாட்டியக்காரியான பெண்மணி - அவரும் ரொம்ப பிரபலமானவர்தான் - தனது ஓவியத்தை இந்தத் துறவி வரைவாரோ மாட்டாரோ தெரிய வில்லை; எதற்கும் நேரிற் சென்று கேட்டுப் பார்ப்போமே என்று எண்ணி, அவரிடம் சென்று தனது வேண்டு கோளை - விருப்பத்தைத் தெரிவித்தார். கட்டணம் மற்றவர்கள் தருவதைவிட மூன்று மடங்கு நீங்கள் எனக்குத் தர சம்மதம் தெரிவித்தால் ஓவியமாக உங்களை வரைந்து கொடுப்பேன் என்றார்.
இருவரும் ஒப்புக் கொண்டு, ஓவியம் வரைந்து முடிந்தவுடன், வேண்டுமென்றே அவரைச் சிறுமைப்படுத்த எண்ணிய நாட்டியக்காரியான அந்த நடன மங்கை, இது என்ன ஓவியம் என்னை மாதிரியே இல்லை; எனக்குத் தேவையில்லை என்று கூறி பணத்தை மட்டும் கொடுத்து, வீசி விட்டு போய்விட்டார். இவரோ அதற்காக சலனப்படவே இல்லை! இப்படி இவரை அவமானப்படுத்தியும் மனுஷன் கவலைப் படவே இல்லையே; இவரை வேறு வகையில் சிக்க வைக்க வேண்டும். அவமானப்படுத்த வேண்டும் என்று ஒரு விஷமத் திட்டத்தைப் மனதிற்குள் போட்டுவிட்டு, அவரிடம் சென்று, அந்த ஓவியம் தான் சரியாக இல்லை; இன் னொரு ஓவியம் வரையுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை எனது உள் பாவாடையை தருவேன். அதில் என் உருவ ஓவியத்தை வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்.
துறவி, வரைவேன்; ஆனால் அதற்கு ஆறு மடங்கு கட்டணம் தர வேண்டும் - ஒப்புவீர்களா? என்றார்! உடனே இருவரும் ஒப்பந்தம் முடித்து விட்டபின், இந்தப் பெண்மணிக்கு மனதிற்குள் ஏமாற்றம் - சரியென்று வெளியே கிளம்பிவிட்டார்.
சில நாள்கள் கழித்து, நடன மாது காரில் போகும்போது வேறு ஒரு கிராமம் வழியே செல்லுகிறார். அங்கே ஒரு புறத்தில் இந்த துறவி நின்று யாரிடமோ எதையோ அந்த ஊரின் மக்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் துறவி அந்த ஊரைவிட்டு, இங்கே வந்திருப்பது ஏன் என்று விசாரித்தபோது, அம்மா இவர் தனது ஓவியங்கள் மூலம் திரட்டிய பெரும் பணத்தை எங்களூரில் சாலை, பள்ளிக் கூடம், மக்களுக்கு உதவிகள் - இப்படியே செலவழித்து, எங்கள் ஊரையே மிகப் பெரிய புதுமைபுரியாக மாற்றிட நாளும் உழைக்கிறார்; இப்படிப் பட்டவரை எளிதில் எங்கும் காண முடியாது என்ற சொன்னவுடன்தான் அவர் ஏன் எவ்வளவு அவமானத்தையும் பொதுக் காரியத்திற்காக தொண்டுக் காக ஏற்றுக் கொண்டு அப்படி பணம் திரட்டினார் என்பது அந்த நடன மங்கைக்குப் புரிந்தது!
பணத்தாசை பொது வாழ்வில் உள்ள சிலருக்கு ஏன் வருகிறது என்பது புரிகிறதல்லவா?
பொது வாழ்வில் மானம் பாராது பணி செய்யும் வகையில் பணம் திரட்டி அதை தனது ஜாதிக்கோ, உற்றார் உறவினர் களுக்கோ, வைத்துவிட்டு, அல்லது உயில் எழுதி வைத்துவிட்டுப் போகாமல் தொண்டறம் புரிந்த தந்தை பெரி யாரின் பணத்தாசை பற்றி பலர் பேசியதுதான் நினைவுக்கு வந்தது!
கையெழுத்துக்குக்கூட நாலணா, புகைப்படம் எடுக்க அய்ந்து ரூபாய் என்று கட்டணம் இப்படி வசூலித்து தனது சொந்த செல்வத்தையும் பொது மக்களுக்கே  தந்து, பல்கலைக் கழகங் களும், மருத்துவமனைகளும், பகுத் தறிவுப் பிரச்சார பரப்புரை நிலையங் களும், கைவிடப்பட்ட குழந்தைகள், முதியோரை காக்கும் தொண்டறப் பணிகளுக்காகவும் அவர் திரட்டிய செல்வம் - பெரியாரின் திரண்டதனம் என்று சிலரால் வர்ணிக்கப்பட்டதற்குப் பொருள் அவருக்குப் பிறகு மக் களுக்குப் புரிந்தது.
தோழர் பொன்னீலனின் கதையைக் கேட்டபோது, பெரியாரையே அவரது தொண்டறத்தை உருவகப்படுத்திய தாகவே எங்களுக்குத் தெரிந்தது!
பணத்தைச் சேர்ப்பது முக்கியமல்ல. எதற்காக அது பயன்படுகிறது என்ப தல்லவா முக்கியம்!
துறவிகளுக்கு இப்படி ஆசை வந் தால் அதுவும் பொது நலத்தின் பாற் பட்டதென்றால் அது விரும்பத்தக்கதே!
- கி.வீரமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக