நேற்று உலக குருதிக் கொடை நாள் மட்டுமல்ல, முதியோர்களைக் கொடுமைப்படுத்தலைத் தடுக்கும் நாளும் கூட.
உலகெங்கும் உள்ள பல நாடுகளில் முதியோர்கள் எண்ணிக்கை மிகவும் கூடியிருக்கிறது. இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளும் பல அய்ரோப்பிய நாடுகளும் கூட இந்தப் பட்டியலில்!
முன்பு இருந்த சராசரி வயது இப்போது கூடியுள்ளது. மருத்துவ வசதிகளின் பெருக்கம், அறிவியல் மின்னணுவியல் துறை வளர்ச்சி Bio-medical என்ற துறையில் பொறியியல் மருத்துவத் தொழில் நுட்பம் மிகவும் உதவிகரமாக உள்ளது. Health Care என்ற ஒரு துறையே மருத்துவப் பொறியியல் துறையில் கூடுதலாக இணைந்து ஓர் அமைதிப் புரட்சிக்கு வித்திட்டு, மனித ஆயுளை மேலும் பல ஆண்டுகள் கூட்டியுள்ளது. இதெல்லாம் மகிழ்ச்சிக்குரிய சாதனைதான்; ஆனால் இதற்கொரு மறுபக்கம் நம் நாட்டிலும் மற்ற சில நாடுகளிலும் உள்ளது பற்றியும் நாம் யோசிக்க வேண்டாமா?
கூட்டுக்குடும்ப முறை நம் நாட்டில் வேகமாகச் சிதைந்து அல்லது தளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில், சொந்த மகன்கள் அல்லது மகள்கள் தங்களது தாய், தந்தையர்களைப் பெரிதும் கொடுமையாக நடத்தும் போக்கு தொத்து நோய் போல, (பன்றிக் காய்ச்சல் - டெங்குக் காய்ச்சல் போல) வேகமாகப் பரவி வருகிறது!
தங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, கல்வி கொடுத்து, உத்தியோகம் பார்த்து கை நிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை - அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன், ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை - அவமானம் பற்பல குடும்பங்களில் அன்றாட வாழ்க்கையாகி உள்ளது!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தாய் சொல் மிக்க வாசகம் இல்லை என்று சொல்லிக் கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டிலேயே - கைவிடப்பட்ட அல்லது விரட்டப்பட்ட முதுமையடைந்த தாய் தந்தையர்களின் கண்ணீர்க் கதைகள், சோக வரலாறுகள் அன்றாட அவல நிலையாகி வருகின்றன!
எதையும் பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறிதல் போன்று (Use and throw) அவர்களை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண்கள் - இரு பாலரும் மிகப் பெரிய சமூக விரோதிகள் அல்லவா? நன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள் அல்லவா?
இவர்களைக் கிரிமினல் குற்றவாளி களாக்க புதுப்புதுச் சட்டங்கள் நம் நாட்டிலேயே செயல்படத் துவங்கி யுள்ளன.
சில மாதங்களுக்கு முன் தந்தைக்குச் சோறு போட மறுத்த ஒரு மகனை சென்னை அயன்புரம் காவல்துறையினர் அழைத்துக் கண்டித்து, காவல்துறை லாக்அப்பில் உள்ளே தள்ளி, பிறகு நடவடிக்கைக்குப் பயந்தவர் தந்தையைப் பராமரிக்க ஒரு வழியாக ஒப்புக் கொண்ட தால் வெளியே அனுப்பிய செய்தி இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய செய்தி யாகும்!
சட்டத்தாலா மகன் தந்தை உறவும், பாசமும் கடமையும் நிலை நிறுத்தப்படவேண்டும்? இதைவிட நம் சமுதாயத்தின் கீழிறக்க நிலைக்கு வேறு என்ன உதாரணம் தேவை?
கணவன் - மனைவி உறவு கூட விலகிக் கொள்ள உரிமை அளிக்கும் உறவுதான். ஆனால் தாய் தந்தையுடன் மகன், மகள் உறவு, அண்ணன் தம்பி உறவு என்பவைகளெல்லாம் விலகிக் கொள்ளும் உரிமையை சட்டமோ அறநிலையோ அனுமதிப்பதில்லையே! அதுதானே அதன் தனிச் சிறப்பு.
மனித பாசத்தை, அன்பை, காதலை சட்டம் போட்டா ஒரு சமுதாயம் நிலை நிறுத்துவது? இதை விட மிகமிக வெட்கக்கேடு வேறு உண்டா?
முதியவர்களிடம் அலட்சியம் காட்டி, புறந்தள்ளி ஒதுக்கப்பட்டவர் களாக்கும் இளையவர்களே, உங்களுக்கு ஏன் ஒன்று மறந்து விடுகிறது?
நாளை நீங்களும் முதியவர்களாகி முதுமையில் தள்ளாடும் நிலை காலத்தின் கட்டாயம் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகிறீர்கள்? அப்போது உங்கள் செல்வர்கள் (பிள்ளை, பெண்கள்) உங்களை இப்படி நடத்திடுவர்; அப்போது உங்கள் மனம் எப்பாடுபடும் என்பதைச் சிந்தித்தீர்களா?
எனவே முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர் களுக்காக - மூடிய உங்கள் உள்ளங் களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள். இது அவர்களுக்காக அல்ல; நீங்கள் மனிதம் உள்ள மனிதர்கள்தான் என்பதை மன்பதைக்குக் காட்ட - மதிப்பும் மரியாதையும் பெறுவதற்காக! புரிகிறதா?
- கி.வீரமணி
-விடுதலை,15.6.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக