செவ்வாய், 16 அக்டோபர் 2012 விடுதலை
இன்று (அக்டோபர் 16) உலக உணவுப் பாதுகாப்பு நாள்! இதை யொட்டி கலைஞர் செய்தி தொலைக் காட்சியில் இன்று காலை ஒரு நல்ல தகவல்
- அறிவுரை ஒளிபரப்பப்பட்டது.
திருமணம், விருந்துகள் போன்ற வற்றினால் நமது (இந்திய) நாட்டில் சுமார் 950 டன்களுக்கு மேற்பட்ட சமைத்த உணவுகள், தூக்கி எறியப் பட்டு, விரயமாகின்றனவென்றும் இதன் மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டு, உணவை இப்படி குப்பைத் தொட்டியில் போட்டு வீணடிக் கலாமா? இது தவிர்க்கப்படுதல் அவசியம் என்று குறிப்பிட்டு, இதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மிக அருமையாக அந்த செய்தியாளர் விளக்கினார்!
பொதுவாக நம் நாட்டுத் திருமணங் கள் மிக மிக ஆடம்பரங்களாகக் காட்சி அளிக்கின்றன. இதைக் கண்டு வெட்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பலரும் - பணக்காரர்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினர்கூட இந்த போலி ஆடம்பர போதை மயக்கத்திற்கு ஆளாகின்றனர். இதைப் பார்த்த ஏழைகளாய் இருப்பவர்களில் பலர்கூட கடன் வாங்கியாவது தம் பிள்ளை களின் திருமணங்களை ஆடம்பர மாகவே நடத்திடவே ஆசைப்படுகிறார் கள்! கடனில் மூழ்கி தற்கொலைக்கு ஆளாகினர்.
பெரும்பாலான திருமணங்களில் காலைச் சிற்றுண்டியே ஏக தடபுடல், இரண்டு இனிப்பு, மற்றபடி எத்தனை அதிகப்படியான பலகார வகைகள் உண்டோ அதன் நளபாகங்கள் அத்தனையும் போட்டு காலை 9.30 மணி வரை இந்த விருந்து. திருமணம் காலை 10 மணிக்குத் துவங்கி (அது வைதிக புரோகித, சுயமரியாதைத் திருமணம் - எதுவாக இருந்தாலும்) 11 மணிக்கு முடிந்துவிடும். சில திருமண வைதீக மூடநம்பிக்கை யாளர்கள் வீட்டுத் திருமணம் காலை 9 மணி - ராகுகாலம் முகூர்த்த நேரம் இத்தியாதி! இத்தியாதி பார்த்து ஒரு மணிக்குள் முடித்து விடுவதுண்டு.
உடனே பலமான விருந்து - பலவகை பதார்த்தங்கள் - இனிப்புகள், அய்ஸ் கீரிம், பழங்கள் என்றால் 1 மணி இடை வெளியில் ஒருவர் என்னதான் அவர் சாப்பாட்டு ராமன்ஆக இருந்தாலும் எவ்வளவு சாப்பிட முடியும்? அதனால் உட்கார்ந்து சாப்பிட்டு எழுகின்றபோது - அவர்கள் தேவை அறிந்து பரிமாற முடியாத அளவுக்குக்கூட்டம் - பந்தி பரிமாறுகிறவர்கள் ரோபோக்கள் போல கடகடவென்று வாரி வாரிக் கொட்டிக் கொண்டே போவர்!
விளைவு...? இலையில் ஏராளமான வீணாக்கிய பண்டங்கள், சோறு, மற்றும் பல அய்ட்டங்கள் ஒரு இலை இப்போது ரூ.150 முதல் 200 வரை; இதில் மூன்றில் ஒரு பங்கோ அல்லது 50 சதவிகிதமோ கூட வீண் விரயம் - பசியின்றி, புசிக்கும் பரிதாப ஜம்பக் காட்சி!
வேறு முறையில் - Buffet (விருப்பத்துக்கேற்ப விருந்து) என்ற முறையில்கூட பலவற்றை அடுக்கி விருப்பப்பட்டதை எடுப்பவர்களில் பலர்கூட கொஞ்சம் கொஞ்சமாக எடுக்காமல், ஆசை அளவை அறியாது என்பதுபோல் அள்ளி அள்ளிக் கொண்டு, பிறகு சாப்பிடாது தட்டிலேயே தள்ளித் தள்ளி வைத்து விட்டு போய் விடுவதும் காணும் காட்சியே!
நாட்டில் ஒரு புறத்தில் உணவுப் பஞ்சம், பசி, பட்டினி, இவ்வகை உணவையே பார்த்திராத பரிதாபத்திற்கு பாட்டாளி, ஏழை, எளிய குடும்பங்கள் - சிறார்களிலிருந்து பெரியவர் வரை ஏராளம் இருக்கையில், மறுமுனையில், இப்படி ஒரு வெட்கப்படத்தக்க விருந்து - வீண் விரயர்களா?
இதைவிடப் பெரிய தேசியக் குற்றம் (National Crime) வேறு உண்டா?
வீட்டில்கூட தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கி இலையிலோ, தட்டிலோ வைத்து, விரயமாக்காது பரிமாறக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல வீடுகளில் அன்பால் கொல்லும் அநாவசிய ஆடம்பர உபசரிப்புகள் அறவே தவிர்க்கப்படல் வேண்டும்.
பசித்துப் புசித்தால்தானே உடல் ஆரோக்கியமாக அமையும்? ஆயுள் வளரும். முக்கால் வயிறு உண்டு கால் வயிற்றைக் காலியாக வைத்திருக்கும் பழக்கமுடையோர்க்கு ஆயுள் வளருவது உறுதி!
வறுமைக்கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழும் இந்தப் பரந்த நாட்டில் ஏன் இப்படி ஆடம்பரத் திரும ணங்களும், பசியற்ற விருந்துகளும்! பசை உள்ளதை பகிரங்கப்படுத்தப் பல நல்ல அறப் பணி வழிகள் உள்ளனவே. அதைச் சற்று எண்ணிப் பார்க்கக் கூடாதா?
முன்பு 1976இல் நெருக்கடி நிலை காலத்தில் 50 அல்லது 100 பேர்கள் மட்டும் தான் திருமணங்களுக்கு அழைத்தல் வேண்டும் என்ற சட்டக் கடுமை - அது இப்போது அவசரமாகத் தேவை போலும்!
அரசு அதிகாரிகள் சாப்பிட்ட இலை களை ஆள்களை விட்டு எண்ணி அபராதம்; சிறை விதித்த நிலைபோல் மீண்டும் வருவதுகூட வரவேற்கப்பட வேண்டியவையே!
ஆடம்பரம் என்பது மனித குல நோய்களில் மிகவும் அருவருக்கத்தக்க ஆபத்தானதொரு நோய். இதற்கு சிக்கன மருந்து தேவை! தேவை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக