பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

அமெரிக்காவிலும் இப்படி சிலரா? நம்ப முடிகிறதா?




23.1.2017, திங்கள்கிழமையன்று எழுதிய (ஆயிரமாவது) 'வாழ்வியல் சிந்தனை' கட்டுரையில்,

எதற்குப் பணம் சேர்க்கிறோம் என்று தெரியாமலேயே பலர் - அதுவும் பொது வாழ்வைப் பயன்படுத்தி, அரசியல்வாதிகளும், அவர்களது நண்பர்களும், அவர்களைப் பயன்படுத்தி கோடீசுவரர்களாகும் அதிகாரிகளும் தான் நினைவுக்கு வருகிறார்கள். நம் நாட்டில் பணம் சேர்த்து வைத்து செல்வது நியாயமல்ல என்று எழுதினோம்.

"உண்பது நாழி, உடுப்பது இரண்டு முழம்" என்ற மனிதர்களுக்கு ஊரையடித்து  உலையில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை புறநானூறு நக்கீரனார் பாடல் மூலம் சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஆடம்பரத்தில் வெளிச்சம் போட வெட்கமோ, லஜ்ஜையோ சிறிதும் இல்லாத பதவியாளர்கள், அரசியல்வாதிகள் படித்துப் பாடம் பெற வேண்டிய ஒருவரைப் பற்றிய கண்ணீர் காவியம் இதோ:

43 ஆண்டுகள் அமெரிக்கப் பொது வாழ்வில் ஜனநாயகக் கட்சியில் அலுவல் பொறுப்பில் இருந்தவர் ஜோ பிடன் (Joe Biden).

அவரது 29 வயது வயதில் அவர் செனட் உறுப்பினராகத் தேர்வு பெற்றார். செனட்டில் 35 ஆண்டு காலமும், துணைக் குடியரசுத் தலைவராக 8 ஆண்டுகளும் இருந்து அண்மையில் பதவி விலகிய ஜோபிடன் கதையைக் கேளுங்கள்....

அவரது மகனுக்குப் புற்றுநோய்; அதிலிருந்து சிகிச்சை  அளித்து, மகனைக் காப்பாற்ற வேண்டிய கடமை பொறுப்பு உண்டு அந்தத் தந்தைக்கு.

ஈராக் போரில் 'இராணுவ சேவை' செய்து பின் சொந்த மாநிலமான டெலவேர் (Delaware) திரும்பி அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றி வந்தவர் ஜோபிடனின் மகன்.

இவரைப் பயங்கர புற்றுநோய் பாதிப்பிலிருந்து காப்பாற்ற தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் செலவழித்து விட்ட நிலையில், தான் குடியிருந்த வீட்டையே விற்று தனது மகனின் புற்றுநோய் செலவினை ஈடு கட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ஜோபிடன் அவர்களுக்கு!

இதை அமெரிக்க அதிபர் ஒபாமா கேள்வியுற்று பதறிப் போனார்!

எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விற்க வேண்டாம்; செலவுக்கு தனது சொந்தப் பணம் தந்து உதவுகிறேன் என்று ஜோபிடன் அவர்களிடம் கூறினார் உணர்ச்சிபூர்வமாக!

வாஷிங்டனுக்கும், டெலவேர்க்கும்  ரொம்ப தூரம் இல்லை. செனட்டராக இருந்தபோது ஜோ பிடன் அவர்கள்  - டெலவேரும், வாஷிங்டனும் அருகருகே இருப்பதால் ரயில் வண்டிப் பயணம் மூலம் ஒவ்வொரு நாளும் வந்து தனது பணிகளை முடித்து மாலை திரும்புவார்.

2017 ஜனவரி 20இல் அவரது துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பு முடிவடைந்த நிலையில் இவர் மீண்டும் முந்தைய வழமை போலவே இரயில் மூலம்  டெலவேரிலிருந்து வாஷிங்டனுக்கு வந்து திரும்புவராம்!

டெலவேர் என்ற அந்த சிறிய மாநிலத்து மக்கள் ஜோ பிடனை அவரது எளிமைக்காக தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் அது நியாயம் அல்லவா?

இப்படியும் சில நாடுகளில் சில மனிதர்கள் - இல்லை இல்லை -  மாமனிதர்கள்!

நம்மூர் எட்டுப்பட்டி நாட்டாண்மை அரசியல்வாதிகளை நினைத்தால் வெட்கித் தானே தலை குனிய வேண்டும்!

இந்த எளிமை மனிதர்கள் எங்கிருந்தாலும் வாழ்க! வாழ்க!!
-விடுதலை,26.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக