பக்கங்கள்

செவ்வாய், 10 ஜனவரி, 2017

முதியோர்களே, காலத்தைக் கட்டி அணையுங்கள்!




முதியோரின் ஆயுள் - வாழ்வு வளருகிறது; காரணம் மருத்துவத் துறையின் அபார வளர்ச்சி - அரிய ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் மூலம் கிடைக்கும் மருந்து வகைகள்.

20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வளர்ச்சியே அறிவியலோடு தொழில் நுட்பமும் இணைந்து கொண்டதுதான்! அதனால் புதுப்புது மருத்துவக் கருவிகள் உண்டாக்கப்பட்டு எளிதில் கிடைக்கிறது! மனித வாழ்வு நீளுகிறது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், ஒரு சிப் போன்ற ஒன்று எளிதில் - கணினியின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் அணியும் காலணி (ஷூ Shoes)யிலோ அல்லது கழுத்தில் கட்டப்படும் டையிலோ சொருகி வைத்தவுடன், அதை அணிந்துள்ள வர்களது இதயத் துடிப்பு சீரின்மை யானாலோ, ரத்தக் கொதிப்பு மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ ஆனாலோ இந்த சிப் மூலம் அவரது குடும்ப டாக்டருக்கு உடனே தகவல் சென்று விடுமாம்! உடனடியாக டாக்டர் விரைந்து வருவாராம்! சிகிச்சை தொடங்கப்படுமாம்!

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் இன்சுலின் அளவு எவ்வளவு தேவை என்பதை ஒரு புதுக்கருவி, ஊசியேற்றுகையில்  அவருக்குத் தகவல் தெரிவித்து, தேவையான அளவு (Optimum)  போட்டுக் கொள்ள உதவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழில் நுட்பம் (Technology)  மூலம் பெறும் பயன் அல்லவா?

இதுபோல தொழில் நுட்பத்தினால் நமக்கு நடக்கும் அறுவை சிகிச்சை, இதய சிகிச்சைகளை படுத்துக் கொண்டுள்ள மேசையிலிருந்தே, மயக்க ஊசி மூலம் மயக்கம் ஏறுகிற வரையில் பார்த்துக் கொள்ளலாமே! (எனக்கேகூட சில ஆண்டுகளுக்குமுன் அந்த இனிய வாய்ப்பு - பார்த்த வாய்ப்பு கிடைத்தது!)

முதியவர்களுக்கு மற்ற அம்சங்கள் சரியாக இருக்கும் வரை, எந்த அறுவை சிகிச்சையையும் செய்திட மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தயங்குவதே இல்லை.

தந்தை பெரியார் அவர்களுக்கு அவர்தம் 90ஆம் ஆண்டு - 91ஆம் ஆண்டில் வேலூரில் டாக்டர் H.S. (Bhatt) பட் அவர்கள் குழுவினரால் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து அதற்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் வாழ்ந்தாரே! (அவ ரது 5 ஆண்டு என்பது மற்றவர்களின் 15 ஆண்டு வாழ்வு நீட்டத்திற்குச் சமம் ஆகும்).

எனவே வாழ்வு நீட்டப்படுவது அதி சயம் அல்ல; அவர்கள் மகிழ்ச்சியாக வாழு கிறார்களா?  என்பதுதான் முக்கிய கேள்வியாகும்!

அது உடலைப் பொறுத்தது அல்ல; உள்ளத்தைப் பொறுத்தது; மகிழ்ச்சியை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது! அவரவர் மனநிலை சுற்றுச்சூழல் உரு வாக்கம் - சுறுசுறுப்பு, உழைப்பு இவைக ளைப் பொறுத்தது!

1. வெறும் குடும்பத்து உறுப்பினர்களை மட்டும் நம்பிக் கொண்டு வாழாமல், தங்களுடைய பொருளாதாரச் சுதந்தி ரத்தை இறுதி வரை தக்க வைத்தாலே மற்றவைகள் தானே சரியாகி விடும்! நாம் பிறர் கையை எதிர்பார்க்காமல், எளிமை, சிக்கன வாழ்வினால் ஏற்பட்ட சேமிப்பு நமக்கு என்றும் துணைவனாக நிற்கும் என்பது உறுதி. இறுதி நிகழ்ச்சிகள்கூட செலவின்றி முடிப்பதோடு அதனால் சமூக நற்பயன் விளையவும் கூடுமே! எப்படி என்கிறீர்களா?

அருகில் உள்ள மருத்துவக் கல் லூரிக்கு உங்கள் உடலைத் தந்துவிட உயில் - மரண சாசனம் எழுதி பதிவு செய்து விடுங்கள். அதன்மூலம் சுதந்திர மாக வாழ்ந்த மனிதன்; சுதந்திரமாகவே எவர் தயவுமின்றி இறுதிப் பயணத்தை மருத்துவக் கல்லூரியின் சவக் கிடங்கை நோக்கியே செல்லக் கூடும்! எந்தச் செலவும் இல்லை. கண்ணாடிப் பெட்டிச் செலவுதான் - அதுவும்கூட உயர் ஜாதியினால் தவிர்க்கப்படுகிறது. (மூங்கில் பாடைதான் சம்பிரதாயம்)

2. நல்ல நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டு காலை, மாலை நடைப்பயிற்சியின்போதோ அல்லது வசதியான நேரத்திலோ அவர் களோடு கலந்துரையாடி உறவாடும் நிலை எய்தினால், யாருக்கும் சுமை இல்லை; சுகம் உண்டு!

3. நல்ல புத்தகங்கள் சிறந்த நண்பர்கள் அல்லவா? அவற்றை வாசித்து சுவாசிக்கலாமே!

காசு கொடுத்து வாங்க வேண்டாம். நூலகங்களுக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

4. கைத் தொலைபேசி, அய்-பேட் (i-pad) போன்றவை இருப்பின் உலகத்தையே அழைத்து, உலகச் செய்தி முதல் உள்ளூர் செய்திவரை, எந்த தகவல் பற்றித் தெரியவில்லை என்றாலும் கூகுள் போன்றவற்றைத் தட்டினால் உடனே கிடைக்குமே!

தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்! என்பதற்கு புதுப்பொருள் கண்டு  மகிழ்வுடன் மற்றவர்களுக்குக் குடும்பப் பாரமாய் இருக்காமல், சுதந்திர தாத்தாக்களாக, பாட்டிகளாக, அப்பா, அம்மாக்களாக வாழ்ந்து காட்டலாமே!

நம் சுயமரியாதை எப்போதும் நம் கையிலேயே இருக்குமே! இல்லையா?

 

- ஆசிரியர் கி.வீரமணி

-விடுதலை,24.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக