பக்கங்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

ஜப்பானின் மூத்த டாக்டரின் அறிவுரை (1)




ஜப்பானில் இப்போது முதுகுடி மக்கள்  (Senior Citizens) எண் ணிக்கை பெருகி வருகிறது!

அங்கு ஓய்வு பெறும் வயது 65 ஆக இருந்தாலும், சராசரி ஆயுள் ஜப்பானில் உள்ள மக்களுக்கு 68 ஆண்டுகள் நமது நாட்டிலும்கூட அந்த எண்ணிக்கையை தொடும் நிலையில் நாம் வந்துவிட்டோம் - மருத்துவ அறிவியல் வளர்ச்சி காரணமாக!

ஜப்பானியர்களில் 100 ஆண்டு களைத் தாண்டி வாழுபவர்கள் 125 பேர்கள் என்றும் ஜப்பானிய பெண்கள் - மூதாட்டிகள். 80 வயது முதல் 86 வயது வரை வாழுபவர்கள்.

நம் நாட்டில் நூறாண்டு கண்ட வர்கள் 36,000 பேர்கள். இன்னும் 20 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர்களாக (நூற்றாண்டு காணுபவரின்) உயரக் கூடும் என்பது  அறிஞர்கள் கணக்கு எதிர்பார்ப்பு.

ஷிகேகி ஹினோஹாரா (Shigeaki Hinohara)  என்ற டாக்டர் கடந்த ஆண்டு 101 வயதை எட்டி, மிகுந்த சுறுசுறுப்புடன் வாழுகிறார்! இவர் டோக்கியோவில் உள்ள செயிண்ட் லூக் இன்டர்நேஷனல் ஆஸ்பிடல் என்ற மருத்துவமனையில் 1941ஆம் ஆண்டு முதல் பணிபுரிவதோடு, செவிலியர்கள் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்!

தனது 75ஆம் ஆண்டில் இவர்  15 புத்தகங்கள் எழுதியுள்ளார்! அதில் ஒன்று நீண்ட காலம் வாழுவது நலமாக வாழுவது எப்படி என்று ஒரு நூலும் (Living Long, Living Good’) ஒன்று!

இவரைவிட சிறந்த எடுத்துக் காட்டானவர்கள் -  ரோல் மாடல் - வேறு யாரும் தேவையில்லை. இவரது அந்த புத்தகம் 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன!

டாக்டர் ஹினோஹாரா கூறும் முக்கிய அறிவுரைகள் - அனுபவக் கருத்துக்கள் - நீண்ட நாள் நலவாழ்வு வாழுவதற்கு என்னென்ன?

பார்ப்போமா?

உழைக்கும் சக்தி (Energy) என்பது நாம் நல்ல உணர்வுடன் இருப்பதினால் வருவதே தவிர, நன்றாகச் சாப்பிடுவ தினாலோ, நிறைய தூங்குவதினாலேயோ கிடைப்பதல்ல.

குழந்தைகளாக நாம் இருக்கும்போது, விளையாட்டு ஆர்வம் மிகுதியினால் நம்மில் பலர், சாப்பிடுவதற்கோ, தூங்கு வதற்கோகூட மறந்துவிட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. அதே உணர்வை நாம் பெரிய வர்களாக வளர்ந்த பிறகும்கூட தொடரலாம். தப்பில்லை. நம்முடைய உடம்புக்கு ஏகப்பட்ட விதிகளை - கட்டுப்பாடுகளைப் போட்டு, இந்த மணிக்குச் சாப்பாடு, இந்த மணிக்கு படுக்கைக்குப் போவது என்று

ஆக்கிக் கொண்டால்தான் நல்லது என்று கருதிட, அவதிப்பட வேண்டியதில்லை என்கிறார் இந்த டாக்டர்!

அதிக எடை இல்லாதவர்கள் பல இன மக்களில், பல நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள் உலகம் முழுவதும்!

நான் காபி சாப்பிடுகிறேன், ஒரு குவளை பால், ஆரஞ்சுச் சாறு அதில் ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு சாப்பிடுகிறேன்.

ஆலிவ் ஆயில் என்பது இதயக் குழாய்களுக்கு மிகவும் நல்லது; தோல் பாதுகாப்புக்கும் நலத்துக்கும் உதவக் கூடியது.

எனது மதிய உணவு கொஞ்சம் பால், சில குக்கீஸ் என்ற ரொட்டி வகையறா இல்லையெனில் சாப்பிடாமலேயே (No Lunch) இருந்து விடுவதும் உண்டு பணியில் அதிகமான கவனம் காரணமாக!

இரவு உணவு காய்கறிகள், கொஞ்சம் மீன், சோறு, வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே ஆட்டிறைச்சி (Leanmeat)

எனது வாழ்க்கை முறையில் 2014 வரை நான் திட்டமிட்டு பணியாற்றி வரு கிறேன். (இந்த பேட்டி பல ஆண்டுகள் முன்பு எடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்) 2016ஆம் ஆண்டு எனக்கு சில பொழுதுபோக்கு - கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபடும் திட்டம் டோக் கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பார்த்து மகிழும் திட்டம்! அடுத்த முக்கியக் கருத்து.

உங்களிடம் உள்ள கருத்துக்களை எண்ணங்களை - அனுபவங்களை மற்ற வர்களுக்கு அளித்து- பகிர்ந்து கொள் ளுங்கள்.

நான் இதுவரை 100 ஆரம்பப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு 150 உரைகளை ஆற்றியுள்ளேன், மற்ற வியாபாரம் தொழில் செய்வோருக்கு 4500 பேர்களுக்கு உரையாற்றி உள்ளேன் - எப்போதும் 60 நிமிடம் முதல் 90 நிமி டங்கள் வரை  பேசுவது எனது வழக்கம்.

நின்று கொண்டுதான் பேசுவேன். என்னை இளமையாக்குவதற்கும் தொடரு வதற்கும் அது பெரிதும் உதவுகிறது என்பது என் அனுபவக் கருத்து.

உங்களுக்கு எந்த டாக்டராவது அறுவை சிகிச்சை செய்து கொள் ளுங்கள் என்று அறிவுறுத்தினால் அவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய முதல் கேள்வி. ஏன் டாக்டர் இம்மாதிரி ஒரு அறிவுரையை உங்கள் துணைவி யாருக்கோ, உங்கள் பிள்ளைகளுக்கோ செய்ய முனை வீர்களா?

அப்படி என்றால் எனக்கும் செய் யுங்கள்! மற்றொரு தவறான கருத்து, டாக்டர்கள்  என்றால் எல்லா நோய்களையும் குணப்படுத்தி விடு வார்கள் என்பது! எல்லா நோய் களையும் அவர்களால் குணப்படுத்தி விட முடியாது. அப்படியிருக்கும் போது ஏன் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை அது இது என்று நோயாளிகளுக்கு அனாவசிய வலியையும் அவதியையும் உண் டாக்க வேண்டும்.

அதற்குப் பதில் இசை கேட்க வைப்பது செல்லப் பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்த்து அவைகளைப் பராமரிப்பது மூலம் ஒரு மன மகிழ்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்தச் செய்தல்  - இவை அல்லவா முக்கியம்?

எனது தந்தையார் ராபர்ட் பிரவுனிஸ் கவிதை ஒன்று (Abt Vogler) என்பதைப் படிக்கச் செய்வார்!

கலை உணர்வு நமக்கு அது போதிக்கும் ஒரு பெரிய வட்டத்தை நாளும் வரையத் தொடங்கினால் வட்டமே முடியாது! நீண்டு கொண்டே இருக்கும். அரை வட்டம் பெரிதாக இருக்கும்.

அதைவிட முக்கியம். ஏராளமான உலகப் பொருள் - செல்வம் - பணம்   உட்பட  தேவையின்றி மேலும், மேலும் சேர்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டே இருக்காதீர்கள்! உங்கள் வாழ்வு முடியும்போது இவைகளை உங்களுடனா எடுத்துப் போகப் போகிறீர்கள்?

(தொடரும்)

வலி (Pain) என்பது மிகவும் வியப் பானது- புரியாததும்கூட; சில நேரங் களில்! வேடிக்கைப் பேச்சு, நகைச்சுவை மூலம் அதனை மறக்க - மாற்றிட முயலுங்கள்!

பல் வலியால் அவதிப்படும் குழந்தை களோடு விளையாடிப் பாருங்கள்; அக் குழந்தை வலியை எளிதில் மறந்துவிடும் என்பதைக் காணுவீர்கள் - சேர்ந்து விளையாடுங்கள்.

மருத்துவமனைகள் என்பவை நோயாளிகளின் அடிப்படைத் தேவை களை அறிந்து செய்யவேண்டியவை களைச் செய்வதில் முனைப்புடன் செயலாற்றவேண்டியவை ஆகும்!

மருத்துவமனைகள் எப்போதுமே மிகவும் பெரிய அளவில், விசாலமான தாக அமைக்கப்படல் வேண்டும் (செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையை எங்கிருந்தும், எந்தப் பகுதியின் பணி களை - நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு தேவையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளும் வசதி களை உள்ளடக்கியதாகக் கட்டப்பட் டுள்ளது).

நான் இப்படி சொல்வதனால், பலரும் என்னை விசித்திரமான பார்வையோடு - இவர் என்ன இப்படிக் கூறுகிறாரே என்றுதான் பார்த்தார்கள். பெரிய நெருக்கடி, எதிர்பாராத பெரும் திடீர் விபத்துகள் நடைபெறும்போது அது வெகுவாகக் கைகொடுக்கும் என்பது புரியாமலிருந்தது. ஆம் ஷி ரின்க்யூ என்ற மதவாத தற்கொலைகளை அந்த இயக்கத்தவர் செய்துகொண்டு - மோட்சத்துக்கான ஒரே வழி அதுதான் என்ற அந்த மதத் தலைவரின் கூற்றினை ஏற்று, 740 பேர் ஒரே நேரத்தில் தற் கொலை - பயங்கரவாதச் செயலை டோக்கியோவின் கீழ் முனைப்பாதை (Sub-Way-ல்)யில் செய்ய முற்பட்ட போது, அவர்களை உடனடியாக இந்த செயிண்ட் லூக்ஸ் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்; ஒருவரைத் தவிர, 739 பேர்களை இந்த மருத்துவ மனை - தற்கொலையிலிருந்து காப் பாற்றி விட்டது! பெரிய மருத்துவமனை யாக அமைக்கப்பட்டதன் பயனை அன்றே - முன்பு எதிர்த்தவர்களே ஏற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது!

என்னதான் அறிவியல் - மருத்துவ இயல் வளர்ந்திருந்தாலும் அதன் உதவியால் எல்லோரையும் மருத்துவ சிகிச்சையினால் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட முடியாது; காரணம், நோய் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு வகை தன்மையைக் கொண்டது.

‘‘Illness is individual’’  ஒவ்வொரு வரின் உடற்கூறும் ஒவ்வொரு மாதிரி. இந்த நேரத்தில் ஒரு முக்கிய விளக் கத்தைக் கூறியாகவேண்டும்; நம்மில் பலர், நான் இந்த மருத்துவரிடம் காட்டி, இந்த மருந்து சாப்பிட்டு, குணப்படுத்திக் கொண்டேன்; அதே மருந்தை நீங்களும் எடுத்துக்கொண்டால் குணமாகும் என்று யாராவது சொன்னால், அதைக் கேட்காதீர்கள்; காரணம், அந்த ஜப் பானிய டாக்டர் சொன்னதுபோல், ஒவ்வொருவரது நோயும், ஒவ்வொரு தனித்தன்மையது ஆகும்! இந்தக் கட்டுரையை நேற்று (16.9.2014) எனது வீட்டிற்கு வந்து உரையாடிய அமெரிக் காவின் பிரபல புற்றுநோய் மருத்துவ ரான டாக்டர் திருஞானசம்பந்தம் (ரோட் அய்லாண்ட் பகுதியில் பிரபல மருத்துவர் அவர்) அவர்களிடம் இந்த ஜப்பானிய டாக்டரின் கருத்து பற்றிக் கேட்டேன்; அவர் அதற்கு அருமை யான விளக்கம் சொன்னார். புற்றுநோய் உடலின் ஒரு பகுதியில் வந்துள்ளது ஒருவருக்கு என்றாலும், அந்த ரக புற்றுநோய் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது; அதில் பலவகை - ஒன்றுக்கு மற்றொன்று மாறுபட்டதாக இருக்கும். எனவே, அந்த அனுபவம் மிக்க ஜப்பானிய மூத்த டாக்டர் சொன்னது 100-க்கு 100 விழுக்காடு உண்மை. நோய்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையில் அமைவது கண்கூடு என்றார்.

உணவில் சுவை எப்படி ஆளுக்கு ஆள் மாறுபடுகிறதோ, அதுபோலத் தான் நோயின் கூறுபாடும் - இல்லையா?)

இந்த நோயாளிகளைக் குணப்படுத் துவதற்கு இதயமார்ந்த, இரக்க உணர்வு, கருணை உள்ளம் தேவை. எனவே, அதற்கு பலவகை கலைகள் உணர்வு தேவை!
மேலும் அந்த ஜப்பானிய டாக்டர், தன் அனுபவத்தைக் கூறுகிறார்:

ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை என்பது!

1970 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, நான், 59 வயதுள்ளவன் அப் போது - டோக்கியோவிலிருந்து யோடோ விமானம்மூலம் ஃபுக்யோகா (Fukuoka) என்ற ஊருக்குப் போகப் புறப்பட்டேன். சூரிய ஒளி வீசிய அரு மையான காலை வேளை. எரிமலை யான மவுண்ட் ப்யூஜி (Mount Fuji) எங்கள் பார்வையில் விழுந்தது. அப் போது, ஜப்பானிய தீவிரவாதிகளால் அந்த விமானம் கடத்தப்பட்டது. (அய்ஜாக் செய்யப்பட்டது). கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில், 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நான்கு நாள்களைக் கழித்தேன். அதை ஒரு நல்ல அனுபவமாக நான் உணர்ந்தேன். எனது உடல் அதற்கேற்ப ஆயத்தமாகி விட்டது! மேலும் கூறுகிறார்:

60 ஆண்டுகள்வரை உங்கள் குடும்பத்தினருக்காக உழைத்தாலும்கூட நீங்கள் அதற்குமேல் சமுதாயத்திற்கான தொண்டறம் புரிய முன்வாருங்கள்.

வாரத்தில் 7 நாள்களும், 18 மணி நேரம் உழைக்கும் நான் சமூகத் தொண்டனாக என்னைப் பதிவு செய்து - 65 ஆம் வயதிலிருந்தே - பணி செய் வதில், எனக்கு அத்தொண்டு எல்லை யற்ற மகிழ்ச்சியைத் தருகிறதே!

ஒவ்வொரு நிமிடத்தையும், நான் காதலித்து வாழுகிறேன் என்றார்.

இதுவல்லவா பயனுறு வாழ்வு!

- கி.வீரமணி

-விடுதலை,16,17.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக