பக்கங்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

தோல்வியும் சுவைக்கத்தக்க அனுபவமே!

வாழ்க்கையாக இருந்தாலும், தேர்வாக இருந்தாலும், தேர்தலாக இருந்தாலும், விளையாட்டுத் துறையாக இருந்தாலும், வெற்றியைச் சுவைக்கவே விரும்புவதைவிட, தோல்வியை ஏற்கக் கற்றுக் கொள்ளுவதும், அதன்பாடங் களால் பயன் பெறுவதும் அனைவரும் பெற வேண்டும்.

எப்போதும் நிழலில் இருப்பவருக்கு வெயில் அனுபவமே தெரியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், நிழலின் பெருமை, அருமையை அவரால் உணர்ந்து, சுவைக்க முடியாது.

பசியே தெரியாதவன் வாழ்க்கை, பலனற்ற ஒன்றாகும்; ருசியும் அவனுக்கு அதிகமாகத் தெரியாது. உணவின் பெருமை பசியினால் தான் பெரும் அளவுக்கு உணர்த்தப்படும்.

எங்களுக்கே ஏற்பட்ட அனுபவம், மிசா கைதியாக சிறை உணவு என்ற தண்டனை உணவை (அதிலும் எங் களுக்குத் திட்டமிட்டே தரப்பட்ட அருவருக்கத்தக்க உணவை வேறு வழியின்றி உண்ட நேரத்தில்,) நம் வீட்டுச் சமையலின் அருமை, பெருமை களையும், சிறிது உப்புக் குறைவாக இருந்தபோதும்கூட அதற்காக கோபத் தின் உச்சிக்குச் சென்று வீட்டு அம்மை யாரிடம் சண்டை பிடித்த காட்சிகள் எல்லாம் எங்கள் அகக்கண் முன் தோன்றியது; சுயபரிசோதனை செய்து பிறகு பக்குவமாகும் பாடத்தையும் போதித்தது! வெற்றியே பெற்று வந்த நான் (அதிலும் முதல் தகுதி, பரிசுகள் பெறு கின்றவன் என்ற எங்கோ ஒரு மூலையில் பதிந்த தன் முனைப்பு - என்னை அறியாமலேயே - இருந்த நிலையில்,) சட்டப்படிப்பு முதலாண்டில் தோல்வி யுற்றபோது அதை எளிதில் ஏற்றுக் கொண்டு செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை.

நான் தோல்வியுற்றது தான் நியாயம், அதிசயமானதோ, அக்கிரமம் ஆனதோ அல்ல; காரணம் நான் சட்டக் கல்லூரி வகுப்புக்கே செல்லாமல், அன்னையாருடன் சென்று, தேர்வுக்கு 15 நாள்கள்தான் படித்தேன் - நானே பாடங்களை! அய்யத்துடன் தேர்வு எழுதினேன்; மிகக் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தோற்றேன் தேர்வில்!

எனது தோழர் கோ. சாமிதுரை அவரும் என்னைப் போலவே தோல் வியைத் தழுவியவர். இருவரும் அதி லேயும் கூட்டாளிகளாக  அமைந்தோம். அவர் அதை வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு வழமைபோல் சினிமா, பொழுதுபோக்கு - இவைகளை விடவில்லை. நானோ இயல்பாகவே அவற்றில் நாட்டம் இல்லாத இயக்கப் பணி - கூட்டங்கள், பிரச்சாரத்தில் திளைப்பவன்; அவற்றையும் ஒதுக்கி மும்முரமாகப் படித்து நல்ல மதிப் பெண்கள் பெற்றுத்  தேர்ந்தேன். அந்த அனுபவம் ஒரு வடுப்போல என்னை எப்போதும் பக்குவப்படுத்திய வாழ்க்கை அனுபவத்தைத் தந்தது!

கசப்புக்குப் பிறகு கிடைக்கும் இனிப்பின் சுவைதான் என்னே!

தோல்விக்குப்பின்னர் கிடைக்கும் வெற்றியின் மதிப்புதான் எவ்வளவு!

அது மட்டுமா? ஓர் அமைப்பில் வெற்றி கிட்டும்போது, அதனைக் கொண்டாட பலரும் உரிமை பாராட் டுவர்.

தோல்வி என்றால், எவரும் திரும்பும் முன் நம்மை தனியாக விட்டு ஓடவே முயற்சிப்பார்கள்.

இது உலக இயற்கைதான்! பழி தூற்றும் பகைவர்கள் பலரும் இச்சந்தர்ப்பம்தான் நமக்கு அரிய வாய்ப்புச் சேற்றை வாரி இறைத்து, நமக்கு வேண்டாதவர்களை அழிக்க, ஒழிக்க அரிய சந்தர்ப்பம் என்றும் மகிழ்வர். லட்சிய வீரர் - வீராங் கனைகளுக்கு இந்த பழியும் - குற்றச் சாற்றுகளும் பொறாமைப் புழுக்களின் புலம்பல்கள் என்று தூசி தட்டி விட்டு இலக்கு நோக்கியே பயணிப்பர் - கார ணம் வாழ்வில் என்றும் பயணங்கள் முடிவதில்லை; பாதைகள் மூடப் படுவதில்லை.

- கி. வீரமணி
-விடுதலை,19.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக