பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

தூக்கமும் - துக்கமும்!


பழைய அறநூல்களை இளைப்பாறுதல் கருதி, படித்து மகிழ்வேன்; கொள்ளை இன்பம் ஊற்றாய் வந்து உவக்கும்படி உடற்சிலிர்ப்பைத் தருவனவாக அக்காலத்துப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துரைகள் அமைந்துள்ளன!

நடைமுறை வாழ்க்கையில் நம் புலவர்கள் கண்டவற்றைப் பாடிய கருத்துரையாளர்களாகவே இருந்துள்ளார்கள்! மற்ற புலவர்களைக் காட்டிலும் அதிலும் சமணப் புலவர்களின் அறிவும், தெளிவும் அனுபவ வார்ப்புகளாகவே நமக்குப் பாடம் சொல்லித் தருகின்றன!

புலவர் விளம்பி நாகனாரின் "நான் மணிக்கடிகை" என்ற  பழம் பெரும் நூலுக்குக் கவிஞர் ஞா. மாணிக்க வாசகனின் பொருளோடு பல நூல்கள் புதிய கையடக்கப் பதிப்பாக வெளி வந்துள்ளன. (உமா பதிப்பகம்)

அதில் சில கருத்துக்கள் எத்தகைய அறிவார்ந்த 'பாடங்களை' மக்களுக்குப் போதிக்கிறது தெளிவுற!

'இவர்களுக்கெல்லாம் தூக்கம் இல்லை!' என்ற தலைப்பில் ஒரு பாட்டு,
கள்வம் என்பார்க்குத் துயில்இல்லை காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்குந் துயில்இல்லை - ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில்இல்லை அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில். (பாடல் 9)

தூக்கம் உடலுக்கும், உள்ளத்திற்கும் மிகவும் இன்றியமையாதது; பழையன (சோர்வு) நீங்குதலும், புதியன (புத்துணர்ச்சி) புகுதலும் உடல் நலத்திற்கு இன்றியமையாதவை.
ஆனால் மனிதர்கள் பற்பல நேரங்களில் தங்களை மறந்தவர்களாகவும், தங்கள் உடல் நலனைத் துறந்த வர்களாகவும் வாழ்ந்து கொண்டே, கடைசியில் வருந்துகிறார்கள்!
எல்லாம் முடியும் தருவாயில் வருந்துவதால் யாருக்கும் நன்மை இல்லை.

எதையும் மட்டுப்படுத்தி, 'சீரான அளவு; சிறந்த வாழ்வு' என்று வாழப் பழகிக் கொண்டேமேயானால், இத்தகைய 'தூக்கமின்மை' என்ற நோய் - (ஆம் இது ஒரு நோய் - எளிதில் விரட்ட முடியாத நோய் என்பது கோடிட்டுக் காட்டப்பட வேண்டியதாகும்). 'Insomnia' (இன்சோம்னியா) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மன அழுத்தமும், துயரமும் பெருகும் போதுகூட தூக்கத்தைத் துன்பம் விரட்டி விட்டு அவ்விடத்தினைச் 'சூன்யமாக்கி' பாதிக்கப்பட்டவர்களை பாடாய்ப் படுத்துவது உண்டே!

சில கருத்துக்கள் - சில பாடல்கள் - பகுத்தறிவு யுகத்திற்கு ஏற்க இயலாதவைகளாகவும்கூட உள்ளன!

"தள்ளுவன தள்ளி, கொள்ளுவன கொள்வோம் யாம்" என்பதுபோல படித்து மகிழலாம் - 'மெய்ப்பொருள்' காணலாம்.

'மூத்தவன் நான்  - எனவே எனக்குக் கீழ்ப் படிந்து நடக்க' என்று உத்தரவு போடும் நிலையில், வயதால் மூத்தால் போதுமா? என்று கேள்வி கேட்டு அதற்குரிய விடையையும் தருகிறார் விளம்பி நாகனார்!

திரிஅழல் காணின் தொழுப விறகின்
எரிஅழல் காணின் இகழ்ப - ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு (பாடல் 66)

- வயதில் மூத்ததால் மட்டும் ஒருவன் பெரியவனாகி விட மாட்டான். இளையவனானும் கற்றவனே பெரியோன் என்பதை, விளக்கில் எரிவதும் நெருப்புதான்; சுடரில் தெரிவதும் நெருப்புதான்; என்றாலும் வீட்டு விளக்கைத் தான் வணங்குவோம்.. விறகுத் தீயை அல்ல!

எனவே தீவட்டிகள் மூத்தமையைக் காட்டி கலகம் செய்யக் கூடாது!
-விடுதலை,22.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக