பக்கங்கள்

புதன், 11 ஜனவரி, 2017

வாழும் மனிதர்களும் வள்ளுவரின் கணக்கெடுப்பும்!


பிறக்கும் மனிதர்கள் என்றாவது ஒரு நாள் இறக்கும் மனிதர்களே!  இது நாள்வரை... எதிர் காலத்தில் எப்படியோ! ஆனால் சாகாமல் வாழும் மனிதர்கள் என்றும், செத்த மனிதர்கள் என்றும், மனித உருவில் உள்ள எலும்பும் தோலும் போர்த்த மனிதர்கள் என்றும், பழிப்பு நீங்கிய மனிதர்கள் என்றும், ஒரு அருமையான கணக்கெடுப்பை, மனிதர்களின் தரப் பிரிப்பை - சமுதாயப் பார்வையோடும், மனிதப் பண்புகளை முன்னிறுத்தியும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் படம் பிடித்துள்ளார் - ஈராயிரம் (2000) ஆண்டுகளுக்கு முன்பே என்பது வியக்கத்தக்கது அல்லவா?

உயிருடன் உள்ள மனிதர்களையெல்லாம் திருவள் ளுவர் வாழும் மனிதர்களாக, தன் கணக்கெடுப்பில் பார்க்க மறுக்கிறார்.

பின் யார்தான் வாழும் மனிதர் - அவரது கூரிய கண்ணோட்டத்தில்...?

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்   (குறள் 214)

ஒப்புரவு என்ற அதிகாரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு வெறும் இரக்கத்தை மாத்திரம் காட்டாமல், துன்பப்படுபவர் இடத்தில் தன்னையே நிறுத்தி, துன்பத்தை உணர்பவராக்கிக் கொண்டு உதவிடத் துடிக்கிறார்களே, அவர்களே உண்மையில், வாழும் மனிதர்கள் ஆவர்; அந்தப்படிக்கு இல்லாத உயிருடன் உலவும் ஏனையோர் செத்தவர்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள் என்கிறார்!

சமூக வாழ்வில், முந்திக் கொண்டு பிறரது துன்பத்தை தமக்கே ஏற்பட்ட துன்பமாகக் கருதி செயல்படுவோரைத் தான் வாழும் மனிதர் என்று அங்கீகரிக்கிறார் வள்ளுவர்!
இரக்கப்படுதலை ஆங்கிலத்தில் Sympathy என்று அழைக்கிறார்கள்; ஆனால் மேற்காட்டிய - துன்பத்தை உணர்ந்து துன்பப்பட்டவரின் இடத்தில் தன்னை நிறுத்தும் நிலைக்கு Empathy என்று கூறப்படுகிறது.

மனிதநேயத்தின் தலை சிறந்த கூறு இது! ஆனால் மனிதர்களிடையே வெகு அபூர்வமாகவே காணப்படு கிறது  என்பதால், மிகக் கோபமாக வள்ளுவர் மற்றவர் களை செத்தவர்கள் கணக்கில் சேருங்கள் என்கிறார்!

இன்னொரு குறளும்கூட இப்படி இறந்தவர்-செத்தவர் கணக்கில் - சேர்க்கப்பட வேண்டியவர்கள் பற்றிக் கூறுகிறது!

இறந்தார் இறந்தார்அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை                 (குறள் 310)

இதன் கருத்து: அளவு கடந்த கோபத்தைக் கொண்டவர்; உயிருடன் காணப்பட்டாலும் அவர் உண்மையில் செத்தாரைப் போன்றே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர்கள், துறந்தவர்க்கு (உண்மைத் துறவிகளுக்கு) ஒப்பாக உயர்ந்தவராகவே கருதப்படுவர்.

இந்தக் கணிப்புப்படி சினத்தின் உச்சிக்கு சென்றவர்களை வாழும் மனிதர்களின் பட்டியல் கணக்கெடுப்பில் வள்ளுவர் கொண்டுவர மறுக்கிறார்!

உடற்கூறுபடி பற்பல நேரங்களில் உச்சக் கட்ட சினம், அதிகமான ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, மூளை ரத்தக் குழாய் வெடிப்பு (Cerebral Hemorrhage) போன்றவைகளில் கூட கொண்டு போய் மனிதர்களை உண்மையாகவே செத்தவர்களாக்கி விடுகின்றதே அக்கண்ணோட்டத்தோடுகூட இக்குறளை நோக்கின் எவ்வளவு அருமையான மதிப்பீடு இது என்பது புரிகிறது!

மற்றொரு வகையில் தோற்றத்தால் மனிதர்கள்; ஆனால் உண்மையில் அத்தகையவர்கள் வாழும் மனிதர்கள் அல்லர். அல்லவே அல்லர் - வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி.

இது ஒரு தனி ரகம்!

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்பு தோல்போர்த்த உடம்பு   (குறள் 80)

இதன் பொருள்: அன்போடு பொருந்தி இயங்கும் உடம்புதான், உயிர் நிலை பெற்று விளங்கும் உடம் பாகும். அப்படிப்பட்ட அன்பு இல்லாதவரின் உடம்பு எலும்பின் மேல் போர்த்தப்பட்ட வெற்று உடம்பே யாகும்.

மற்றொரு வகையும் வள்ளுவரின் கணக்கெடுப்பில் வருகிறது!

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்                   (குறள் 240)

தம்முடைய வாழ்க்கையில் பழிப்பு நீங்க வாழ்பவரே, உயிரோடு வாழ்பவர் ஆவார்; புகழ் நீங்க வாழ்பவர் - அவர் உயிரோடு வாழ்ந்தாலும்கூட, உள்ளபடியே வாழாதவரே ஆவார்! என்பதே இக்குறள் கூறும் கருத்து.

எனவே, வள்ளுவரின் கணக்கெடுப்பின்படி மனிதர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் மிக மிகக் குறைவுதான்! இல்லையா...?!

 

- கி.வீரமணி

-விடுதலை,25.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக